தொடர்ந்து ப்ளாக்ஸ் வைத்து விளையாடினாலும் நிஷாவின் பார்வை அவ்வப்போது மித்ரன் இருந்த பக்கம் சென்று வந்தது. அவனிடம் இரண்டு மூன்று முறை மட்டுமே பேசி இருந்தாலும் அவளுக்கு அவனை ரொம்பவும் பிடிக்கும்.
அதுவும் மித்ரன் அவளின் அம்மாவின் முகத்தில் சந்தோஷத்தை கொண்டு வந்த மைத்ரேயி ஆன்ட்டியின் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் ரொம்பவே பிடிக்கும்...!
நடந்துக் கொண்டே தன்னுடையை வழக்கமான கடினமான தோரணையில் பேசிக் கொண்டிருந்த மித்ரனின் பார்வை வட்டத்திலும் நிஷா அவ்வப்போது வந்துக் கொண்டு தான் இருந்தாள்!
பேச்சை முடித்து ஃபோனை கட் செய்து வைத்தவன், “இடியட்,” என்று கோபத்துடன் முணுமுணுத்தான்.
முன் தினமே வந்து சேர்ந்திருக்க வேண்டிய முக்கிய மூலப் பொருட்கள் இன்னமும் வந்து சேரவில்லை. கேட்டால் அது இது என நொண்டி சமாதானம் வேறு!
முதலில் இந்த கம்பெனியை மாற்ற வேண்டும்... யோசித்தப் படி வீடு பக்கமாக இரண்டு அடி எடுத்து வைத்த மித்ரன், நிஷாவின் ஞாபகம் வரவும், திரும்பி அவள் இருந்த பக்கமாக நடந்தான்.
அவன் வருவதை பார்த்த உடன் நிஷாவின் முகம் பூவாக மலர்ந்தது.
“மித்ரன்!”
அவனை இப்படி உரிமையுடன் பெயர் சொல்லி செல்லமாக அழைப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்...
அந்த ஒரு சிலரில் ஒருத்தியாக நிஷாவும் மாறி இருந்தாள்...