நித்தேஷ் திரும்பிப் பார்த்தான். கயல்விழி அவனை விட்டு வேக நடையுடன் சென்றுக் கொண்டிருந்தாள். இப்படி ஏதாவது நடக்கும் என்று தான் உண்மையை சொல்லாமல் தயங்கிக் கொண்டு இருந்தான். எனினும் குற சொல்ல முடியாது! இப்போது தோளில் இருந்த பாரம் காணாமல் போய் விட்டது. கயலின் கோபம் காரணமாக மனசுக்குள் பாரம் இருந்தாலும், இதுவும் நல்லதுக்கு தான் என்பதை அவனால் உணர முடிந்தது.
வேதா நட்புடன் நித்தேஷின் தோளில் தட்டினாள்.
“கயலுக்கு தெரிஞ்சது நல்லது தான் ராக்கி. நீங்க இதையே நினைச்சு வருத்தப் பட்டுட்டு இருக்காதீங்க. இனி என்ன செய்றதுன்னு யோசிங்க!” அவன் மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்ததையே தான் வேதாவும் சொன்னாள்.
அவளின் அறிவுரையை ஏற்றுக் கொண்டதன் அறிகுறியாக தலையை ஆட்டினான் நித்தேஷ்.
“உங்க பிரென்ட் முன்னாடி வாயே திறக்காம இருந்துட்டீங்க வேதா!” புகாராக சொல்லாமல் சாதாரணமாக சொன்னான் நித்தேஷ்.
அத்தோடு நிறுத்தாமல் அவன் புன்னகை வேறு புரியவும் வேதா சந்தேகம் மின்ன பார்த்தாள்.
அவள் மனசுக்குள் ஓடும் எண்ணம் நித்தேஷுக்கும் புரிந்தது.
“கயலுக்கு விஷயம் தெரிஞ்சது தலை மேல இருந்த மலையை இறக்கி வச்சது மாதிரி இருக்கு வேதா. யோசிச்சா ஒண்ணுமே இல்லாத விஷயமா கூட தோணுது.” அவளுக்கு விளக்கம் கொடுத்தான் நிதேஷ்.
வேதா முகத்திலும் சின்ன புன்னகை தோன்றியது.
“இவ்வளவு நாள் பயந்து நடுங்கினது என்ன, இப்போ பேசுற வசனம் என்ன! நீங்க பிழைச்சுப்பீங்க ராக்கி. சீக்கிரமா அவளை சமாதானப் படுத்துங்க. அவளும் பசங்களும் எங்கேயோ போயிட்டாங்க. நானும் போறேன்.”