மறுநாள் காலை பொழுது விடிந்தது. வழக்கம் போலவே சக்தி விடியற்காலையிலேயே கண்விழித்தாள், அவளுக்கு வழக்கம்தானே, அவ்வாறே உறக்கம் கலைந்து எழுந்து பார்க்க அவளை பாதி அணைத்தவாறு ஜீவா உறங்கிக் கொண்டிருந்தான். அதைப் பற்றி சிறிதும் கவலையின்றி இயல்பாக அவனை தள்ளி படுக்க வைத்துவிட்டு எழுந்து குளிக்கச் சென்றாள். தனது உடைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு அறைக்கதவை திறந்துக் கொண்டு வெளியேற வீடே உறங்கிக் கொண்டிருந்தது. வந்திருந்த சொந்தங்கள் ஹாலில் உறங்கிக் கொண்டிருந்தார்கள், அவர்களைத் தொல்லை செய்யாமல் நிதானமாக நடை நடந்து பின் வாசலுக்குச் சென்றாள், கொல்லையில் கிணறு இருக்கவே பக்கத்தில் விறகடுப்பு இருந்தது, சற்று தள்ளி பாத்ரூம் கட்டியிருந்தார்கள். இதே போலதான் அவளது பாட்டி வீடும் இருந்தது, தந்தை வீடும் இருந்தபடியால் எதுவும் அவளுக்கு புதிதாக தெரியவில்லை.
கிணற்றில் இருந்து நீர் இறைத்து அதை ஒரு பெரிய அண்டாவில் நிரப்பி அதை விறகடுப்பில் வைத்து விறகடுப்பை பற்ற வைத்துவிட்டு சுற்றி முற்றி வேடிக்கைப் பார்த்தாள். வீட்டின் பின் புறம் கொல்லையில் ஒரு பக்கம் மாட்டு கொட்டகை இருந்தது, இன்னொரு பக்கம் வாழை மரம், தென்னை மரம், பூக்கள் பூக்கும்செடிகள் என வரிசையாக இருந்தது. அவற்றிற்கெல்லாம் தண்ணீர் இறைத்து ஊற்றினாள். மாடுகளுக்கு இவள் புதிது ஆனால், மாடுகளை பார்த்துக் கொள்வதில் சக்தி கெட்டிக்காரி, சட்டென மாடுகளுக்கு தண்ணீர் ஊற்றி வைக்கோல் வைத்து அவைகளின் கழுத்தில் முதுகில் வருடிவிட அதில் மாடுகளுக்கும் அவளை பிடித்துவிட்டது, புதிய நபர் என்ற அச்சமின்றி சக்தியுடன் பழகியது. அவளும் அதற்கு வைக்கும் தீவனத்தை வைத்து விட்டு பூச்செடிகளிடம் வந்தாள்
அந்நேரம் பூத்திருந்த பூக்களைக்கண்டு மென்மையாக புன்னகை புரிந்தவள் அவற்றை பறித்து ஒரு இடத்தில் பத்திரமாக வைத்தாள், அப்படியே முன் பக்கமாக செல்லும்வழி தெரியவும் அந்த வழியாக முன் பக்கம் வந்தவள் வாசல் கூட்டி பெருக்கி தண்ணீர் தெளித்து கோலமிட்டு முடித்தாள்.
அதற்குள் தண்ணீர் சூடு ஆனதும் உடனே குளிக்கச் சென்றாள், குளித்து முடித்து அவளது உடைகளை அவளே துவைத்து ஆறவைத்து காயவைத்து விட்டு பறித்து வைத்த பூக்களை அள்ளி எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைய எதிர்பட்டார் சாந்தி.
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.