கடுமையாக கேட்டார் ராணா.
“இல்லை தந்தையே. அக்பரின் வழி அதுவாக இருக்கும்போது நாமும் அதைப் பின்பற்றினால் என்ன தவறு?”
“அது நம் வழி அல்ல மகனே. சுத்த வீரன் என்பவன் எதிரியின் முதுகில் குத்த மாட்டான். நீ வீரன் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றுக் கூறவும் அவரின் நம்பிக்கையில் தன் தவறு உணர்ந்து,
“நான் இப்போது என்ன செய்ய வேண்டும் தந்தையே?” என்றுக் கேட்டான் அமர்சிங்.
“இந்தப் பெண்ணை அவள் கணவனிடத்தில் பத்திரமாக ஒப்படைக்கவேண்டியது உன் பொறுப்பு” எனவும்,
“அப்படியே செய்கிறேன்” என்று வண்டி ஓட்டுபவர்களை திரும்பச் சொன்னான்.
மகாராணா அந்தப் பெண்ணிடத்தில் வந்து
“தவறிற்கு மன்னிக்க வேண்டும் பெண்ணே. உன்னை பத்திரமாக உன் கணவரிடத்தில் சேர்த்து விடுவான் என் மகன். உன் கணவரை போர்க் காலத்தில் சந்திக்கிறோம் என்று சொல்“ என்று வணங்கவும், அந்தப் பெண்ணும் ராணாவை வணங்கி,
“இப்படி ஒரு அரசனை நான் இதுவரைக் கண்டது இல்லை. ஒரு அரசனிடம் கைதியாக மாட்டிய பெண்ணை அவள் கணவனிடத்தில் சேர்ப்பது முதல் முறையாகக் காணுகிறேன். மிக்க நன்றி சகோதரரே” என்றுக் கூறி விடைபெற்றாள்.
அதுவரை அங்கே நடந்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கிரண் தேவி,
“எத்தனை நல்ல உள்ளம் தங்களுக்குக் காகூ? ஆனால் இதே அன்பை ஏன் நம் ராஜபுத்த்ரியப் பெண்களிடம் மட்டும் காட்டுவதில்லை?” என்றுக் குற்றம் சுமத்தினாள்.
“என்ன சொல்கிறாய் தேவி? நான் நம் மக்களின் சுதந்திரம் முன்னிட்டு தான் என் காலத்தை முழுதுமாக போரில் கழிக்கிறேன். அதைக் குறைக் கூறுகிறாயே?”
“நான் நம் மக்கள் என்று சொல்லவில்லையே. நம் பெண்கள் என்றுதானே குறிப்பிட்டேன்”
“நீ சொல்வது விளங்கவில்லையம்மா”
“காகூ, நம் ராஜபுத்திரப் பெண்கள் இருபதினாயிரம் பேர் உடன்கட்டை ஏறுவதைத் தாங்கள் தடுக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது”
அதைக் கேட்ட ராணாவும் பெருமூச்சுடன்,
“ஆம் தேவி. எனக்கும் அதன் வருத்தம் மிகவும் இருக்கிறது. ஆனால் நம் மக்கள் அதை மத நம்பிக்கைக்குள் வைத்து விட்டார்கள். என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டது.”