”சே சே இல்லை அண்ணா, வேலைகள் எல்லாம் சுலபமா இருந்தது எல்லாத்துக்கும் ஆளுங்க இருந்ததால அவங்ககிட்ட இதை செய் அதை செய்ன்னு கட்டளையிடறது மட்டும்தான் என் வேலையே, அப்புறம் வரவு செலவு கணக்குகளை கூட நான் பார்த்துட்டேன், எல்லாம் முடிஞ்சிடுச்சி அண்ணா”
”உன் வேலை முடிஞ்சது அங்க கொம்பன் என்ன ஆனானோ தெரியலையே” என கவலையாக இருந்தான் கணக்குபிள்ளை காவேரியோ கலகலவென சிரித்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றாள்.
3 மணி நேரம் கழித்து தொங்கிய தலையுடன் வீட்டிற்குள் நுழைந்தான் கொம்பன், அவனது வரவிற்காக அனைவரும் காத்திருந்தார்கள் அதிலும் காவேரியோ எங்கே அவன் வராமல் இருப்பானோ என கலக்கத்தில் இருந்தாள். கொம்பனைக்கண்டதும் நிம்மதியானாள்.
”மாப்பிள்ளை வாங்க மாப்பிள்ளை வாங்க” என சண்முகம் உற்சாகமாக அழைக்க கொம்பனோ பரிதாபமாக வந்து இறங்கினான். அவனது முகத்தைக்கண்டு அனைவருக்கும் குழப்பமே காவேரி கூட குழம்பினாள்
”கொம்பா என்னாச்சி நண்பா உன் முகம் ஏன் வாடியிருக்கு அம்மா ஏதாவது சொன்னாங்களா அப்பா சத்தம் போட்டாரா” என கணக்குபிள்ளை கேட்க அவனோ இல்லை என மெதுவாக தலையாட்டினான்
”பின்ன ஏன் இப்படி சோகமா இருக்க நண்பா சொல்லு என்னாச்சி” என கேட்க அவனோ தன் சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பர் சுருளை எடுத்து கணக்குபிள்ளையிடம் நீட்ட அவனோ அதை வாங்கி
”என்ன நண்பா இது” என கேட்க அதற்கு கொம்பனோ துக்க பெருமூச்சுவிட்டு
”வீட்டு பொறுப்புகளுக்கான அம்மா சொல்ல சொல்ல நானே எழுதி கொண்டு வந்த லிஸ்ட்” என்றான்