தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 03 - முகில் தினகரன்
கிழக்குச் சீமை பண்ணையார் வீட்டு மெயின் கேட்டிற்குள் அந்த பைக் நுழைய, ஆங்காங்கே வேலை செய்து கொண்டிருந்த வேலையாட்களெல்லாம் தலையைத் தூக்கிப் பார்த்து விட்டு, “மாப்பிள்ளைப் பையன்!...மாப்பிள்ளைப் பையன்” என்று சன்னக் குரலில் தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள்.
“ஆஹா...பையன் செவப்பா...லட்சணமா...சினிமாக்காரன் மாதிரியல்ல இருக்கான்?” ஒரு மூத்த பெண்மணி தனசேகரின் காது படவே சொன்னாள்.
அந்த வேலையாட்களில் ஒருவன் மின்னல் வேகத்தில் வீட்டிற்குள் பாய்ந்து, மாப்பிள்ளை வந்திருக்கும் தகவலை உள்ளே அறிவித்து விட,
பண்ணையார் ராமலிங்க பூபதியும், அவர் மனைவி சொர்ணமும் பரபரப்பாகி, வாசலுக்கே வந்து மாப்பிள்ளையை வரவேற்றனர். “வாங்க மாப்பிள்ளை..வாங்க தம்பி!” என்று கை கூப்பி வணக்கம் தெரிவித்தவர்களுக்கு பதில் வணக்கம் தெரிவித்தபடியே உள்ளே சென்றனர் தனசேகரும், முரளியும்.
பின்னால் சென்ற முரளியை எல்லோரும் புருவங்களை நெரித்துக் கொண்டு பார்த்தனர்.
கூடத்திலிருந்த உயர் ரக தேக்கு நாற்காலியில் அவர்களை அமர வைத்து விட்டு, நடு கூடத்தில் தொங்கிக் கொண்டிருந்த உஞ்சலில் அமர்ந்தார் ராமலிங்க பூபதி. நடிகர் வினுசக்கரவர்த்திக்கு பெரிய மீசை வைத்தது போலிருந்தார்.
அப்போது உள்ளேயிருந்த வந்த அந்த மூதாட்டியிடம், “ஆத்தா...நம்ம மல்லிகாவைக் கட்டிக்கப் போற .மாப்பிள்ளை வந்திருக்காரு பாரு!” என்ற ராமலிங்க பூபதி, தனசேகர் பக்கம் திரும்பி, “என்னைப் பெத்த ஆத்தா!...மாப்பிள்ளை...வளமா வாழ்ந்த மகராசி!” என்றார்.
எழுந்து சென்று அவள் காலைத் தொட்டு வணங்கினான் தனசேகர்.
புல்லரித்துப் போனார் ராமலிங்க பூபதி.
அதுவரையில் அமைதியாயிருந்த சொர்ணம், “கை கழுவுங்க தம்பி...டிபன் சாப்பிடலாம்” என்றாள்.
“அய்யய்ய...டிபனெல்லாம் காலைல எட்டரைக்கே ஆச்சுங்க அத்தை” என்றான் தனசேகர்.
“அப்ப...மதிய சாப்பாடு தயார் பண்ணிடு” என்றார் ராமலிங்க பூபதி.
“அதெல்லாம் வேண்டாம் மாமா!...நாங்க உடனே கிளம்பணும்...இன்னும் நிறைய இடத்துக்குப் போகணும்!...உண்மையில் நாங்க இப்ப எதுக்கு இங்க வந்தோம்!ன்னா....” என்று தனசேகர் தயங்க,
“அட...கூச்சப்படாம சொல்லுங்க தம்பி” என்றாள் பெண்ணின் தாயார்.
தொடர்ந்து தனசேகர் அதே நிலையில் இருக்க,