“வாவ்... இந்தச் சிக்கன் சூப்பரா டிஃபரண்ட் ஆ இருக்கு அத்தை. இந்த மாதிரி டேஸ்ட்ல நான் சாப்பிட்டதே இல்லை. செமையா இருக்கு...” என்று பாராட்டியவாறு தன் தட்டில் இருந்த சிக்கனை ருசித்து சாப்பிட்டான் துஷ்யந்த்.
அவனின் பாராட்டை கேட்டதும் உள்ளம் குளிர்ந்து போனார் வாணி. ஒரே மகளான தன் செல்ல மகளை மணமுடித்து அவள் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைத்ததில் இருந்து வாணிக்கும் மணிபாரதிக்கும் அந்த வீடு வெறிச்சென்று ஆகிப்போனது.
பெண்ணை பெற்றவர்கள் அனைவருக்கும் வரும் அதே ஏக்கம் தான் அவர்களுக்கும். அதுவும் அவர்கள் மகளின் திருமணம் குழப்பத்தில் நடந்திருக்க தன் மகள் கோபத்தை எல்லாம் விட்டுவிட்டு புகுந்த வீட்டில் ஒன்றி விட்டாளா என்ற அந்த கவலை வேறு.
அதனால் வாரம் ஒரு முறை இருவருமே கிளம்பிச் சென்று தன் மகளை பார்த்து வருவார்கள். துஷ்யந்த் மற்றும் மணிகர்ணிகா இருவருமே தங்கள் பணிகளில் பிசியாக இருப்பதால் மணுவின் பிறந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போக முடியவில்லை...
நேரம் இருக்கும் பொழுது துஷ்யந்த் அவனாகவே கட்டாயப்படுத்தி மணுவை அவள் பிறந்த வீட்டிற்கு அழைத்து வருவான். அப்படித்தான் இன்றும் வந்திருந்தனர்.
திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்திருக்க, அதிசயமாக தன் வீட்டிற்கு வந்திருந்த மாப்பிள்ளையை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டார் வாணி.
அதைக்கண்ட மணுவோ உர்ர்ர் என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தன் தந்தையுடன் கதை அடித்துக் கொண்டிருந்தாள். மதிய உணவின் பொழுதும் அதுவே நடந்தது.
எப்பொழுதும் வாய் அடிக்கும் மணு அமைதியாக இருக்க, அவள் பங்கையும் சேர்த்து வைத்து கதை அடித்துக் கொண்டிருந்தான் துஷ்யந்த். அதுவும் தன் மாமனார் மாமியாரிடம் ரொம்பவும் நெருங்கியவன் போல கதை பேசிக் கொண்டிருக்க பொண்ணுக்கோ காதில் புகை வந்தது.
“என்னமா நடிக்கிறான் பார்..இப்படியெல்லாம் பேசி பேசி தான் எல்லாரையும் கவர் பண்ணிடுவான் போல. என்னமோ ப்ரைம் மினிஸ்டரே வீட்டுக்கு வந்துவிட்டதை போல இவர்களும் வாயெல்லாம் பல்லாக அவனை விழுந்து விழுந்து உபசரிக்கின்றனர். “ என்று உள்ளுக்குள் திட்டிக் கொண்டாள் மணு.
அதே கடுப்போடு அங்கு நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். மதிய உணவில் வாணியின் சமையலை துஷ்யந்த் புகழ்ந்து பாராட்ட இன்னும் கடுப்பானது.
அவள் மனதை அறியாத துஷ்யந்த் விடாமல்
“இது என்ன ரெசிபி அத்தை? அம்மா கிட்ட சொல்லி இதேமாதிரி செய்ய சொல்லணும்.” என்றான் ஆர்வத்துடன்.