Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 24 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அன்று செய்து முடிக்க வேண்டிய ஆஃபீஸ் வேலைகளை முடிந்த அளவு சீக்கிரம் முடிக்க முயன்றாள் ரோஷனி. மாலையில் இருக்கும் ரேஷ்மியின் காலேஜ் ஃபங்க்ஷனுக்காக வீட்டிற்கு போய் தயாராகி தான் காலேஜிற்கு போக வேண்டும்! இந்த நினைவில் ஒவ்வொரு முறை வாட்சில் நேரம் பார்க்கும் போதும் ரேஷ்மியின் நினைவில் அவள் முகத்தில் மெல்லிய புன்னகை வந்தது என்றால், கூடவே கமல் பற்றிய கேள்வியும் வந்து மனதை நெருடியது!
கமல் அவனின் அம்மா, தம்பி, தங்கை, மகள் எல்லோரும் சொல்வது போல சுயநலவாதி, அன்பில்லாதவன் என்றால் எதற்காக அந்த குடும்பத்தின் தேவைக்கு எப்போதும் உதவுகிறான்????
கவிதா அர்ஷத்தை விரும்புவது தெரிந்த போது அந்த வீட்டில் கலவரமே வெடித்தது! பிறகு எல்லோரும் ஓரளவிற்கு சமாதானம் ஆகி திருமணம் பற்றி பேச சென்றால் அர்ஷத்தின் அம்மா கேட்ட சீர்வரிசை வானம் அளவிற்கு நீண்டது! பூங்கோதை, விமல் மட்டுமல்லாமல், ரோஷனி கூட அந்த திருமணம் நடைபெறாது என்று தான் நினைத்தாள்!
கமலுக்கு இந்த விபரம் எதுவுமே தெரியாது! சுமித்ரா இருந்திருந்தால் கமலிடம் பேசி ஏதாவது முயற்சி செய்திருப்பாள் என பூங்கோதை சொன்ன போது, ரோஷனிக்கும் அதை செய்து பார்க்கும் எண்ணம் எழுந்தது!
சுமித்ராவின் மறைவுக்கு பின் ரோஷனி கமலின் அறை இருந்த மாடிப் பகுதிக்கு செல்லவே இல்லை! இப்போது சென்றால், படிகள் முழுவதுமே தூசும், சிலந்தி வலையுமாக இருந்தது!
முகத்தை சுழித்துக் கொண்டே தான் ஏறியவள், கதவின் அருகில் கூட பல சிலந்தி வலைகள் இருப்பதை கவனித்து சில வினாடிகள் தயங்கி நின்றாள்! சரி வந்தது வந்தாகி விட்டது, கமலிடம் பேசி விடலாம் என முடிவு செய்து அவள் கதவை தட்ட, “யாரு?” என உள்ளிருந்து கர்ஜித்தது கமலின் குரல்!
“நான் ரோஷனி...” என சொன்ன போது அவளின் குரலில் இருந்த குழப்பம் அவளுக்கே புரிந்தது!
கதவை திறந்த கமல், “என்ன?” என்றான் கேள்வியுடன்!