(Reading time: 14 - 28 minutes)

ன்னும் நிச்சயதார்த்தம் நடைபெறுவதற்கு இடையில் ஒருநாளே இருந்ததால், அஜய் உடனே விபாகரனிடம் பேச எண்ணி அவன் வீட்டுக்கு வந்திருந்தான்.

முக்கிய வேலையை முடித்துவிட்டு அப்படியே வீட்டுக்கு கிளம்பிவிடுவேன் என்று அஜயிடம் சொல்லிவிட்டு தான் விபாகரன் அலுவலகத்திலிருந்து கிளம்பியிருந்தான். அதனால் விஷயத்தை அலுவலகத்தில் பேசுவதை விட வீட்டில் வைத்து பேசுவதே நல்லது என்று நினைத்தே அவன் இப்போது வீட்டுக்கு வந்தான்.

அவன் வந்த நேரம் மஞ்சுளாவும் அர்ச்சனாவும் கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் அவன் வரவும், “என்ன அஜய் இந்த நேரம் வீட்டுக்கு வந்திருக்க ஏதாச்சும் விஷயமா?” என்று அர்ச்சனா கேட்டாள்.

“இல்ல அண்ணி.. விபாகரன் சார்க்கிட்ட கொஞ்சம் முக்கியமா பேசணும் அதான்..” என்று அவன் சொல்லவும்,

ஏதாவது அலுவலகம் சம்பந்தமான ரகசியம் என்றால், இப்படி வீட்டில் வைத்து தான் பேசுவார்கள் என்பதால், “சரி  அண்ணன் மேல தான் இருக்கு.. நீ போய் பேசு, நாங்க ரெண்டுப்பேரும் கோவிலுக்கு போயிட்டு வரோம்.. ம்ம் டீ போட்டு கொடுத்திட்டு போகவா..” என்றுக் கேட்டாள்.

“இல்ல அண்ணி வேண்டாம்.. ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு போயிட்டு தான் இங்க வரேன்.. அம்மா டீ போட்டு கொடுத்தாங்க அண்ணி..”

“சரி அப்போ நாங்க கிளம்பறோம்..” என்று சொல்லிவிட்டு கிளம்ப, அவர்கள் இல்லாததும் அவனுக்கு நல்லதாகவே பட்டது.

நேராக விபாகரன் அறைக்குச் செல்லவும், மடிக் கணினியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தவன் இவனை பார்த்ததும், “அடடே அஜய் வா வா.. என்ன இப்போ கொஞ்ச நேரம் முன்ன தானே ஆஃபிஸ்ல பார்த்துக்கிட்டோம்.. இப்போ வீட்டுக்கு வந்திருக்க, சும்மா வந்தியா? இல்ல ஏதாச்சும் முக்கியமா?”

“முக்கியமான விஷயம் தான் சார்.. ஆனா அஃபிஷியல் இல்ல.. பர்சனல், அதுக்கு உங்க உதவி எனக்கு தேவைப்படுது..”

“பர்சனலா.. அதுக்கு என்னோட உதவியா? நீ இப்படி எதுவும் கேட்டதில்லையே, சொல்லு உனக்கு நான் எந்தவிதத்துல உதவணும், சொன்னா கண்டிப்பா செய்றேன்..”

“நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன்.. அவளை கல்யாணம் செய்துக்கணும்.. அதுக்கு தான் உங்க உதவி தேவை..”

“அஜய் நீ காதலிக்க கூட செய்றீயா? எப்போ பார்த்தாலும் வேலையிலேயே கவனமா இருப்பீயா? நீ அதை தான் கல்யாணம் செய்துக்க போறீயோன்னு நினைச்சேன்..” என்று சொல்லி விபாகரன் சிரித்தான்.

விபாகரனும் அப்படித்தான், எப்போதும் ஏதாவது தீவிரமாக சிந்தித்தப்படியே இருப்பான். யாரிடமும் கலகலப்பாக பேசி அஜய் பார்த்ததேயில்லை. ஏன் அவன் தாய், தங்கையிடம் கூட அவன் அளந்து பேசி தான் பார்த்திருக்கிறான். ஆனால் இதெல்லாம் அவன் சுதர்ஷன் க்ரூப் ஆப் கம்பெனியின் சி.ஈ.ஓ வாக பொறுப்பேற்று கொண்ட பின்பு தான், அதற்கு முன் இப்படித்தான் ஏதாவது நகைச்சுவையாக பேசுவான். ஒருநிமிடம் அந்த விபாகரன் அஜயின் கண்களுக்குள் வந்து போனான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் " உன்னையே தொடர்வேன் நானே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“நான் படிக்கும் போதே அந்த பொண்ணை காதலிச்சேன்.. ஆனா அவக்கிட்ட சொல்லல.. அப்போ எனக்கு அவளை கல்யாணம் செய்ற தகுதியில்லைன்னு நினைச்சேன்.. இப்போ ரொம்ப வருஷம் கழிச்சு அவளை பார்த்தேன், இப்போ என்னோட காதலை சொல்ல ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு, அதுவும் இல்லாம உடனே நாங்க கல்யாணம் செஞ்சுக்க வேண்டிய அவசியம் இப்போ இருக்கு..”

“சரி பொண்ணு யாரு?” என்று விபாகரன் கேட்க,

“சுஜனா..” என்று அஜய் கூறினான். விபாவிற்கு இந்த சுஜனா யாரென்று தெரியவில்லை,

அதனால், “சுஜனாவா யாரது? எனக்கு தெரியுமா?” என்றுக் கேட்க,

“சுஜனா.. சாத்விக் கல்யாணம் செய்றதா இருக்க பொண்ணு.. அதாவது நாம பார்டனர்ஷிப் வச்சிருக்கோமே வீரராகவன் அவரோட பொண்ணு..” என்று அஜய் விளக்கமாக சொல்லவும்,

“வாட்..” என்று விபாகரன் அதிர்ச்சியோடு எழுந்தான்.

“என்ன சொல்ற அஜய்.. ஏற்கனவே கல்யாணம் பேசி வச்சிருக்க பொண்ணை கல்யாணம் செய்ய உனக்கு என்னோட உதவி வேணுமா? நெவர்.. இப்படி ஒரு காரியத்துக்கு என்னோட உதவி உனக்கு கிடைக்காது..” என்று அவன் சொல்லவும் இப்போது அஜய் அதிர்ச்சியானான்.

“தப்பு அஜய்.. அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஏற்பாடு செஞ்சது தெரிஞ்சும் நீ உன்னோட காதலை சொல்லி, அவளை கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்றது தப்பு.. அந்த பொண்ணோட அப்பா, அம்மா அவ கல்யாணத்தை எவ்வளவு ஆசையா எதிர்பார்த்து எல்லாம் ஏற்பாடும் செஞ்சுருப்பாங்க.. நாளைக்கு மகளோட நிச்சயதார்த்தத்தை நினைச்சு எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாங்க.. அவங்க கனவை அழிக்கிறது போல ஒரு செயலை செய்ய சொன்னா என்னால முடியாது..”

“சுஜனாவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல.. அவக்கிட்ட விருப்பத்தை கேக்காம தான் இப்படி ஒரு முடிவெடுத்துருக்காங்க..”

“அது பெத்தவங்க தன்னோட மகள் மேல வைக்கிற நம்பிக்கை, அது கூட உங்களுக்கு புரியலையா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.