(Reading time: 18 - 36 minutes)

09. ஷைரந்தரி - சகி

ங்கையின் பவித்ரத்தை ஏற்று,பூமியினை புனிதமாக்க,காற்றாய், விண்ணாய்,வியனாய், வானை பிளந்த வேள்வியில் பிறக்கவிருக்கிறாள் பெண்ணொருத்தி!!!!

அன்று மாலை...

ஒன்பது கிரகங்களும் ஒன்றாய் சங்கமித்த பஞ்சாக்ஷர திதி!!!

shairanthari

வானைத் தொட்டு கொண்டிருந்த வேள்வித்தீ!!!!

"மகேந்திரா!"

"கூறுங்கள் மகரிஷி!"

"மகேந்திரனின் சாட்சியாக,மண்ணில் உதிக்க இருக்கும் மகேந்தரியின் திவ்ய சாயலை ஸ்வீகரிக்க மஹாதேவனுக்கு இந்த சப்த வர்ணங்களால் அபிஷேகம் செய்வாயாக!!!"

"அப்படியே குருதேவா!"-மகேந்திர வர்மர் அவர் தந்த சப்த வர்ணங்களால் சிவன் பாதங்களில் அபிஷேகம் செய்தார்.நீலம்,வெண்மை, பச்சை,சிவப்பு என அபிஷேகம் நடந்தது. வேதியர்கள் வளர்த்த வேள்வித்தீ வளர்ந்துக் கொண்டே போனது. முனிவர்களின் நாவில் இருந்து ஸ்தோத்திங்களும், மந்திரங்களும் உடலை சிலிர்க்க வைத்தன.

"மகேந்திரா!வேள்வியில் இருந்து பிறக்கவிருக்கும் பெண்ணானவள்,பல்லவ வம்சத்துக்கே குல விளக்காவாள்.அன்பு,பாசம்,கோபம்,ஏக்கம்,துக்கம் என சகல விருப்புகளை கடந்த அவள்,இயற்கையின் ஆணைக்கிணங்கி உனது புதல்வியாக பிறந்து உனக்கும்,உனது வம்சத்திற்கும் புண்ணியத்தை தர இருக்கிறாள்.வேள்வியில் இருந்து உதிப்பதால், தேவர்களுக்கு உண்டான சகல குணங்களையும் பெற்று சத்தியரூபினியாக திகழ்வாள்.மஹாதேவனின் வாரிசாதலால்,மஹா சக்தியாக,மஹா ரௌத்திரையாக விளங்குவாள். அன்று வானுயர்ந்த வேள்வியில் உதித்த திரௌபதியை போல பவித்ரத்தின் உச்சம் ஆவாள்.அவளது நாமத்தில் ஒன்றான ஷைரந்தரி என்னும் நாமத்தோடே அகிலம் அறியப்படுவாள். வேள்வியில் உதிக்கும் நங்கையை ஸ்வீகரிப்பாயாக!"- மகேந்திர வர்மர் சரி என்பதை போல தலையசைத்தார்.வேதியர் அனைவரும் ஒரு மனதோடு கங்கை நீரின் ஒரு பகுதியை தீயிலிட்டனர்.அது இறங்கிய சில நேரத்தில் கொழுந்து விட்டெரிந்தது. ஆரவாரத்தோடு ஆகாயம் தொட்டது.

ந்த செந்தீயில் இருந்து உதித்திருந்தாள் பெண்தீ ஒருத்தி!!!!

அவளது கண்கள் அனலைக் கக்கும் செந்தாமரைகள்...

அவளது தேகமானது தீயை போல பளபளத்தது.அவள் தோற்றத்தில் சந்திக்க முடியாத கம்பீரம்...அசாத்திய தைரியம்...சாமுத்திரிக்கா லட்சணம்...அசாத்திய அழகோடு இருந்தாள்.

அதுவரையில் அப்படி ஒருத்தியை எவரும் கண்டத்தில்லை.

அனைவரும் பிரம்மித்து நின்றனர்.

தன் பாதத்தை வெளியே எடுத்து வைத்தாள் அப்பெண்.வேள்வியில் இருந்து தனியே பிரிந்தாள் ஷைரந்தரி.தன்னை பிறப்பெடுக்க வைத்த,மஹா வேள்வி பூரணமாக காரணியாய் அமைந்த வேதியரை பாதம் பணிந்தாள்.

"மங்களம் பெற்று பெரு வாழ்வு வாழ்க!!!"-என்று வாழ்த்தினர்.

பின்,தன் தந்தையின் பாதங்களை பணிந்தாள்.

"தீர்க்க ஆயுள் பெறு மகளே!"

"ஆசை,இச்சை போன்ற பல விருப்பங்களை வேண்டி,மீண்டும் இப்பூமியில் அவதரித்த இக்கன்னிகையை தாம் ஸ்வீகரித்ததால்,நான் பெறும் பாக்கியம் பெற்றேன். மஹாதேவனின் மஹா பிரசாதமாகிய நான் இன்று முதல் தம்முடைய புதல்வியாவேன்."

"அறிவேன் மகளே!பாக்கியமற்று விளங்கிய எனது வாழ்வினை புனிதமாக்க எனது புதல்வியாக அவதரித்த ஆதிசக்தி அவதாரம் நீ.உன்னால்,அகண்ட இந்த பல்லவ சாம்ராஜ்ஜியமே புனிதமடைந்தது!"

"யார் அங்கே??"-உடனே,ஒரு பணிப்பெண் அங்கே வந்தாள்.

"பல்லவ சக்கரவர்த்திக்கு வணக்கங்கள்!"

"நலம் உண்டாகட்டும்!பல்லவ குமாரியை சக்கரவர்த்தினியிடம் அழைத்து செல்வாயாக!"

"ஆகட்டும் மன்னா!"-தாதியர்கள் புடைச்சூழ அந்தப்புரம் அழைத்து வரப்பட்டாள் ஷைரந்தரி.

வளின் வரவிற்காக பல வரவேற்புகள் செய்யப்பட்டிருந்தன.

தேரில் இருந்து இறங்கினாள் ஷைரந்தரி.பூ மழை பொழிந்தனர் பல்லவ தேச பிரஜைகள்.இன்முகத்தோடு ஏற்று கொண்டாள்.

மெல்ல நடந்து தன் தாயின் அருகே வந்தாள்.

அவரின் பாதங்களை பணிந்தாள்.

"நலம் உண்டாகட்டும் மகளே!உன்னுடைய நாமம் ஷைரந்தரி அல்லவா?"

"ஆம் தாயே!"

"அழகிய பெயர்.நான் உன்னை சாகித்யா என்ற நாமத்தில் அழைக்கின்றேன்.அழைக்கலாம் அல்லவா?"

"ஆம் தாயே!நான் தம்முடைய புதல்வி ஆவேன்.தம்முடைய ஆணைக்கு அடிபணிந்தவள் நான்!"-சக்கரவர்த்தினி ஷைரந்தரியை உச்சி முகர்ந்து முத்தமிட்டார்.

"உள்ளே வா மகளே!கங்கா ஸ்நானம் புரிவாயாக!"

"அப்படியே அன்னையே!"-அந்தப்புரத்தின் உள்ளே அழைத்து செல்லப்பட்டாள் ஷைரந்தரி.அவளை கண்டவர்,அனைவரும் ஸ்தம்பித்தே நின்றனர்.

"சாகித்யா!செல் மகளே!விரைவில் திரும்பி வா!"-அவள்,சரியென உள்ளே சென்றாள்.அங்கே குளமாய் தேங்கி இருந்தது கங்கை நதி!!!ஷைரந்தரி அதில் இறங்கினாள்.கங்கை நதிக்கு தர வேண்டிய மரியாதையாய் இரு கரம் குவிந்தப்படி மூழ்கி எழுந்தாள்.

"இளவரசி!"-அழைத்தாள் ஒரு தாதி!

"மகாராணியார்!தங்களின் ஆடை,அணிகலனோடு தங்களின் அறையில் காத்துக் கொண்டிருக்கிறார்."

"உடனே செல்வோம்!"-ஷைரந்தரி அலங்கரிக்கப்பட்ட அந்த அறைக்கு சென்றாள்.

"வா மகளே!இது உனக்காக வடிவமைக்கப்பட்டவை. இதனை உடுத்திக் கொள்வாயாக!"-ஷைரந்தரி அதை எடுத்து கொண்டு தனி அறைக்கு சென்றாள்.சிறிது நேரத்தில்,அழகிய வேலைப்பாடமைந்த வஸ்திரத்தை அணிந்து வந்தாள்.வானவரால், தவமிருந்து செதுக்கப்பட்ட சிலை தான் வந்திருக்க வேண்டும்.அப்படி,ஒரு தேஜஸ் அவளிடத்தில்!!!

"யாரங்கே?எனது புதல்வியை அணிகலன்களால், அலங்கரியுங்கள்!"-சக்கரவர்த்தினியின் உத்தரவிற்கிணங்கி,அவள் காதுகளில் தோடுகள் தொங்கவிடப்பட்டன. நெற்றியில்,சுட்டிகள் அணியப்பட்டன.கால்களில் கொலுசுகள் தவழ்ந்தன. கரங்கள் வளையல்களை ஏந்தின.கழுத்து ஆபரணங்களால் சூழப்பட்டது.நெற்றி குங்குமத்தால் நிறைந்தது.

அலங்கரித்த சிலை போல் ஆனாள் ஷைரந்தரி.

தன் மகளின் அழகினை நெட்டி முறித்தார். சக்கரவர்த்தினி ரேணுகா தேவி.

"இது வரையில்,எனக்கென்று வாரிசில்லாத கவலையில் வாடினேன்.மகேஷ்வரியிடம் என் தவம் வீண் போகவில்லை.தன்னுடைய அவதாரத்தையே என்னுடைய புதல்வியாக்கி இருக்கிறாள்.பல்லவ தேசத்தின் இளவரசி ஆதலால்,நீ பல்லவ நாட்டின் நலனோடும் பிணைக்கப்பட்டு இருக்கின்றாய்!மகளே....இன்று சூரிய உதயமானது,உன்னால் நிகழ்ந்தது.உன் மனமானது விரும்பிய வேளையில்,நீ இத்தேசத்தை கண்டு வரலாம்."

"தாயே! நான் பல்லவ ராஜ்ஜியத்தை ஒரு சாதாரண பிரஜை போலவே காண விழைகிறேன். கோட்டையின் உள்ளே மட்டும் இளவரசியாக இருக்க ஆசை கொள்கிறேன்."

"அப்படியே ஆகட்டும் மகளே!"-அப்போது முரசு முழங்கிற்று!

"மகாராஜா மகேந்திர வர்மர் கோட்டையினுள் விஜயம் செய்கிறார்!"

"சாகித்யா!மன்னர் வந்துவிட்டார்.இன்னும் சிறிது காலத்தில் உன்னை பற்றி பாரத தேசம் முழுதிலும் ஓலை அனுப்ப வேண்டும்!"

"எதற்கு அன்னையே?"

"நீ இளவரசியாக இருந்து சக்கரவர்த்தினியாக மாற வேண்டும் அல்லவா?"-பெண்களிடத்தில் அங்கே சிரிப்பொலி கேட்டது, நடக்கவிருக்கும் விபரீதம் தெரியாமல்!!!!

அடர்ந்த பூஞ்சோலையில் வெண்ணிலவின் கதிரொளியானது அங்கே தனிமையில் ஊஞ்சலாடி கொண்டிருந்த பெண்ணிலவின் மேல் விழுந்தது...அது யார்?நமது ஷைரந்தரி தான்!

"எந்த கடமையை நிறைவேற்ற அவதரித்தோம்?எதற்காக இப்பிறவி நமக்காக?"-பலவாறு யோசித்து கொண்டிருந்தது அவள் மனம்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.