வேண்டிய பரிசோதனைகளை செய்து விட்டு அவருடன் வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான். அவர்கள் இருவரும் வந்து அமர்ந்ததும் உள்ளே இருந்து ஆளுக்கு ஒரு தட்டில் முளைகட்டிய பயறும் ஒரு டம்பளரில் ஆரஞ்சு ஜூஸ்ஸும் எடுத்து கொண்டு வந்தாள் தமிழ்செல்வி.
"ஆஹா போறபோக்க பார்த்தா நான் இங்க வர தேவையே இல்லை போலவே" என்றான் அசோக் அவன் அருகே வைத்த உணவை பார்த்து.
"ஏண்டா?" என்றார் விசாலம்.
"அப்பறம் என்ன பாட்டி, உங்க செல்விக்கு உணவே மருந்துனு நல்லா தெரிஞ்சுருக்கு. அப்பறம் டாக்டர்க்கு என்ன வேலை இங்க?" என்றான் அசோக் சின்ன சிரிப்புடன் செல்வியை பார்த்தபடி.
"நீங்க டாக்டர்ரா வர வேணாம் டாக்டர். பாட்டிக்கு பேரனா வரலாமே" என்றாள் செல்வியும் அவனுக்கு பதில் சொல்லும் விதமாக.
"நல்லா பேசறீங்க ஆனா என்ன ஒன்னு மட்டும் எனக்கு பிடிக்கவே இல்ல" என அசோக் சொல்ல, என்ன என்பது போல பார்த்தனர் விசாலமும் தமிழ்செல்வியும்.
"டாக்டர் டாக்டர்னு கூப்பிடறிங்களா...எனக்கு ஏதோ வயசான மாதிரி ஒரு பீல்... தயவு செஞ்சு அசோக்னு கூப்பிடுங்க...இல்லை பேரு நல்லா இல்லைனு தோணுச்சுனா டேய் இங்க வாடா அங்க போடானு கூட சொல்லுங்க. இது என் வீடு மாதிரி...இல்லை இல்ல என் வீடே தான். இங்க டாக்டர்னு சொன்னா எனக்கு ஏதோ ஹாஸ்பிடல் உள்ள இருக்கற மாதிரியே இருக்கு" அசோக் சொல்ல, இது தானா என்பது போல பார்த்தனர் தமிழ்செல்வி, விசாலம் இருவரும்.
"சரி நான் முயற்சி பண்றேன்" என்றவள், விசாலத்திற்க்கு காலில் பூச எண்ணெய் எடுக்க உள்ளே செல்ல, "என்னடா பயங்கரமா ஏதேதோ கண்டிஷன் எல்லாம் போடற...என்ன விஷயம்... சைட் அடிக்கிறியா படவா என் முன்னாடியே?" என அவனை குறுகுறுவென பார்த்தபடி விசாலம் கேட்க, "நீங்க வேற பாட்டி, இந்த 90ஸ் கிட்டா இருந்து ஒரு பொண்ணும் செட் ஆகல. நமக்கு இதெல்லாம் செட்டாகாது" என சோகமாக சொன்னான் அசோக்.
இவர்கள் பேசி கொண்டிருக்கையிலேயே வந்தான் பரத்.
"ஹலோ அசோக் அண்ணா" என்றபடி வந்தவன் அசோக்கின் அருகே அமர்ந்தான்.
"வாடா பரத். எங்கடா ஆளையே பாக்க முடியறது இல்லை. நீ காலேஜ் போறியா இல்லை ஐடி கம்பனிக்கு வேலைக்கு போறியா? எப்போ பாரு போன் இல்லைனா லேப்டாப்னு இருக்கேனு பாட்டி சொல்ராங்க" அசோக் பரத்தின் தோளில் கை போட்டவாறே கேட்டான்.
"இல்லை அண்ணா. ப்ராஜெக்ட் ஒர்க் இருக்குல்ல. கடைசி செமஸ்டர் ஆச்சே...அதான் பாட்டி சும்மா சொல்றாங்க" பரத் சொல்ல, "போன்ல எந்த ப்ராஜெக்ட் ஒர்க் பண்ற?? என்னடா கேர்ள் பிரெண்டா?" என்றான் அசோக் பரத்தின் காதில் கிசுகிசுப்பாக.