அவளுக்காக விட்டுக் கொடுக்க விரும்பினான். தன் வாழ்க்கை பாணியையே அவளுக்காக மொத்தமாக மாற்றினான். இந்து விரும்பும் விதத்தில் தன்னை எலா விதத்திலும் மாற்றிக் கொள்ள விரும்பினான். ஆனால் அவள் எந்த காரணமும் இல்லாமல் அவனின் காதலை திடீரென மறுத்தது மட்டும் அல்லாமல், அவனை பிடிக்க வில்லை என்றும் சொல்லி விட்டாள்! அதைப் பற்றி நினைக்கவே அவனுக்கு வலித்தது. உயிராய் நினைத்த ஒருத்தி பிடிக்கவில்லை என்று சொல்வதை விட பெரிய வலி வேறு எதுவும் இருக்க முடியாது என்று அவனுக்கு தோன்றியது! பேசாமல், இந்த சினிமாவில் எல்லாம் வருவது போல இந்துவை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்துக் கொண்டால் என்ன?
"என்ன சஞ்சீவ் பயங்கர யோசனை?"
காஞ்சனாவின் குரலில் தன் எண்ண ஓட்டத்தில் இருந்து மீண்டு வந்தவன், அவனை தவிர மற்றவர்கள் அனைவரும் கிளம்பி தயாராகி இருப்பதை உணர்ந்தான். கீதாவின் முகத்தில் மலர்ச்சி இல்லை. ராஜீவின் முகத்தில் கொஞ்சம் குழப்பம். கண்மணி அவனையே கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்தாள். காஞ்சனாவும், கலாவும் தான் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
"சின்ன அண்ணா இப்போவே அண்ணி பத்தி கனவு காண ஆரம்பிச்சிட்டார் போலருக்கு," என்றாள் கலா உற்சாகத்துடன்!
"இருக்கும் இருக்கும்," என்ற காஞ்சனா,
"சரி கிளம்புவோமா???" என்று கீதாவை பார்த்து கேள்வியோடு முடித்தாள்.
"அத்தை, நீங்களும் சஞ்சீவும் மட்டும் முதல்ல போய் பார்த்து பேசிட்டு வாங்களேன்..." என்றாள் கீதா தயக்கத்துடன்!
"என்ன பேச்சு இது கீதா? இந்த வீட்டுல உன் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது, நடக்க கூடாது. சஞ்சீவுக்கே பிடிச்சிருந்தாலும் கூட, உனக்கு பிடிச்சா மட்டும் தான் கல்யாணம்," என்றாள் காஞ்சனா!