(Reading time: 15 - 29 minutes)
Nenchil thunivirunthaal

நிகழ்ந்த உண்மைகள் அனைத்தையும் போட்டு உடைத்தார் அவர். அனைத்து மெய்பாடுகளும் வெளிச்சத்திற்கு வந்துவிட, பெண்ணவளின் வாழ்க்கை மட்டும் இருளில் மூழ்கி மரணித்தும் போனது. பேச வார்த்தைகளின்றி தவித்துப் போன மௌனத்தினால் ஆட்கொள்ளப்பட்டார் தர்மா.

"நான் என்னை நியாயப்படுத்திக்க விரும்பலை. நான் செய்ததுத் தப்புத்தான்! நீ எனக்கு என்னத் தண்டனைக் கொடுத்தாலும் நான் ஏற்றுக்கிறேன்!" கரம் கூப்பி வேண்டியவரின் சொற்கள் ஓசையிழந்தே அவர் செவிகளை அடைந்தன. தன்னை மெல்ல ஆசுவாசப்படுத்தியவராய் இராகவனின் அருகே மண்டியிட்டவர், அவரது இரு கன்னங்களைத் தாங்கியவராய்,

"எ...என்கிட்ட பொய் சொ...சொல்லாதீங்க! இது பொய் தானே...உங்களால....எ...எனக்குத் துரோகம் பண்ண முடியாது! எனக்குத் தெரியும்!" என்று அவர் வெளியிட்ட நம்பிக்கை இராகவனாரை அசைத்துப் பார்த்தது ஓர் நொடியில்! உறைந்துப் போனவராய் தன் மனைவியின் முகத்தினை ஏறிட,

"உண்மையை சொல்லுங்க...இதெல்லாம் பொய் தானே!ஏன் பேச மாட்றீங்க!" என்று கதறினார் தர்மா. குற்ற உணர்வு மேலோங்க, சிரம் தாழ்ந்து அமர்ந்திருந்தவரின் வாடிய முகம் அவர் நம்பிக்கையை சுக்கலாய் உடைத்தது.

"எப்படி உங்களுக்கு மனசு வந்தது? ஒரு பொண்ணோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டீங்களே! அவ நம்ம குடும்பத்தை நம்பித்தான் இருக்கான்னு எப்படி மறந்தீங்க? அன்னிக்கு நானும், என் ஆதியும் உங்க கண்ணுக்குத் தெரியலையா? எவ்வளவு பெரிய துரோகத்தை பண்ணிருக்கீங்க..?" ஆயிரம் ஈட்டிகள் ஒரு சேர பாய்ந்த வேதனை ஆகினும், அப்பெண் கதறி அழுதது எல்லாம் தன் காதலுக்கு உரியவரின் மார்பில் தான்! அங்கு அவரது அக்காதல் அனைத்தினையும் வென்று நின்றது.

வேகவேகமாய் நகர்ந்த நாட்கள் வேறுச் சில திருப்புமுனைகளை ஏற்படுத்தவல்லது என்பதனை எவருமே எதிர்நோக்கவில்லை.

"இந்த கௌரிக்கு என்னத் தான் ஆச்சோ!" கறுவிய அகிலாண்டேஷ்வரியை விரக்தியோடு பார்த்தார் தர்மா.

"என்னாச்சு அத்தை?" அவள் குரலில் கசப்புத் தெரிந்தது.

"திடீரென அவ சொந்த ஊருக்கு போக போறேன்னு அழுறா! அங்கே அவளுக்குன்னு யாருமே இல்லை. அவளை நாம தானே சின்ன வயசுல இருந்து வளர்த்துட்டு இருக்கோம். காலாக்காலத்துல அவளுக்கு ஒரு கல்யாணங்காட்சியை பண்ணி வைக்கலாம்னு பார்த்தா, ஏதோ அநாதைக் கழுதை மாதிரி அவ அம்மா ஊருக்குப் போகப் போறேன் நேற்று இராத்திரி ஒரே அழ! என்னத்தான் ஆச்சோ! ஒரு இரண்டு, மூணு மாசமா அவ சரியே இல்லை."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.