”பார்த்தியா நீ கூட்டி வந்த ஆளோட லட்சணத்தை. ஆச்சாரம் அனுஷ்டானம்னு ஆடுவியே இப்ப எங்க போச்சி உன்னோட கொள்கை” என மனதில் நினைத்துக்கொண்டு அர்த்தத்துடன் சிரித்துவைக்க பாட்டி உடனே புரிந்துக்கொண்டு தலையை குனிந்துக்கொண்டார்.
தாத்தாவும் மிருதுளா செய்ததை சாப்பிட்டு முடித்து அடுத்து நந்தினிக்காக காத்திருந்தார்
நந்தினியும் அதே சாம்பார் குழம்பு கூட்டு என வைக்க தாத்தா
”என்னம்மா நீயும் வந்தனாவை போலவே சமைச்சிருக்க”
“இல்லை தாத்தா வந்தனாதான் என்னைப்பார்த்து சமைச்சிருக்கா” என சொல்லிவிட்டு மற்றவர்களுக்கும் தாத்தாவிற்கும் சரி பாயாசம் ஒரு டம்ளரில் வைத்தாள். ரிஷிக்கு மட்டும் வைக்காமல் சென்றுவிட அவன் கோபமாக தாத்தாவை பார்த்து முறைத்தான்
”எதுக்குடா என்னைப்பார்த்து முறைக்கற”
“எல்லாருக்கும் பாயாசம் வைச்சா எனக்கு மட்டும் வைக்கலை” என கத்த
”அதுக்கு ஏன் என்கிட்ட கத்தற அவள்ட்ட கத்து”
“இத்தனை பேர் முன்னாடி என்னால அவள்கிட்ட கத்த முடியாது உங்க பாயாசத்தை கொடு உங்களுக்கு எதுக்கு” என அவரிடம் இருந்து பாயாசத்தை பிடுங்க தாத்தா தடுத்துவிட்டு அவசரமாக பாயாசத்தை குடித்து காலி செய்து எழுந்துக்கொண்டார்.
ரிஷியின் கோபம் அர்ஜூனை எரிக்க அவன் வேகமாக சாப்பிட்டு பாயாச டம்ளருடன் சென்றே விட்டான்.
அனைவரும் சாப்பிட்டு முடித்த கையோடு பாயாசத்தின் நெய்யின் தாக்கத்தில் உறங்க சென்றுவிட்டனர். அர்ஜூனோ நந்தினி செய்த பாயாசத்தை அவளிடம் கடனாக சிறிது வாங்கியவன் அதை வெண்ணிலாவிற்கு தர சென்றுவிட்டான்.