தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 15 - பிந்து வினோத்
15. என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்...
பாரதியின் மனதில் ஒரு பெரிய பட்டி மன்றமே நடந்துக் கொண்டிருந்தது... வழக்கம் போல் அன்றும் கல்லூரிக்குச் செல்ல பேருந்து வரும் நேரத்திற்கு முன்பே தயாராகி விட்டாள்... ஆனால் அவளின் மனதில் இருந்த ஒரு குழப்பம் அவளை கிளம்ப விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது... விவேக் அவளை சந்தித்துப் பேசியப் போது அவள் எழுதிய கதைகள் பற்றி கேட்டதால், அவனுக்காக அவற்றை எடுத்து அழகாக அடுக்கி ஒரு ஃபைலில் போட்டு வைத்திருந்தாள்... ஆனால் அந்த ஃபைலை இன்று எடுத்துச் செல்வதா இல்லையா என்பதில் தான் குழப்பம்... விவேக் கல்லூரியில் வாங்கி கொள்வதாக சொல்லவில்லை... அவளாகவே அவனை தேடிச் சென்று கொடுக்கவும் அவள் விரும்பவில்லை... அதற்காக வேண்டாம் என்று ஃபைலை விடுதியில் விட்டுச் செல்லவும் அவள் விரும்பவில்லை. என்ன முடிவு எடுப்பது என்றுப் புரியாது தடுமாறியவள்... நேரம் சென்றுக் கொண்டே இருப்பதை உணர்ந்தவளாக ஃபைலை கையில் எடுத்துக் கொண்டாள்...
கொடுப்பது கொடுக்காததை மெதுவாக முடிவு செய்துக் கொள்ளலாம்...!!!
அவசரமாக ஒரு பிளாஸ்டிக் கவர் கண்டுப்பிடித்து ஃபைலை அதன் உள்ளே போட்டு, கஷ்டப்பட்டு தன் கைப்பைக்குள் திணித்தாள் பாரதி. கையில் வைத்திருந்தால் பவித்ரா கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமே!!!!!
அன்றைய நாள் முழுவதுமே பாரதிக்கு சற்றே அமைதியில்லாமல் கழிந்தது. கல்லூரியில் தேர்வு நேரம் என்பதால் பிரச்சனை இல்லாமல் சென்றது. பவித்ராவிற்கும் அன்று சூப்பர்வைசிங் வேலை இல்லை என்பதால் தோழிகள் இருவரும் பொதுவான வேலைகளிலும் பேச்சிலுமாக அன்றைய நாளை கழித்தனர். தேர்வு முடிந்து கிளம்பும் நேரம் வரவும், இருவரும் ஒன்றாகவே கிளம்பத் தயாராகினர். பாரதியின் குழப்பம் ஒவ்வொரு வினாடியும் அதிகமாகி கொண்டே இருந்தது...
பாரதியின் குழப்பத்தை தீர்த்து வைப்பவள் போல் மதுமதி ஸ்டாஃப் ரூம் வாசலில் வந்து நின்றாள். அனுமதி பெற்று பாரதி, பவித்ரா இருவரின் அருகில் வந்தவள்,
"குட் ஈவ்னிங் மேம்... குட் ஈவ்னிங் மேம்.." என்று இருவருக்கும் வணக்கம் சொன்னாள்.