(Reading time: 17 - 33 minutes)

அவன் கேட்பது என் தங்கையான உன்னை அவனின் மனைவியாக்க வேண்டுமென்று!”

அண்ணா!??!”

மன்னித்து விடு சிவகங்காவதி என்னால் தான் உனக்கு இந்த புது துயரம்.நிச்சயம் இதை நானே எதிர்பார்க்கவில்லை.ஆனால் அவன் முடிவில் உறுதியாய் இருக்கிறான்.ராஜ்ஜியத்தை பார்ப்பதா இல்லை உன்னைப் பார்ப்பதா என்று புரியாமல் குழம்பி நிற்கிறேன் நான்!!”

சில நிமிட மௌனமே அவளிடத்தில் பதிலாய் கிடைத்திருக்க ரத்தனுக்கோ அவளின் நிலைமை புரிந்தாலும் அவளுக்கான நல்ல வாழ்க்கை நஸீமால் தான் அமையும் என்று ஏனோ உள்மனம் முரண்டியதால்  அவன் கூறிய அனைத்தையும் செய்தான்.

பின்பு ஒரு தெளிவான முகத்தோடு அங்கிருந்து எழுந்தவள்,”நான் இதற்கு சம்மதிக்கிறேன் அண்ணா!”

“!!!”

முழு மனதோடு தான் கூறுகிறேன் இந்த திருமணத்தில் எனக்கு மனப் பூர்வமான சம்மதம்,சென்று உங்கள் நண்பரிடம் கூறுங்கள்.ஆக வேண்டிய வேலைகளைப் பார்க்க செல்லுங்கள்.”

என்னை மன்னிப்பாயா சிவகங்காவதி?!!”

பெரிய வார்த்தைகள் எல்லாம் வேண்டாம், இப்படி ஒரு தமையனுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்!கலக்கம் கொள்ளாதீர்கள் அண்ணா,அனைத்தையும் கடந்து இதுவே ஈசனின் ஆணை எனில் யாரும் அதை மாற்ற இயலாது.எதற்கும் துணிந்து தான் என் அரண்மனையை விட்டு வெளியேறினேன் அப்படியிருக்க இது ஒன்றும் என் மன தைரியத்தை சோதித்து விடாது அண்ணா நிம்மதியாய் செல்லுங்கள்!”

அங்கிருந்து வெளியில் வந்தவனுக்கோ மனம் பாடாய்பட்டது.அவள் இரண்டொரு சொட்டு கண்ணீர் வடித்திருந்தாலும் கூட ஏதேனும் சமாதானம் கூறியிருக்கலாம்.ஆனால் தனக்காக என்றவுடன் எவ்வித மறு சிந்தனையும் இன்றி தன் வாழ்வையே மாற்றப்போகும் ஒரு விடயத்தை இத்தனை திடமாய் எந்த பெண்ணால் ஏற்றுக் கொண்டிருக்க முடியும்.

நஸீமிடம் சென்று நடந்ததை கூறியவன் தன் குற்றவுணர்ச்சியால் மனம் நொந்து போயிருந்தான்.

என்னால் தாங்கவே முடியவில்லை நஸீம்!!எனக்காக அவள் இத்துனை பெரிய முடிவெடுத்திருப்பது!!நீ கூறும்போது கூட நான் நம்பவில்லை ஆனால் அவள் திருமணத்திற்கு சம்மதம் கூறிய நொடி ஒருநிமிடமேனும் உன் புரிதலை எண்ணி வியக்கத் தோன்றியது உண்மை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் " ரிங்கா ரிங்கா ரோசஸ்..." - திகில் நிறைந்த பேய் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

இருந்தும் இவையெல்லாம் தேவைதானா?!உன் பெயரையும் கெடுத்துக் கொண்டிருக்கிறாய் இதன் பின் அவளால் எப்படி உன்னோடு நல்ல முறையில் உறவாட முடியும்?எனக்கும் தேவையற்ற மன வருத்தம்!!”

ரத்தன், காலம் அனைத்திற்கும் பதில் கூறும்.என்னால் உனக்கு அளிக்கக் கூடிய ஒரு உறுதி என்னவெனில் எக்காரணம் கொண்டும் அவள் மனம் நோகும்படி நான் நடந்து கொள்ளமாட்டேன்.அதே நேரம் இப்படி இந்த திருமணம் நடப்பது தான் அவளுக்கும் பாதுகாப்பை அளிக்கும்.புரிந்து கொள் நண்பா!”

அந்த ஒரு காரணத்திற்காகவே நானும் அமைதிகாக்கிறேன் நஸீம். எல்லாம் இறைவனின் கட்டளைப்படி நடக்கிறது நடக்கட்டும்.இரு மதத்தின் கடவுள்களும் உங்கள் இருவருக்கும் துணையிருந்து வழி நடத்தட்டும் அது ஒன்றே இப்போது இருக்கும் என் ஒரே வேண்டுதல்.”

மறுதினமே திருமணம் என்று முடிவானது.ரத்தன் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுஙளையும் விரைந்து கவனிக்கலானான்.சிவகங்காவதிக்குத் தேவையான அனைத்தும் தயார் செய்யப்பட்டன.அரண்மனையே விழாக்கோலம் பூண்டிருக்க பின் மாலைப் பொழுதில் திருமண சடங்குகள் ஆரம்பமாகின.

நஸீமின் வீரர்களுக்கோ ஆச்சரியமும் அதீர்ச்சியும் ஒரு சேர ஏற்பட்டிருந்தன.அவர்களுக்குள் எழுந்த சலசலப்பு நஸீமின் காதுகளுக்கும் வராமல் இல்லை.இப்படி ஒவ்வொருவரின் மனநிலையும் ஒரு நிலையில் இருக்க இருமதங்களின் முறையிலும் திருமணம்  ஏற்பாடு செய்திருந்தான் ரத்தன்.

சிவகங்காவதி மணமேடைக்கு வரும் முன் அவளை சந்தித்த ரத்தனுக்கு கண்கள் அதுவாய் கண்ணீரை கொணர்ந்தது.

சிவகங்காவதி!!வாழ்வில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த தமையனை மன்னித்து விடு. உனக்கு ஒரு வாக்களிக்கிறேன் இன்றிலிருந்து உன் வாழ்வில் ஏற்படும் அனைத்து சுக துக்கங்களுக்கும் நான் பொறுப்பு.எப்போது என்ன வேண்டுமானாலும் உன் பிறந்த அகமும் உன் தமையனும் இங்கிருக்கிறோம் என்பதை மறந்து விடாதே!

அதே நேரம் உன் நன்மையையன்றி இந்த திருமணத்தில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை சிவகங்காவதி நஸீம் உனை நிச்சயம் நன்றாகப் பார்த்துக் கொள்வான்!”

கசந்த புன்னகையொன்றை பதிலளித்தவள்,”யாருடைய சுக துக்கங்களுக்கும் மற்றவர் பொறுப்பேற்க முடியாது அண்ணா! நல்லதும் தீயதும் அவரவர் கர்மாவின் வழியே நமை வந்தடையும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.