”நிறுத்து அகத்தியா இந்த வீட்டுக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு, அதை அந்த கீழவீதி ஆளால இழக்கனுமா”
”வீரா ஒரு டிரைவர் அவ்ளோதான் இதுக்கும் நம்ம வீட்டு கௌரவம் போறதுக்கும் என்ன சம்பந்தம்”
”அகத்தியா சொல்றதைக் கேளு அவனை முதல்ல வேலையை விட்டு எடுத்துட்டு வேற ஆளை அதுவும் மேலவீதி ஆளை போடு”
”முடியாது தாத்தா நான் எடுத்த முடிவை யாருக்காகவும் நான் மாத்திக்க மாட்டேன்“
”அகத்தியா”
”சும்மா கத்தாதீங்க தாத்தா”
”நான் சொல்றதை கேட்க போறியா இல்லையா”
”கேட்கலைன்னா என்ன செய்வீங்க வீட்டை விட்டு அனுப்பிடுவீங்களா தாராளமா நான் வெளியே போறேன்” என சொல்ல தாத்தா மிரண்டார். பொன்முடியோ அதிர்ந்து
”அகத்தியா எவனோ ஒருத்தனுக்காக நீ ஏன் வீட்டை விட்டு வெளியேறனும்”
”அதைதான் நானும் கேட்கறேன், எவனோ ஒருத்தனுக்காக எதுக்காக இப்படி என்னை குற்றவாளி போல நிக்க வைச்சி பேசறீங்க, என்னை நீங்க இப்படி நடத்தறது எனக்கு சுத்தமா பிடிக்கலை, என்னை அடக்கி ஆளப்பார்க்காதீங்க” என சொல்ல பொன்முடி தவித்துப் போய் தன் தந்தை சங்கமேஸ்வரனை பார்த்து
”சின்ன பையன், இளரத்தம் போக போக நம்ம கட்டுப்பாடுகளை புரிஞ்சிக்கிட்டு திருந்திடுவான், இந்த ஒரு முறை அவனை விட்டுடுங்களேன்ப்பா” என சொல்ல தாத்தாவின் எரிக்கும் பார்வையில் தகித்துப் போனார் பொன்முடி