அவள் பெற்றோர் முன்னிலையில் அவர்கள் இருவரும் காதல் தம்பதிகள் என்று காட்டிக்கொள்ள முயல்கிறான் என புரிந்து விட ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து முறைத்து வைத்தாள்.
அதே நேரம் மணிபாரதி அவள் தலையை வாஞ்சையுடன் வருடியவர்
“ரொம்ப சந்தோசமா இருக்குடா மணுக்கண்ணா... என் பொண்ணு இன்னுமே சின்ன பொண்ணுனுதான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். இப்போ அவளே ஒரு குழந்தையை சுமந்து கொண்டு இருக்கிறாள் என்று எண்ணும் பொழுது ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது டா...
நான் தாத்தாவாக போகிறேன். உன் அம்மா பாட்டி ஆகப்போகிறாள்...” என்று முகத்தில் சந்தோஷத்துடனும் பூரிப்புடனும் அவள் தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுக்க அவளும் அருகில் நின்றிருந்தவரை இடையோடு கட்டிக் கொண்டாள்.
அதேநேரம் வாணி குடுகுடுவென்று சமையலறைக்கு ஓடிச் சென்று கையில் கிடைத்த ஸ்வீட் ஐ எடுத்து கொண்டு வந்து அவளுக்கு ஊட்டி விட அதைக் கண்டவள்
“மா... எதுக்கு இந்த ஸ்வீட் எல்லாம். இந்த அலப்பறை எல்லாம் தேவையே இல்லை. “ என்று தன் அன்னையை முறைக்க ஆரம்பித்தவள் உடனே தன் உதட்டை மடித்து கடித்துக் கொண்டாள் சிறு வெட்கத்துடன்...
இதுவரை தன் அன்னை இடம் நேரடியாக பேசியிராதவள் இப்பொழுது தன்னை மறந்து இயல்பாக தன் அன்னையிடம் பேசியிருக்க அதை கண்டு வாணிக்கு மிகுந்த மகிழ்ச்சி ஆகிப்போனது.
ஆனந்தத்தில் அவள் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிய அவளும் தன் மகளை கட்டிக் கொண்டு தன் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டார்.
“சாரி டி... உன் மனசை ரொம்ப கஷ்டபடுத்தி இருந்தால் என்னை மன்னிச்சுக்கோ. இப்படியெல்லாம் என்னிடம் பேசாமல் இருக்காதே. ரொம்ப வலிக்குது... “ என்று உணர்ச்சி பொங்க தழுதழுக்க மணுவிற்கு அப்பொழுதுதான் அவள் தவறு புரிந்தது.
எய்தவன் இருக்க அம்பை தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்? அந்த துஷ்டன் மீது இருக்கும் கோபத்தில் தன் அன்னையிடம் பாராமுகமாக இருந்தது தவறு என்று அப்பொழுது புரிந்தது.
உடனே தன் கோபம் எல்லாம் மறந்து தன் அன்னையிடம் இயல்பாக பேச ஆரம்பித்தாள்.
அதன்பின் இருவரும் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு பின் விடைபெற்று கிளம்பினர்.
காரில் முன்னால் அமர்ந்து இருந்த பெண்ணவளின் மனம் கொஞ்சம் அமைதி அடைந்து இருந்தது.