(Reading time: 27 - 53 minutes)

நிலாவின் தலை கோதிவிட்டு அப்படியே கண் அயர்ந்தார் பாட்டி .. சரியாய் மாலை வேளை , அவரின் செல்போன் சிணுங்க மெல்ல கண் விழித்தாள் தேன்நிலா . அவள் படுத்திருந்த அறையை பார்வையால் அளந்தவளுக்கு தான் வேறெங்கோ இருக்கிறோம் என்று தெரிந்தது. மெல்ல எழ முயன்று தோற்றுப் போனவள் மீண்டும் அயர்வால் கண்மூடி சிந்தித்தாள் . மதியழகன் வீட்டிற்கு வந்ததும் தான் அவன் மீது மயங்கி விழுந்ததும் ஞாபகம் வந்தது . அப்படி என்றால் நிச்சயம் இது அவனது ஏற்பாடுதான் என்று புரிந்து கொண்டாள் .. மீண்டும் பாட்டியின் செல்போன் சிணுங்க, இருந்த சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி எழுந்து போனை எடுத்தாள் தேன்நிலா ..

" அம்மு "

" எங்க இருக்கீங்க ? "

" ஹ .. ஹன் ............ நிலா ... எழுந்துட்டியா ? "

" ம்ம்ம்ம்ம் ... இந்த இடம் ?"

" என் வீடுதான் .. பாட்டி எங்க ? " என்று கேட்டவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அருகில் உறங்கிக் கொண்டிருந்தவரை கனிவுடன் பார்த்தாள் ..

" அவங்க எனக்கு சாப்பாடு கொண்டு வர போயிருக்காங்க .."

" ஹப்பா .. நல்லவேளை நீ கண் முழுச்சிட்ட .. இப்போதான் உயிரே வருது .. காய்ச்சல் இப்போ எப்படி இருக்கு ?"

" நீங்க எங்க இருக்கீங்க மது ?"

" என் மேல கோவமா நிலா ? ஏன் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லலையே "

" நீங்க கூடத்தான் பதில் சொல்லாமல் கேள்வி கேட்குறிங்க , அப்போ நீங்களும் என்மேல கோபமா இருக்கிங்கன்னு எடுத்துக்கணுமா ? " என்றாள் துடுக்காய் ..

" என்ன பொண்ணுடா இவ " என்று சிலாகித்துக் கொண்டான் மதி ..

" ஹெலோ மது சார் .. உங்களத்தான் .. எங்க இருக்கீங்க"

" ஆபீஸ்ல மா .. வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாகும் .. உனக்கு டேப்லெட் எல்லாம் அங்க பக்கத்துல வச்சுருக்கேன் .. நீ சாப்பிட்டுடு சமத்தா இருந்தா நான் உனக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வருவேன் " என்றான் ..

" படவா " என்று மனதிற்குள் திட்டியவள் , " நீங்க ஒன்னும் வரவே வேணாம் ..

" நீங்க வரவே வேணாம் .. நான் பாட்டிக் கூட இருந்துப்பேன் " என்று முறுக்கிக் கொண்டாள் நிலா ..

" ஹ்ம்ம் நான் ரொம்ப பாவம் நிலா "

" நீங்களா ? இப்போ எதுக்கு இந்த டைலாக்னு நான் தெரிசுக்கலாமா ?"

" ஹா ஹா இல்லை, நீ பீவர்ல இருக்கும்போதே இந்த போடு போடுறியே இதுல குணம் ஆகிட்டா என்னென்ன பண்ணுவியோ ?"

" அந்த கவலை உங்களுக்கு எதுக்கு மது ? வீணா கற்பனை பண்ணி பார்க்குறேன்னு டைம் வேஸ்ட் பண்ணாம வீட்டுக்கு வந்திங்கன்னா நான் என்ன பண்ணுவேன்னு நேரடியாகவே பார்க்கலாம் .. எனக்கு தெரியாமலே என்னை கடத்திட்டு வந்துருக்கிங்க இதுக்கே உங்களை என்ன பண்ணுறேன்னு பாருங்க "

" ஐயோ ஹனி "

" என்னது ????"

" ம்ம்ம்கும்ம்ம்ம் .. சாரி தங் ஸ்லிப் .. நிலாம்மா உன்னை பார்த்துக்க வீட்டுல யாரும் இல்லையேன்னுதான் நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன் .. மத்தபடி வேணும்னு பண்ணல " என்றான் பவ்யமாய் ..

" இந்த ஒன்னும் தெரியாத பாப்பா வாய்ஸ் கு எல்லாம் நிலா மயங்க மாட்டா .. நான் ப்ரெஷ் ஆகணும் அப்பறம் பேசுறேன் .. "

" இப்போதானே கண் விழிச்சே நிலா .. உனக்கு வீக் ஆ இருக்கும்.. பாட்டியை ஹெல்ப் பண்ண சொல்லு...உனக்கு சங்கோஜமா இருந்தா பாட்டிக்கிட்ட போன் கொடு நானே சொல்லுறேன் " என்றான் மதியழகன் உண்மையான அக்கறையில். அவன் அன்பில் கரைந்த இதயத்தை அடக்க வழி தேடி தோற்று போனாள் நிலா .

" என்னம்மா உருகுறான் ? இவ்வளோ அக்கறை உள்ளவன் பக்கத்துலேயே இருந்து பார்த்துக்கணும் .. அதை விட்டுடு ஆபீஸ் லே கம்பியூட்டரை கட்டிக்கிட்டு இருந்தா ? " என்று மனதிற்குள் பொருமினாள் தேன்நிலா அவளின் மனமோ பதிலுக்கு " கம்பியூட்டரை விட்டுட்டு உன்னை கட்டிக்கணும்னு சொல்ல வர்றியா ? " என்றது .. அதன் கேள்விக்கு " ஆமா " என்று பதில் சொன்னவள் தன்னையே எண்ணி வியந்துதான் போனாள் ..

" ச்ச என்ன எண்ணம் இதெல்லாம் ... ஆனாலும் இந்த மது என்னை ரொம்ப படுத்தி எடுக்குறான் .. " அதற்குள் மதி மறுபடியும்

" ஹெலோ .. ஹெலோ .... நிலா இருக்கியாடா ? " என்றான் ..

" ம்ம்ம் ... அதெல்லாம் பண்ணும் வேணாம் மது ... எனக்கு பீவர்னா அப்படியே ஓய்ஞ்சு போயி இருக்குறது பிடிக்காது .. அம்மாகிட்ட மட்டும்தான் செல்லம் கொஞ்சுவேன்" ... (இனிமேல் உன்கிட்டயும் செல்லம் கொஞ்சுவேண்டா என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு வெளியில் "அதனால என்னை கொஞ்சம் ஆக்டிவ்வா இருக்க விடுங்க .. ரொம்ப முடியலன்னா நானே ரெஸ்ட் எடுத்துக்குறேன்" என்றாள் ..

அது அவளது இயல்பாய் இருந்தாலும் மதியழகனுக்கு அதில் விருப்பம் இல்லை .. எனினும் அவளது குணத்தை தனக்காக மாற்ற சொல்ல வேண்டாமே என்று எண்ணியவன் " சரி நம்ம வீட்டுல தானே இருக்க " என்று கொஞ்சம் நிம்மதியடைந்து கொண்டான் ..

" சரி நிலா .. பட் பத்ரமா இரு "

அவனது கவலை தோய்ந்த குரல் அவளையும் ஏதோ செய்தது .. பேச்சை மாற்ற எண்ணி வேண்டுமென்றே

" மருந்து எல்லாம் பார்த்தேன் மது .. எந்த டாக்டரை கூப்டிங்க " என்றாள்

" டாக்டர் மகரந்தன் .. என்னோட ப்ரண்டு ..."

" ஹ்ம்ம் ஒரு டாக்டரையே டாக்டர் பார்க்க வெச்ச பெருமை உங்களை சேரும் .. வருங்காலம் உங்களை போற்றும் " என்றாள் நிலா ஆரூடம் சொல்லும் தொனியில் ..

" ஹா ஹா .. தேவதையின் வாக்கு பலிக்கட்டும் .. தாங்கள் உத்தரவு தந்தால் இதர பணிகளை செவ்வனே முடித்துவிட்டு விரைவில் வீடு திரும்புவேன் " என்றான் அவனும் நாடகபாணியில் ..

" அப்படியே ஆகட்டும் " என்று சொல்லி சிரித்து, அவனது அறிவுரைகளை பொறுமையாய் உள்வாங்கி மனதில் அவளை கொஞ்சிவிட்டு போனை வைத்தாள் நிலா .. போனை வைத்தவள் புன்னகையுடன் பார்வையால் அந்த அறையை ஆராய அங்கு மாட்டபட்டிருந்த மதியழகனின் புகைப்படம், இது அவனது அறை என்பதை சொல்லாமல் சொல்லியது ...

" திருடா உன் வீட்டுல கெஸ்ட் ரூம் இல்லையாடா ? ரொம்பதான் என்னை தலையில் வெச்சு தாங்குற ... உன் செய்கையால் என் தவத்தை கலைக்கலாம்னு பார்க்குறியா ? "

" இனிமேதான் கலைக்கணுமா ஹனி ? " என்று மதியழகன் அவள் முன் வந்து கேட்பது போல இருந்தது அவளுக்கு..

" ஹ்ம்ம் இவன் இருந்தாலும் நம்மை ரொம்பத்தான் படுத்துறான் .. " என்று எண்ணிக் கொண்டே எழ முயன்று , சில நிமிட போராடத்திற்கு பிறகு எழுந்து நடக்கவும் தொடங்கினாள் நிலா .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.