“வீடு பக்கத்திலேயே ப்ரைமரி ஸ்கூல் இருக்கு. நிஷாவை அதுல சேர்த்துக்கலாம். சாயந்திரம் நீ வர வரைக்கும் அம்மா அவளை பார்த்துப்பாங்க. என் பொண்ணுக்கு விளையாட ஒரு ஃப்ரென்ட் கிடைச்ச மாதிரியும் ஆச்சு!”
அதற்குள் ஓரளவிற்கு தன் நிலைக்கு வந்திருந்த சரண்யா,
“இதெல்லாம் எதுக்கு மேடம்... இங்கேயே எனக்கு வசதியா தான் இருக்கு,” என்றாள் தயக்கத்துடன்!
ஆனால் சுலோச்சனா,
“எதுக்கு பொய் சொல்ற சரண்யா? தினம் தினம் இப்படி அலைஞ்சா என்ன ஆகும்? அவங்க சொல்ற மாதிரி அந்த வீட்டுக்கு போனால் உனக்கு வசதியா இருக்கும்,” என்றாள்.
தலையை மறுப்பாக அசைத்து, “இல்லைக்கா அது சரியா இருக்காது... எ...” என சரண்யா பேசிக் கொண்டிருக்கும் போதே, மைத்ரேயி அவளின் பேச்சில் குறுக்கிட்டாள்!
“ஏன் சரியா இருக்காதுன்னு நினைக்குற சரண்யா? உன் வசதிக்கு ஏத்த மாதிரி வேற வீடு மாறி போறதா நினைச்சுக்கோயேன்...”
”இல்லை மேடம்... வேண்டாம்...”
“ஏன் வேண்டாம்னு சொல்ற???”
“நீங்க வீடு பத்தி சொன்னீங்க ஆனா வாடகை பத்தி ஒன்னும் சொல்லலையே...?”
“அது தான் உனக்கு பிடிக்கலைனா, உனக்கு பிடிச்ச வாடகையை கொடு...”
தன் மேல் பரிதாபப் பட்டு மைத்ரேயி இதை செய்ய நினைக்கிறாள் என்று சரண்யாவிற்கு தோன்றியது... எனவே அதை ஏற்றுக் கொள்ள அவளுக்கு மனம் வரவில்லை...