✽✽✽
இரவு நேரம், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருக்க, அன்று டிவியில் பார்த்த இரண்டு செயின் பறிப்பு சம்பவங்களை பற்றி விவரித்த நளினி,
“... வர வர வெளியே நடக்கவே பயமா இருக்கு,” என்றாள்.
“பொதுவா அப்படி சொல்ல முடியாது அத்தை... சில இடம் அப்படி இருக்கு,” என்றான் ஜெயந்த்.
மைத்ரேயிக்கு தானாக சரண்யாவின் நினைவு வந்தது...
“ஆமாம்... என் ஆஃபிஸ்ல வேலை செய்ற சரண்யா பத்தி சொல்லி இருக்கேன்ல... அவ இருக்க இடத்திலேயும் இதே போல பிரச்சனைங்க இருக்கு... தனியா இருக்க பொண்ணுன்னு இரண்டு பேரு ரோட்டிலேயே அசிங்கமா பேசி நடந்துக்குறாங்களாம்... கேட்கும் போதே கோபமா வருது... என்ன எல்லாமோ செய்றோம்... எவ்வளவோ முன்னேறி இருக்கோம்ன்னு பேசுறோம்... ஆனால் ஏன் இந்த பேசிக் ஆன பாதுகாப்பு, மரியாதை கொடுக்குறது எல்லாம் மறந்துட்டோம்...? சரண்யா தைரியமான பொண்ணுன்னா கூட பரவாயில்லை... ப்ச்...”
சரண்யா என்ற பெயர் கேட்ட உடனேயே தங்கையின் பேச்சை கவனமாக கவனிக்கத் தொடங்கி இருந்த மித்ரன், அவள் சொன்ன விஷயத்தை கேட்டு தாடைகளை உடைத்து விட போவது போல கோபத்துடன் பற்களை கடித்தான்...!
மித்ரனிடம் வந்த மாற்றத்தை மற்றவர்கள் யாரும் கவனிக்கவில்லை.
அவர்களின் பேச்சு திசை மாறி வேறு பக்கம் சென்றது. சிறிது நேரம் கழித்து, வேறு ஏதோ பேச்சின் நடுவே, திடீரென நளினி,
“மைத்தி, நீ கொஞ்சம் முன்னாடி சொன்ன உன் ஆஃபிஸ்ல வேலை செய்ற பொண்ணு, நீ அன்னைக்கு ஒரு நாள் சொன்னீயே அவளா?” என்றுக் கேட்டாள்.