உறவுகள் அனைவரும் மணமேடையில் சூழ்ந்திருக்க, அத்தனை பேரும் அட்சதை தூவி வாழ்த்த அமுதன் அருள்மொழியின் கழுத்தில் மஞ்சள் தாலியை கட்டி அவளை தன் மனைவியாக்கிக் கொள்ள, அந்த நேரம் உலகத்தில் உள்ள அனைவரை விடவும் மிக்க மகிழ்ச்சியோடு இருந்தது அந்த தம்பதிகள் தான் என்றே சொல்லலாம்,
அந்தக் காட்சியை சுடரொளியும் ரசித்து பார்த்தவள், அப்படியே எதிரே இருந்த மகிழ்வேந்தனையும் பார்த்தாள். ஆனால் அவன் அவளை கண்டால் தானே, அவன் பார்க்க வேண்டுமென்றே அழகாக பட்டுபுடவை கட்டியிருந்தாள். இருந்தும் அவன் அவளை கவனிக்க செய்யாதது மனதிற்கு வருத்தமாக இருந்தது.
இதோ இப்படி உறவினர்கள் வாழ்த்த மகியை திருமணம் செய்ய வேண்டுமென்று தானே அவள் விரும்பினாள். ஆனால் இப்போது அவளே அதை வேண்டாமென்று மறுத்துவிட்டாளே, இனி இப்படி தன் விருப்பம் நிறைவேற போவதில்லையோ என்பதை அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. திருமணத்தை வேண்டாமென்று சொன்னதும் அவனும் தான் அமைதியாக இருக்கிறானே, நினைத்து பார்த்தவளுக்கு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.
திருமணம் முடிந்து அனைவரும் மண்டபத்திலிருந்து வீட்டிற்கு வரவே மதியம் ஆகிவிட்டது. அடுத்தும் மணமக்களை கோவிலுக்கு அழைத்துச் செல்வது, இன்னும் பிற சடங்குகள் நடத்தி, நேராக அமுதன் வீட்டிற்குச் சென்று விளக்கேற்றி என்று அனைத்தையும் முடிக்க இரவு நேரமாகிவிட்டது.
முறைப்படி பெண் வீட்டில் தான் சாந்தி முகூர்த்த சடங்கை நடத்த வேண்டும், ஆனால் திருமணத்திற்காக விருந்தினர்கள் வந்து வீட்டில் கூட்டமாக இருந்ததால் மணமக்களுக்கு அது ஒருமாதிரியான சங்கடத்தை தரும் என்பதால், அமுதன் அருள்மொழிக்கு சாந்தி முகூர்த்தம் ஒரு ரெசார்ட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவர்களை ரெசார்ட்டில் கொண்டு விடுவதற்காக மகி, அறிவு, இலக்கியா மூவரும் உடன் சென்றிருந்தனர். சுடரையும் உடன் வருமாறு இலக்கியா அழைத்ததற்கு மகி மீது இருந்த கடுப்பால், “நான் வரவில்லை..” என்று இலக்கியாவிடம் கூறிவிட்டாள்.
அதனால் அவர்கள் மூவர் மட்டும் செல்ல, தங்கள் வீட்டிற்கு போகலாம் என்று சுடர் எழிலிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“இன்னைக்கு நைட் இங்க தான் இருக்கப் போறோம் சுடர்.. ஏகப்பட்ட வேலையிருக்கு, அதெல்லாம் பார்க்காம நம்ம மட்டும் கிளம்பிட முடியுமா?” என்றுக் கேட்கவும் அவளும் அமைதியாகிவிட்டாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சுபஸ்ரீயின் " ரிங்கா ரிங்கா ரோசஸ்..." - திகில் நிறைந்த பேய் தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
கதிரவனை அறையில் ஓய்வெடுக்க சொல்லியதால், அவருடம் அமர்ந்து பேசியப்படி இருந்தாள். ஒருப்பக்கம் பெண்கள் பேசியப்படி உணவு சமைக்கும் வேலையில் இருக்க, பாட்டி, புகழேந்தி, மாணிக்கம் மூவரும் வரவேற்பறையில் அமர்ந்தப்படி பேசிக் கொண்டிருந்தனர்.
“அக்கா ட்ராயிங் வரைஞ்சிருக்கேன் நல்லா இருக்கா பாரு..” என்று புவி வந்து அவளை வரவேற்பறைக்கு அழைத்துச் சென்ற போது பாட்டி பேசிக் கொண்டிருந்தார்.
“மாணிக்கம்.. இலக்கியாவுக்கும் அருளோட வயசு தான.. சீக்கிரம் அவளுக்கும் ஒரு மாப்பிள்ளையை பார்த்து கல்யாணத்தை முடிச்சுட்றதானப்பா..”
“இல்லம்மா.. அவ மேலப் படிக்க ஆசைப்பட்றா.. அறிவும் அவ விருப்பப்படி படிக்கட்டும்.. அப்புறம் வரன் பாருங்கன்னு சொன்னான்.. எனக்கும் அது சரியாப்பட்டுச்சு.. அதான் ஒரு வருஷம் கழிச்சு பார்க்க ஆரம்பிச்சா.. அவ படிப்பு முடியும் போது கல்யாணம் செய்ய சரியா வரும்மா..”
“அவ படிக்க ஆசைப்பட்டான்னா அப்படியே செய்ய வேண்டியது தான், அருளும் அப்படித்தானே சொல்லிக்கிட்டு இருந்தா.. ஆனா நம்ம தான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டோம்.. ஆனாலும் இப்போ எல்லாமே நல்லப்படியா முடிஞ்சிடுச்சுல்ல..
ஆனந்திக்கு இங்க தான் வைத்தியம் பார்ப்பதா இருக்கிறதால அருளும் மேலப் படிக்கிறதுல ஒன்னும் பிரச்சனையில்லை.. அமுதன் தம்பி அப்பப்போ லண்டன்க்கு போயிட்டு வந்தாலும் அருளும் ஆனந்தியும் இங்க தான் இருப்பாங்க.. அருளும் இலக்கியாவும் ஒன்னா தான் காலேஜ்ல சேரப் போறாங்களாமே அவ சொல்லிக்கிட்டிருந்தா..”
“ஆமாம்மா.. அதான் நானும் சரின்னு சொல்லிட்டேன்..”
“சரி இலக்கியா தான் படிக்கிறன்னு சொல்லிட்டா.. நம்ம அறிவுக்கு தான் உன்னோட தங்கச்சி பொண்ணு தயாரா இருக்காளே.. அவன் கல்யாணத்தையாவது இப்போ முடிச்சிடலாம் இல்ல..”
“இல்லம்மா அந்த பொண்ணுக்கும் இன்னும் ஒரு வருஷ படிப்பு இருக்கு.. அதுவுமில்லாம இலக்கியாவுக்கும் முடிஞ்சதும் நான் பண்ணிக்கிறேன்னு அறிவும் சொல்லிட்டான்.. அதான் இப்போதைக்கு வீட்ல நல்ல விஷயம் எதுவும் இல்ல..”
“ம்ம் அறிவு யோசிக்கிறதும் சரி தான்.. வீட்ல வயசுப் பொண்ணு இருக்கப்போ கல்யாணம் செஞ்சுக்க வேண்டாம்னு அவன் நினைக்கிறான்.. அதனால மெதுவாகவே பண்ண வேண்டியது தான்..” என்று சொல்லிவிட்டு நிறுத்தியவர், பின் அங்கே அமர்ந்திருந்த சுடரை பார்த்துக் கொண்டே,
“நம்ம அருள் கல்யாணம் முடிஞ்சதும் அடுத்து மகிக்கும் முடிச்சிடலாம் போல இருந்துச்சு.. ஆனா அது தான் இப்போ நடக்காதுன்னு ஆயிடுச்சே.. ஆனா அதுக்குன்னு அப்படியே விட்டுடுவோமா, எங்க மகியை கல்யாணம் செய்துக்க போற பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவ..
அந்த கொடுப்பினை சில பேருக்கு கிடைக்கலன்னா என்ன? கூடிய சீக்கிரம் ஒரு நல்ல பொண்ணா பார்த்து எங்க மகிக்கு கல்யாணம் பண்ணுவோம்.. இதைப்பத்தி மகிக்கிட்ட நான் ஏற்கனவே பேசிட்டேன்.. அவனும் உங்க இஷ்டம் பாட்டின்னு சொல்லிட்டான்..” என்று அவர் பேச, அதை கேட்டுக் கொண்டிருந்த சுடர் அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்.