Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 22 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொழிலதிபர்களுக்கான மீட்டிங் ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக ஆஃபீஸிலிருந்து சீக்கிரம் கிளம்பினான் மித்ரன். அவனுடைய பர்சனல் லேப்டாப் ரிப்பேர் ஆகி இருப்பது ஞாபகத்திற்கு வரவும், அதை சர்வீஸ் சென்டருக்கு எடுத்து செல்லலாம் என்று முடிவு செய்து முதலில் வீட்டிற்கு வந்தான்.
இப்படி முன் மாலை நேரத்திலோ, மாலை நேரத்திலோ அவன் வீட்டிற்கு வந்து சில பல நாட்கள் ஆகி இருந்தது!
சரண்யா கெஸ்ட் ஹவுஸிற்கு வந்தது முதல் வேண்டுமென்றே இரவு தாமதமாக வீடு திரும்புவதை வழக்கமாக்கி கொண்டிருந்தான் அவன்...
அவனை நேருக்கு நேர் சந்திப்பதை சரண்யா விரும்ப மாட்டாள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்...
அது மட்டுமல்லாமல் சரண்யா வந்த முதல் நாளே சரண்யாவும், அவளின் மகளும் அவர்கள் வீட்டில் தினமும் டின்னர் சாப்பிட போவதை நளினி வழியாக மித்ரன் தெரிந்துக் கொண்டான். அப்போதே இரவு உணவு நேரத்தை தவிர்ப்பது என்று மனதுள் முடிவும் செய்துக் கொண்டான். அதனாலேயே அந்த திங்கள் முதலே இரவு உணவு நேரம் கடந்த பிறகு வீட்டிற்கு வருவதை பழக்கமாக்கி கொண்டிருந்தான். வார இறுதி நாட்களிலும் பெரும்பாலும் அறைக்குள்ளேயே இருந்தான் அல்லது சோஷியலைஸ் செய்ய சென்றான்!
இதனால் பெரும்பாலான நாட்கள் இரவு உணவை மித்ரன் மட்டும் தனியாக சாப்பிட வேண்டி இருந்தது! ஆனால் அது அவனை பெரிய அளவில் பாதிக்கவில்லை! பழி வாங்க வேண்டும் என மனதில் எப்போதும் இருக்கும் படபடப்பு போய் அவனுள் புது வித அமைதி உருவாகி இருப்பதை அவனாலேயே உணர முடிந்தது... ஆஃபீஸ் மற்றும் வெளி இடங்களில் கர்ஜிக்கும் – கடித்து குதற தயாராக இருக்கும் பழைய சிங்கமாகவே இருந்தாலும், வீட்டில் இருக்கும் நேரங்களில் நளினி மற்றும் மைத்ரேயியுடன் அவனால் இள வயது மித்ரனைப் போல ஈஸியாக பேச முடிந்தது!
எனவே எப்படி பார்த்தாலும் இந்த அரேன்ஜ்மென்ட் அவனுக்கு வசதியாக தான் இருந்தது!