மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 19 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“சூப்பர் குட் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியோட எம்.டி சந்திரமௌலி இங்கே மதியூருக்கு வரக் காரணம் என்ன??” தென்றல்வாணன் போலீஸ் தோரணையில் வினவினான்.
இன்ஸ்பெக்டரின் எதிரே அமர்ந்திருந்த ப்ரியம்வதா ஆடிப் போயிருப்பது அவளைப் பார்த்தாலே தெரிந்தது. தென்றல்வாணனின் கேள்விக்கு தெரியாது என்று தலையை மட்டும் ஆட்டினாள் அவள்.
“நீங்க திருவிழால இருந்தீங்கன்னு சக்தி சொன்னாங்க?” தேன் தன் விசாரணையை தொடர்ந்தான்.
ப்ரியம்வதா இப்போது ஆம் என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
“உங்க அம்மா, அண்ணன் இரண்டுப் பேரும் உங்க கூட இருந்தாங்களா?”
“ஆமா இன்ஸ்பெக்டர்!” ப்ரியம்வதாவின் குரல் இப்போது வித்தியாசமாக ஒலித்தது.
“வினாயக்கும் உங்க கூட திருவிழாக்கு வந்தாரா?”
ப்ரியம்வதா இந்தக் கேள்விக்காக தான் கலவரத்துடன் காத்துக் கொண்டு இருந்தாள். பொய் சொல்லலாமா என்று யோசித்தாள். அம்மாவும், ராகுலும் வினாயக் வரவில்லை என்று உண்மையை சொல்லி விட்டால் புதுக் கேள்விகள், சந்தேகங்கள் வரும். உண்மையை சொல்வது தான் நல்லது.
“இல்லை இன்ஸ்பெக்டர் சார்!”
ரகசியம் சொல்வதுப் போல பதில் சொன்னவளை ஆராய்வதுப் போல கூர்மையாக நோக்கினான் தென்றல்வாணன்.
அவனைப் போலவே ப்ரியம்வதாவிற்கும் வினாயக் மேல் தான் சந்தேகம் என்பது அவள் பதில் சொன்ன விதத்திலேயே அவனுக்கு புரிந்தது. ஆனாலும் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்.