(Reading time: 31 - 62 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 56 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

ழகிய மாலை நேரம் கண்களுக்கு வியப்பை கூட்டுவது போல தேவலோக ஜோடிகளாய் அமுதவாணனும் அருள்மொழியும் அழகாக அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் காண்பவர் அனைவரையும் கவர்ந்திழுத்தனர். மறுநாள் இன்னேரம் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக ஆகியிருப்பர். அதற்கான திருமண வரவேற்பு தான் இப்போது நடந்துக் கொண்டிருந்தது. முகம் முழுவதும் விரும்பியவளை மணமுடிக்கும் பெருமிதத்தோடு அமுதனும், பூரிப்பும் வெட்கமமுமாய் அருள்மொழியும் அருகருகே அமர்ந்திருந்தவர்கள் அந்த இனிமையான பொழுதை மிகவுமே விரும்பினர்.

வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் அடுத்தடுத்து வந்து வாழ்த்திய போதும் சரி, இப்படி நில்லுங்கள் அப்படி நில்லுங்கள் என்று புகைப்படம் எடுப்பவர் கட்டளைக்கு கட்டுப்பட்ட போதும் கூட அடுத்தவரின் அருகாமை தான் மற்றவருக்கு சோர்வை தராமல் இனிமை சேர்த்தது என்றே சொல்லலாம், அவர்களின் மனமகிழ்ச்சி அப்படியே முகத்தில் வெளிப்பட அதை பார்த்த அவர்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரின் மனதும் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்க, ஒருத்தி மட்டும் தவிப்புகளை குத்தகையெடுத்து தடுமாறிக் கொண்டிருந்தாள்.

மகிழ்வேந்தனுடனான திருமணம் வேண்டாமென்று சுடரொளி முடிவாக சொல்லிவிட்டாலும், அதற்காக அவள் எத்தனை வேதனைப்பட்டாள் என்பது அவளுக்கு தான் தெரியும்? இருந்தாலும் அவளின் அந்த முடிவை மகிழ் எப்படி எதிர்கொள்வான் என்ற எதிர்பார்ப்போடு இருந்தவளுக்கு அவன் அதற்கான எந்த ஒரு பிரதிபலிப்பையும் வெளிப்படுத்தாதது அவளது மனதை என்னவோ செய்தது.

கோபப்படுவான், கோபத்தை அவளிடம் காட்டுவான். வருத்தத்தோடு எதற்காக இப்படி செய்தாய்? திருமணத்திற்கு ஒத்துக் கொள் எனக் கெஞ்சுவான், உரிமையோடு நீ மட்டும் தான் என் மனைவி, வேறு யாரையும் நான் மணக்க மாட்டேன் என்பான், என்றெல்லாம் அவள் கற்பனைகளை ஓட விட்டிருக்க, இதோ இன்றுவரையிலுமே அவளை நேருக்கு நேராய் பார்க்காமல் பாராமுகம் காட்டுபவனை என்னவென்று சொல்வது?

அவள் வேண்டாமென்று சொன்னதும், அவனும் வேண்டாமென்று விட்டுவிட்டானா? அவ்வளவு தானா? எல்லாம் முடிந்ததா? இனி மகிழ் அவள் வாழ்க்கையில் இல்லையா? அப்போது அவள் நினைத்தது போல் அவன் அவளை காதலிக்கவே இல்லையா? அவள் நினைத்தது போல் அவன் அவள் மீது கொண்டது வெறும் இரக்கம் தானா?

இத்தனை நாள் உள்ளுக்குள் வைத்து புழுங்கிக் கொண்டிருந்தவளுக்கு, இன்று அவனை நேரில் பார்க்கும் போது அவளது மனக் குமுறல்கள் வெளிவர துடித்துக் கொண்டிருந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அதற்கு தான் இந்த திருமணத்திற்கு வர போவதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால் அருள் தான் “என்னோட கல்யாணத்துக்கு நீ வராம போயிடுவியா?” என்று உரிமையோடு அழைத்து வந்திருந்தாள். அதுமட்டுமில்லாமல் இலக்கியாவை போல் அவளையும் தன்னருகேயே நிறுத்தி வைத்திருந்தாள்.

எப்போதும் அருள்மொழியோடு இணக்கமாக முடியாது என்று தான் அவள் நினைத்திருந்தாள். ஆனால் அதுவே இப்போது நடந்திருக்கிறது. ஆனால் மகிழை விட்டு விலகவே கூடாது என்று எதையெதையொ செய்து வைத்தவள் இன்று அவளே அவனை வேண்டாமென்று சொல்லிவிட்டாள்.

மணமேடையிலே அமுதன், அருள்மொழிக்கு தனிமை கொடுத்துவிட்டு இலக்கியாவும் அவளும் ஒரு ஓரமாக நின்றிருந்த போது இலக்கியா ஏதோ பேசிக் கொண்டிருந்ததை கூட காதில் வாங்காமல் சுடரொளி இதைப்பற்றி தான் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தாள். அப்போது அமுதனிடம் ஏதோ கேட்பதற்காக மகிழ் மேடைக்கு வர,

ஒருதரமாவது தன்னை பார்க்க மாட்டானா? என்று அவள் ஏக்கமாக பார்க்க, அவனோ அவள் பக்கம் திரும்பவே இல்லை. வந்த வேலை முடிந்ததும் அவன் கீழே போய்விட, அதில் ஏமாற்றமடைந்தவளாக அவளும் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவளை தனியாக விட வேண்டாம் என்று மகி சொல்லியிருந்ததால் இலக்கியாவும் அருளிடம் சொல்லிவிட்டு அவளோடு சென்றுவிட்டாள்.

“மகி கொஞ்சம் ஓவரா தான் போறானோ.. சுடர் பாவம்..” என்பது போல் அருள் சிந்தித்துக் கொண்டிருந்தாள். அதை தொடர்ந்து மகி அன்று பேசியது அவளது ஞாபகத்திற்கு வந்தது.

அன்று சுடரொளி மகியோடு திருமணம் வேண்டாமென்று சொன்னதை புகழேந்தியும் பூங்கொடியும் வந்து சொன்ன போது வீட்டில் பாட்டி உட்பட அனைவரும் அதிர்ந்து தான் போனார்கள். அதிலும் புகழேந்தியோ,

“கதிர் கூட அந்தப் பொண்ணுக்கிட்ட சரியா நடந்துக்காத நேரத்துல, எழிலோடவும் அவ மூலமா நம்மக்கிட்டேயும் தான் அந்தப் பொண்ணு ஆதரவை தேடுச்சு.. ஆனா நம்ம எல்லோரும் ஏதோ ஒருவிதத்துல அந்த பொண்ணோட மனசை கஷ்டப்படுத்தியிருக்கோம்.. அதனால தான் இவ்வளவு நடந்தப்பிறகும் கூட மகியை வேண்டாம்னு சொல்லுது.. அதிலும் கடைசி நேரம் வீட்ல சேர்க்க மாட்டேனு சொல்லி நான் தான் கொஞ்சம் அதிகப்படியா நடந்துக்கிட்டேன்.. அப்பவே கதிரோட பொண்ணு தானேன்னு கொஞ்சம் யோசிச்சிருந்தா இப்போ ரெண்டு ஜோடிங்க கல்யாணத்தையும் அடுத்தடுத்து நடத்தியிருக்கலாம்..” என்று புலம்பினார்.

“அதுக்கு காரணம் நான் தானே அண்ணா.. நான் மட்டும் அன்னைக்கு பிரச்சனை செய்யாம இருந்தா நீங்க இந்த அளவுக்கு நடந்த மாட்டீங்களே.. சுடர் இப்படி ஒரு முடிவெடுக்க காரணம் நான் தான்..” என்று கலை ஒருப்பக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.