”ஈஸ்வரா என்னடா இது”
என கேட்க ஈஸ்வரனோ வெறிபிடித்தவன் போல மற்றவர்களுக்கு வாய்ப்பு தரக்கூட நேரம் தராமல் சரமாரியாக அவனது கூட்டாளிகளையே கத்தியால் வெட்டி வீழ்த்தினான். அவர்களின் ரத்தம் பட்டே ஈஸ்வரனின் முகம் சிவந்து போயிருந்தது, அந்த நிலையில் அவனை யார் பார்த்தாலும் பயந்துவிடுவார்கள். அனைவரையும் வெட்டிய பின் அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்று ஆராய்ந்தான். இறுதி மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார்கள். சுற்றி முற்றி பார்த்தான் ஈஸ்வரன் யாருமில்லை, அதே புளியமரத்தின் பக்கத்தில் பெரிதாக ஒரு பள்ளம் வெட்டி அதில் தன் கூட்டாளிகளை உயிருடனே தள்ளி மண் போட்டு புதைத்தான். அப்படி அவன் செய்வதற்குள் விடிந்துவிட அவசர அவசரமாக கிளம்பி ஆண்டாள் அவனுக்கு தந்த அறைக்குச் செல்வதற்குள் உடல்முழுவதும் இரத்தத்திட்டுக்கள் இதை பார்த்தால் ஆண்டாள் என்ன நினைப்பாள் என நினைத்தவன் உடனே குளித்து முடித்து அறைக்கு வந்து அலமாரியை திறந்தான். பட்டு வேட்டி சட்டைகள் வரிசையாக இருக்கவே அதை ஆசையாக தடவிப் பார்த்தான்
இந்த ஜென்மத்தில் இப்படியொரு உடையை அவனால் அணிய இயலாது, இப்படியொரு வாய்ப்பை கண்டதும் அவனின் மனம் மாறியது, அந்த உடையை உடுத்திக் கொண்டு கண்ணாடியில் தன்னை பார்த்து பிரமித்தான். உடையில் ஏதோ மாயம் உள்ளது போல தன்னையே ஆவுடையப்பன் போல மிடுக்காக மாற்றிக் கொண்டான்.
அதே நேரம் ஆண்டாளிடம் பேச வந்தார் ஆவுடையப்பன்.
”ஆண்டாள் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் உன் கல்யாணத்தைப்பத்தி”
”அப்பா நானும் என் கல்யாணத்தை பத்தி பேசியே ஆகனும்பா”
”என்னமா சொல்லு”
”எனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது அந்த ஈஸ்வரனோடதான்பா” என சொல்ல அகமகிழ்ந்தார் ஆவுடையப்பன் ஆனாலும் உடனே அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை