(Reading time: 13 - 25 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

இவர்கள் ராணியிடம் பேசிவிட்டுத் திரும்புவதற்குள், இவர்கள் விவரம் வதந்தியாய் பரவ, காமினியும், கிரண் தேவியும் வெளியே வரவும் , காவலர்கள் நிறுத்திப் பேசினார்.

“அடேயப்பா.. வந்த ஒரு நாளுக்குள், ராணியின் நேரிடைத் தலையீட்டில் வேலை செய்யுமளவிற்கு இருக்கிறீர்கள். என்ன மாய்மாலம் செய்தீர்களோ?” என்று ஒரு காவலன் சற்று இளக்காரமாகக் கூறவும், ராணிக் கிரண் தேவிக்கு கோபம் வந்து விட்டது.

“என்ன வீரரே? பேச்செல்லாம் பலமாக உள்ளது?” என்றுக் கேட்டாள் கிரண் தேவி .

“உண்மையாத்தானே சொன்னேன்” என்று பதில் கூற,

“என்ன உண்மையைக் கண்டீர்? பெண்களை ஏளனம் செய்யும் உண்மையத் தான் கண்டீரோ?”

“ஏளனம் யார் செய்தார்கள்? நேற்று வரை யார் என்றே தெரியாத ஒரு பெண், இன்றைக்கு மகாராணி அழைத்துச் செல்லும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறீர்கள் என்றால் என்னவோ என்ற கேள்வி வரத்தானே செய்யும்?”

“ஓஹோ. ஒரே நாளில் இத்தகைய வளர்ச்சி என்றால், அங்கே திறமை என்ற ஒன்று இருப்பதாகத் தான் பொருள். உங்களை மாதிரி சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைப் போல் இருந்தால் காலம் முழுதும் வாயிலைக் காக்கும் பணி மட்டும் தான் செய்ய முடியும். “

“ஓவியத் திறமை எல்லாம் அரண்மனையில் அமர்ந்து கொண்டு காலம் கழிப்பவர்களுக்குத தான் சரி வரும். எங்களைப் போல் போரில் பங்கு கொண்டு வீரத்தைக் காட்டும் திறமைகளுக்கு ஏது அங்கீகாரம்?”

“உங்களின் போர்த் திறமை அங்கீகரிக்கப் பட வேண்டுமென்றால் எந்த இடத்தில் மதிப்போ அங்கே போய்ச் சேர வேண்டும். அதை

விட்டுத் தவறான இடத்தில் சேர்ந்தால் இப்படித்தான்”

கிரண் தேவி தவறான இடம்  என்றுக் கூறும் போதே காமினி அவளின் கையைப் பிடித்து இழுக்கவே, சற்றுத் தணிந்த குரலிலே தான் பேசினாள்.

ஆனாலும் அந்த வீரன் விடாமல் “தவறான இடம் என்று எப்படிச் சொல்கிறாய்? வெற்றி வாய்ப்பு எங்கே இருக்கிறதோ அங்கே தானே வீரன் சேர்வான்?” என்றான்.

“வெற்றி வாய்ப்பை விட, தோல்வி அடைந்தாலும் உங்கள் திறமை மதிக்கப்படுமாயின் அங்கே சென்று சேர்வது தான் புத்தி உடையவர்கள் செய்யும் காரியம்”

அவள் பேச்சைக் கேட்டு அந்த வீரன் திகைத்து “யார் இவள்? என்ன சொல்ல வருகிறாள்?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.