தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 01 - முகில் தினகரன்
காலை நேர வெயில் லேசாய் உறைக்கத் துவங்கியிருந்தது. சூரியன் தன் இதமான கதிர்களை வாபஸ் பெற்றுக் கொண்டு, உஷ்ணக் கதிர்களை சப்ளை செய்து கொண்டிருந்தான்.
மணி பதினொன்று.
“அப்பப்பா...இன்னேரத்துக்கே என்னமா வேகுது?...”கழுத்துப் பகுதியை வியர்வை “நச...நச”வென்று அரிக்க, காலரைத் தூக்கி விட்டபடியே வந்தான் முரளி. பெயரில் மட்டுமல்ல...தோற்றத்திலும் நடிகர் முரளியை ஞாபகப்படுத்துவான்.
“என்ன தம்பி வேக்காட்டுக்கு இதமா...எலுமிச்சம் பழ சர்பத் போட்டுத் தரவா?” கடை பெஞ்சில் வந்தமர்ந்த முரளியிடம் கடைக்கார்ர் விஸ்வநாதன் கேட்டார். அது வியாபார நோக்கமே தவிர, அவன்பால் கொண்ட அன்போ, அக்கறையோ...அல்ல என்பது முரளிக்கும் தெரியும்.
“இருங்கண்ணே....தனசேகரன் வர்றேன்!னு சொல்லியிருக்கான் அவன் வந்ததும் ரெண்டு பேருக்குமா சேர்த்துப் போட்டுக் குடுங்க!” என்றான் முரளி. தோழன் இல்லாமல் தான் மட்டும் பருக மனமில்லாத உண்மை சிநேகிதன்.
தெருவில் சைக்கிள்காரனொருவன், “தெழுவு...தெழுவு” என்று கூவிக் கொண்டு போக,
“ஆஹா...வேக்காட்டுக்கு தெழுவு குடிச்சா சும்மா பிச்சுக்குமே?...இந்த தனசேகரனை வேற காணோம்...அவனும் இருந்தா ஆளுக்கு ரெண்டு கிளாஸ் தெழுவு குடிச்சிருக்கலாம்”என்றான் முரளி.
“அட ஏன் தம்பி?....சைக்கிள்காரனுக கொண்டு வர்ற தெழுவெல்லாம் நல்ல தெழுவில்லை தம்பி!...எல்லாம் கழிவு!....நல்லதையெல்லாம் வடிச்சு தனியா ஊத்தி வெச்சுக்கிட்டு...வடிச்ச வண்டல தண்ணிய ஊத்தி அதைத்தான் சைக்கிள்காரனுகளுக்குக் குடுப்பான் பனை மரக் குத்தகைக்காரன்!...அதைக் குடிச்சா காசு குடுத்து நோயை வாங்கிக்கற மாதிரி!” என்றான் கடைக்கார விஸ்வநாதன்.
“அடக் கஷ்டகாலமே?....இதிலும் கலப்படமா?...கடவுளே...போகிற போக்கைப் பார்த்தால் எதிர்காலத்தில் இயற்கையான பண்டங்கள் எதுவுமே இருக்காது போலிருக்கே?” என்று முரளி சொல்ல,
“உண்மை தம்பி!...நீங்க மட்டும் அந்த தெழுவை...ரெண்டு டம்ளர் குடிச்சீங்க...வயித்துப் போக்கு நிச்சயம்!...நாலு டம்ளர் குடிச்சீங்க...ஆஸ்பத்திரில அட்மிட் ஆயிடுவீங்க?..அப்புறம் குளுக்கோஸ் தண்ணி ஏத்தினால்தான் உங்களால் எழுந்து நடக்கவே முடியும்!” சொல்லி விட்டுச் சிரித்தான் கடைக்காரன்.
அப்போது “பட...பட”வென வந்து நின்றது அந்த பைக்.
“டேய்...முரளி!...ரொம்ப நேரமாச்சா வந்து?” கேட்டவாறே பைக்கிலிருந்து இறங்கி, அதை