மித்ரனுக்கு அவளை கையில் அள்ளி செல்லம் கொஞ்ச வேண்டும் என்று ஆசையாக இருந்தது...
“ஐ ஆம் மித்ரன்! அண்ட் வூ ஆர் யூ?” என்று அவளிடம் மென்மையாகவே கேட்டான்!
“நீங்க மோனியோட மாமா தானே? அவளுக்கு டையப்பர் மாத்த பாட்டி உள்ளே கூட்டிட்டு போனாங்க... ஐ ஆம் நிஷா. நைஸ் மீட்டிங் யூ மித்ரன்” என்று சொல்லி அவன் பக்கத்தில் வந்தவள், மீண்டும் அதே ‘கெத்து’ தோரணையுடன் கை குலுக்க அவன் பக்கமாக தன் பிஞ்சு கையை நீட்டினாள்!
என்ன ஏது என்ற ஆராய்ச்சி இல்லாமல் தானாக மித்ரனின் மனம் லேசாகி அவனின் முகத்தில் புன்னகை தோன்றியது! அப்படியே நிஷாவின் முன் மண்டியிட்டு அமர்ந்து, அவளின் கையை பற்றி குலுக்கிக் கொண்டே, “இட்ஸ் மை ப்ளெஷர்,” என்றவனின் முகத்தில் இருந்த புன்னகை இப்போது சிரிப்பாக மாறி இருந்தது!
நிஷாவும் மழலை அழகுடன் கிளுக்கி சிரித்தாள்!
அந்த கைக் குலுக்கலுடன் தொடங்கியது நிஷா – மித்ரனின் இனிய நட்பு!!!
✽✽✽
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை... தோட்டத்தில் இருந்த ஒற்றை மாமரத்தின் நிழலில் அமர்ந்து, தனக்கு பிடித்த ப்ளாக்ஸ் வைத்து வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தாள் நிஷா. பக்கத்தில் யாரோ பேசும் சத்தம் கேட்கவும் நிமிர்ந்துப் பார்த்தாள். மித்ரன் யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டே குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தான்.
நிஷா பார்ப்பதை கவனித்து அவன் கை அசைக்கவும், நிஷாவும் முகம் மலர பதிலுக்கு அவனை போலவே கை அசைத்தாள்.