(Reading time: 17 - 33 minutes)

இவையனைத்தும் எனக்கு புது அனுபவம் ஆனாலும் அவளையன்றி யார் மேலும் தோன்றும் என எனக்குத் தோன்றவில்லை ரத்தன்.ஆட்சியாளனாய் நான் சில பொழுதுகள் நெறி தவறி இருந்தாலும் அல்லாஹ்வின் பிள்ளையாய் என் ஒழுக்த்தில் இருந்து தவறியதே இல்லை.”

நஸீம் இவையெல்லாம் நீ கூறித்தான் எனக்கு தெரிய வேண்டுமா?”

இருந்தும் உன் முகம் தெளிவில்லாமல் இருக்கிறதே!”

அப்படியில்லை நீ கூறுவதையெல்லாம் கிரகித்துக் கொள்ள அவகாசம் தேவைப்படுகிறது.இத்துனை பேசுபவன் நாங்கள் அங்கிருந்து கிளம்பிய நேரமாவது என்னிடம் விடயத்தை கூறியிருக்கலாம் அல்லவா?”

இப்போது இப்படி உன் முன் நிற்பேன் என்று நான் மட்டும் அறிந்திருந்தேனா என்ன!அதுமட்டுமல்லாது இப்போது மட்டும் அல்ல நானாக இதையெதையுமே கங்காவிடம் கூறப் போவதில்லை.”

என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நஸீம்!நீயும் குழம்பி என்னையும் குழப்பாதே!அவளிடம் இதயத்தில் உள்ளதை பற்றிக் கூறாமல் அவள் எப்படி உனைத் திருமணம் செய்ய ஒப்பு கொள்வாள்?”

அதற்காகத்தானே உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.நீ என்ன வேண்டுமானாலும் கூறி சம்மதம் வாங்கு ஆனால் என் காதலை அவள்தான் உணர வேண்டும் அது மட்டும் சர்வ நிச்சயம்

ஈசனே எனை நீர்தான் காப்பாற்ற வேண்டும்!!அரைக் கிழவனான பின் இதெல்லாம் தேவைதானா?சின்ன பெண்ணடா அவள்!”

ம்ம் எல்லாம் திருமணம் நடக்க வேண்டிய வயதுதான் நீ நான் கூறுவதை மட்டும் செய்தால் போதுமானது புரிந்ததா?”

என்ன கட்டளைகள் எல்லாம் பலமாய் இருக்கின்றன!!இருந்தாலும் உனை பழைய நஸீமாய் பார்ப்பதில் மனம் மிகுந்த உவகை கொள்கிறது!!இன்று போல் என்றும் இந்த புன்னகையோடு இருக்க வேண்டும்!ஆனாலும்…”

என்னவாயிற்று ரத்தன் எதுவாயினும் கூறு?”

இல்லை இதனால் ஏற்படப் போகும் பிரச்சனைகளை நினைத்து தான் கலங்குகிறேன் நஸீம்.பேரரசர் என்ன கூறுவார்?அரசவைப் பெருமக்கள்,உன் மதத்தின் மூத்தவர்கள்? நிச்சயமாய் பிரளயமே ஏற்படும் அல்லவா?”

உண்மை தான் ஆனால் எதையும் சமாளித்துவிடுவேன் என்று நம்புகிறேன் ரத்தன்.என் காதலை இந்த தருணத்தில் மறைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.வேண்டுமானால் நீ கூறியபடியே இது ஒரு பழிவாங்கும் நிக்காஹ்வாகவே இருந்துவிட்டு போகட்டும் குழப்பங்கள் குறைந்தபின் மற்றவற்றை பார்த்துக் கொள்ளலாம்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "காணாய் கண்ணே..." - காதல் & சரித்திரம் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

பலே!பலே!எதற்கும் துணிந்து தான் இருக்கிறாய்!உன் மனதையே கொள்ளை கொண்டிருக்கிறாள் என்றால் நிச்சயம் அவள் திறமையானவள் தான்”,என்று கூறி அவனை ஆரத் தழுவிக் கொண்டான்.

அடுத்ததாய் சிவகங்காவதியிடம் பேசுவதற்கு தயாரானான் ரத்தன்.அவளிடம் உண்மையை மறைக்க வேண்டுமே என்று வருத்தம் இருந்தாலும் அவளின் நலனுக்கும் அதுதான் சரி என்பதால் அப்படியே பேசுவதாய் முடிவெடுத்தான்.

சிவகங்காவதி

அண்ணா வாருங்கள்,என்ன இந்த நேரத்தில் வந்திருக்கிறீர்கள்!”

அது அது என்னவென்றால்..நான் உன்னிடம்..”

என்னிடம் எதற்காக இப்படி ஒரு தயக்கம் எதுவாயினும் கூறுங்கள்

கூறித்தான் ஆக வேண்டும்.என் எதிர்காலம் என் ராஜ்ஜியம் அனைத்தும் இப்போது உன் கையில் தான் இருக்கிறது சிவகங்காவதி!”

அண்ணா!!ஏன் இத்துனை பெரிய வார்த்தை கூறுகிறீர்கள் அப்படி என்னவாயிற்று?”

நஸீம்..அவன் வந்திருப்பது நட்பு பாராட்டுவதற்காக அல்ல என் நாட்டை அடிபணிய வைப்பதற்காக

என்ன??!!!”

ஆம் என்னாலும் முதலில் ஏற்றுக் கொள் முடியவில்லை தான் ஆனால் அவனின் தீவிரம் நீயறியாததது அல்லவே!”

அண்ணா என்னால் இதை சற்றும் ஏற்க முடிவில்லை.இஷான் நிச்சயமாய் இப்படி செய்பவர் கிடையாது!!”

ரத்தனுக்கே ஒரு நொடி ஆச்சரியம் தாளவில்லை.”என்ன மாதிரியான நம்பிக்கை இது இத்தனை உறுதியாய் அவனைப் பற்றி கூறுகிறாளே!!”

இல்லை அண்ணா உறுதியாய் கூறுகிறேன் எவ்வித காரணமுமின்றி அவர் இப்படி செய்பவர் இல்லை.”

உண்மைதான் சிவகங்காவதி,அவனுக்கு நான் உனை இங்கு அழைத்து வந்த கோபம் இன்னும் கட்டுக்கடங்காமல் இருக்கிறது.அதற்காகவே இந்தமுடிவு.ஆனால் அதிலும் ஒரு சலுகை தருகிறானாம்.”

சலுகையா என்ன அது??”

அது..அவன் கேட்பதை கொடுத்துவிட்டால் ராஜ்ஜியத்தை எனக்கே கொடுத்து விடுவானாம்.”

ராஜ்ஜியத்திற்கு இணையான பொருள் உங்களிடம் இருந்தால் கொடுத்து விடுங்களேன் அண்ணா!இதில் நான் என்ன உதவ வேண்டும்?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.