”பரவாயில்லை இந்த விசயம் நமக்குள்ளயே இருக்கட்டும், தப்பித்தவறி கூட இதை கொம்பன்கிட்டயோ யார்கிட்டயோ சொல்லிடாத, அப்புறம் கொம்பன் வீட்டுக்குப் போய் பணம் பத்திரமா வந்து சேர்ந்துடுச்சின்னு தகவல் சொல்லிடு பாவம் அவங்க வருத்தத்துல இருப்பாங்க”
”சரி சரி அப்படியே செய்றேன் கொம்பன்கிட்ட சொல்லிட்டுப் போறேன்”
”ஒண்ணும் வேணாம் அவனே கோபத்தில இருக்கான் இப்ப நீ போனா வேலைக்கு ஆகாது நீ அப்படி போ நான் இப்படி போறேன்”
”இப்படி போனா கிணத்தடிதானே வரும்”
”ஆமாம் நான் கொம்பனை பார்க்கப் போறேன்“
”அவனே கோபத்தில இருக்கான் கோபத்தில உன்னை ஏதாவது செய்துடப்போறான் போகாத”
”அவன் செய்யனும்னுதான் போறேன் நீ பயப்படாத” என சொல்லிவிட்டு பணத்தை தந்தையிடம் தந்துவிட்டு கொம்பனை காணச் சென்றாள்.
அவளின் செயலைக்கண்டு விக்கித்துப் போன கணக்குபிள்ளையோ தலையை சொறிந்தபடியே கொம்பனின் அப்பா அம்மாவை கண்டு விசயம் சொல்ல சென்றான்.
கிணற்றடியில் உக்கிரமாக அமர்ந்திருந்த கொம்பனைப் பார்த்ததும் காவேரிக்கு அச்சம் எழுந்தது, ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவன் முன் கெத்தாக சென்று நின்றாள், அவள் வரவும் சற்றும் யோசிக்காமல் அவளை பிடித்து கிணற்றில் தள்ள முயன்றான், அதற்கு அவள் கூப்பாடு போடுவாள் என நினைத்தான், அப்படி ஏதும் நடக்கவில்லை மாறாக அவள் கலகலவென சிரிக்கவும் அதில் அவன் அவளை விட்டு விலகி நின்றான்