நந்திதாவிற்கு ரேவதி சொல்ல வருவது புரிந்தது! என்ன ஆனாலும் உதய் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்...! இது தான் ரேவதியின் விருப்பம்...
நந்திதாவின் மௌனம் ரேவதிக்கு என்ன உணர்த்தியதோ, “உதயை பத்தி எனக்கு நல்லா தெரியும்... எப்போவும் அவன் என்னை விட்டுக் கொடுக்க மாட்டான்! நானும் அதே போல தான்... சரியோ, தப்போ, எதுவா இருந்தாலும் அவன் பக்கம் தான் இருப்பேன்,” என்றாள் கறாரானக் குரலில்!
நந்திதா அமைதியாக ரேவதியை பார்த்தாள்!
நந்திதாவின் பார்வையில் கோபம் இல்லை என்பது புரியவும், “என்னடா இவ கல்யாணத்துக்கு சம்மதமான்னு கேட்டுட்டு, சரின்னு சொன்ன உடனே இந்த கதை எல்லாம் சொல்றாளேன்னு யோசிக்குறீயா? நான் ஏன் இதை சொல்றேன்னு உனக்கு புரியுதா???” என வினவினாள் ரேவதி!
சட்டென, “புரியுது,” என பதில் சொன்னாள் நந்திதா!
ரேவதி அந்த பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை போலும்! ஆச்சர்யம் நிறைந்த கண்களுடன் நந்திதாவை சின்ன சுவாரசியத்துடன் பார்த்தாள். பின்,
“புரிஞ்சா சரி... இன்னும் ஒன்னே ஒன்னு... ஏழு வயசுல இருந்து உதயை தனியா வளர்த்திருக்கேன்... இது வரைக்கும் சின்னதா கூட யாரும் குத்தம் சொல்ற மாதிரி நடந்ததில்லை... எங்க குடும்பத்துக்குன்னு தனி மரியாதை இருக்கு... என் வீட்டுக்கு மருமகளா வந்த பிறகு அதை அப்படியே காப்பாத்துற பொறுப்பும் உனக்கு இருக்கு,” என்றாள்!
பழைய கறார் குரலில் இல்லாமல் சுருதியை குறைத்து ரேவதி சொன்னதை பற்றி யோசித்துக் கொண்டே, “ம்ம்ம்... புரியுது,” என்றாள் நந்திதா!
“நான் சொல்ல நினைச்சது அவ்வளவு தான்! வேற ஒண்ணுமில்லை...”