(Reading time: 9 - 17 minutes)

முதலில் டெல்லியில் இவர்களைப் பின் தொடர்ந்த வண்டியில் அவர்கள் வரவில்லை. அங்கே அங்கே அவர்கள் வாகனத்தை மாற்றுவதை உணர்ந்தான். அந்த செல்வத்தை ப்ரித்வியின் ஆள் வேவு பார்க்கையில், அவன் இவர்கள் இருக்கும் பக்கம் வரவில்லை. இவர்கள் இருக்கும் ஊரில் இருந்தாலும், அவன் செல்லும் இடங்கள் வேறாக இருந்தது. ஆனால் க்ரிதிகாவைக் குறிவைத்து ஏதோ ஒரு சம்பவமும் நடக்கிறது. இதை எப்படிக் கையாள என்று யோசித்துக் கொண்டு இருந்தான் ப்ரித்வி. அந்த செல்வம் நேரடியாக மாட்டாமல், இந்தப் பிரச்சினை ஓயாது என ஏற்கனவே இன்ஸ்பெக்டர் தெரிவித்து இருப்பதால் அவனை வெளிக் கொண்டு வர என்ன செய்வது என்று மனதிற்குள் திட்டம் போட ஆரம்பித்தான்.

மறுநாள் காலை அருகில் இருக்கும் குல்தாரா என்ற இடத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்து மவுண்ட் அபு செல்ல வேண்டும் என்று ப்ரித்வி கூறவும், எல்லோரும் ஓ எனக் கத்தினர்.

ப்ரித்வி மாணவன் ஒருவனிடம்,

“என்னபா மவுண்ட் அபுவிற்கு இத்தனை வரவேற்பு ?” என்றுக் கேட்க,

“பாஸ், புல்லா டெசெர்ட்டா சுத்திப் பார்த்து போரடிச்சுடுச்சு. கொஞ்சம் பசுமையா கண்ணுக்குக் குளிர்ச்சியா மலையைப் பார்க்காலமேன்னு தான் இந்த வரவேற்பு| என்றான்.

“உங்க சந்தோஷத்தைப் பார்த்தா மலையைப் பார்க்கப் போற சந்தோஷம் மட்டும் இருக்கிற மாதிரி தெரியலையே?

“பின்ன என்ன பாஸ்? நாம போன இடம் எல்லாம் டூரிஸ்ட் வந்தாங்க. இருந்தாலும் எல்லாம் நம்மள மாதிரி ப்ராஜெக்ட் டூர் அப்படி இல்லைனா கொஞ்சம் மிடில் ஏஜ் பெர்சன்ஸ் வராங்க. அதே ஹில் ஸ்டேஷன்னா நாங்க என்ஜாய் பண்ற மாதிரி வருவாங்களே. அதான் இந்தக் குத்தாட்டம்.” எனவும், ப்ரித்வியும் சிரித்தான்.

கடைசி வருட மாணவர்கள் என்பதால் அவர்களிடத்தில் ஒரு மெச்சுரிட்டி இருந்ததை ப்ரித்வியால் உணர முடிந்தது. கல்லூரிப் பருவத்தினருக்கு உள்ள துள்ளல் இருந்தாலும், அது அடாவடியாக இல்லாமல் ரசிக்கும் படியாகவே இருந்தது. ப்ரித்வி அவர்களைச் சரியாகவே புரிந்து கொண்டான்.

மாணவர்கள் எல்லோரும் மறுநாள் செல்லப் போகும் ஹில் ஸ்டேஷன் பற்றி எதிர்பார்ப்புடன் அன்றைய இரவைக் கழிக்க, கிருத்திகாவோ அவளின் கனவுகளோடு கழித்தாள்.

ரானா பிரதாப்சிங் படையில் சேர்ந்த இளவரசன் ப்ரித்விராஜ் , அவரின் படைவீரர்களின் திறமையைப் பார்த்து வியந்து இருந்தான். படை அணிவகுப்பும் பார்வைக்கே விருந்தாய் இருந்தது. இத்தனைக்கும் அந்த அணிவகுப்பு போர்க்களத்துக்குச் செல்லவில்லை. இடம் பெயர்கிறார்கள் அவ்வளவே. அதற்கே அத்தனை ஒழுங்கும், கட்டுப் பாடும் அந்த அணிவகுப்பில் இருந்தது.

பிகானரில் பார்த்த ப்ரித்விராஜின் செயல்களில் வீரத்தையும், தைரியத்தையும் கண்ட இளவரசி கிரண் தேவி அவளின் நெடுநாள் விருப்பமான நவ்ரோஜ் மேளாவிற்கு செல்லும் விருப்பத்தை பிரித்விராஜிடம் வெளிப்படுத்தினாள்.

இத்தனைக்கும் பிரித்விராஜிடம் இதுவரை ஒரு வார்த்தைக் கூடப் பேசியதில்லை. ஆனாலும் அவரிடத்தில் கேட்கலாம் என்ற உணர்வு வந்ததற்கான காரணம் அவளே அறியவில்லை. 

ப்ரித்விராஜ்ஜும் இதை எதிர்பார்க்கவில்லை. ஏன் இளவரசி தன்னிடம் பேசுவார்கள் என்ற எண்ணம் கூட அவனுக்கு இல்லை. இளவரசியின் வீரமும், தைரியமும் அவனைப் பெரிதும் கவர்ந்தது.

அவளிடத்தில் பேச ஆவல் கொண்டாலும், பண்பாட்டின் காரணமாக அதை ஒதுக்கினான். அத்தோடு ராணாவின் மகள் என்னும் பதவியும் அவனைத் தள்ளி நிறுத்தியது.

ஆனால் கிரண் தேவிக்கோ அந்தத் தளை எதுவும் இல்லை. எத்தனை துணிச்சல் மிகுந்தவள் என்றாலும், மற்றவர் தன்னைப் பார்த்துக் குறை கூறும்படி நடக்க மாட்டாள் கிரண் தேவி. ராணாவிடத்தில் உள்ள பிரியம் காரணமாக தன்னால் அவருக்கு எந்த அபவாதமும் ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருப்பாள்.

இந்த அணிவகுப்பில் ராணி மட்டுமே புரவியில் செல்லும் பெண். மற்ற பெண்கள் எல்லோரும் பல்லாக்கில் செல்கின்றனர். சிறு சிறு குழுக்களாக செல்லும் படை வீரர்களோடு கிரண் தேவியும் கலந்து கொண்டாள். ஆனால் யாரிடமும் அவள் நேரடியாகப் பேசியதில்லை. அவர்களும் அவளிடத்தில் நேரடியாகப் பேசியதில்லை.

இளவரசன் திகைத்து நிற்கவும்,

“ஏன் வீரரே ? அந்த விழாவிற்குச் செல்ல முடியாதா?” என்றாள் இளவரசி.

“அந்த விழாவைப் பற்றித் தாங்கள் எத்தனை தூரம் அறிந்து இருக்கிறீர்கள் தேவி?”

“முகாலய அரசர் நடத்தும் விழா. அதிலும் குறிப்பாக பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விழா. அட அதனால் தான் கலந்து கொள்ள விரும்புகிறேன் வீரரே”

“ஆனால் மொகலாய அரசருக்கும் நம் மகராஜ்ஜிற்கும் இடையில் இருக்கும் பகை தாங்கள் அறியாதது அல்ல. தாங்கள் செல்லும் பட்சத்தில் அங்கே தங்களுக்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்படுமாயின், அது மகாராஜ்ஜிற்கு பெரிய நெருக்கடி ஏற்படுத்தும். தங்களைக் காக்க வீரர்களும் உடன் வர முடியாத நிலையில், மகாராஜ் அங்கே செல்ல அனுமதிக்க மாட்டார் இளவரசி”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.