(Reading time: 17 - 33 minutes)

 

ய்யோ! என் பொண்டாட்டி இவ்வளவு அழகா வெட்க படறாளே' என்றபடியே அவன் இன்னும் கொஞ்சம் நெருங்கி வர,

அம்மாடியோவ்! என்று கொஞ்சம் விலகி நின்றாள் அவள். இது எத்தனை நாளா? உங்க கொள்கையெல்லாம் எங்கே போச்சு?

கொள்கையா? அது எந்த கடையிலேடா கிடைக்கும்? என்று அவன் கேட்க  அழகாய் மலர்ந்து சிரித்தாள் அபர்ணா. அவள் சிரிப்பில் சேர்ந்துக்கொண்ட படியே சொன்னான் அவன் 'கண்ணம்மா நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உனக்கு எதாவது தரணுமே? என்ன வேணும் சொல்லு.

கொஞ்சம் யோசித்தவள் நான் ஒண்ணு கேட்பேன் என்றாள் கொஞ்சம் இறங்கிய குரலில் நீங்க ஏன்? எதுக்குன்னு கேட்காம ஓகே சொல்லணும்.

ஷுயர். என்ன வேணும் கேளு.

நான் வேறே யாரையும் பார்க்காம இப்படியே கிளம்பிடுவேன். நீங்க என்னை அனுப்பிடணும்.

மெல்ல மாறியது அவன் முகம். பதில் சொல்லாமல் அவளையே பார்த்திருந்தான் அவன்.

என்ன ஒகேயா?

சில நிமிட மௌனத்திற்கு பிறகு 'வரம் கேட்கறியா கண்ணம்மா?' என்றான் அவள் முகத்தை கண்களால் வருடியபடியே. 'புத்திசாலிடா நீ'.

இல்லை கண்ணா.... அவள் ஏதோ சொல்ல துவங்க....

'சரிடா.' அவள் முடிப்பதற்குள்  சட்டென சொல்லிவிட்டிருந்தான் அவன் 'நீ கிளம்பு.'

நிஜமாவா? அவன் முகத்தை வியப்புடன் பார்த்தாள் அவள். அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று புரியவே இல்லை அவளுக்கு.

நிஜமாதான் கிளம்பு. புன்னகையுடன் சொன்னான் அவன்.

ஸ்கூட்டியை கிளப்பினாள் அபர்ணா. அவள் அருகில் நின்றிருந்தான் பரத். விஷ்வாவின் கண்ணில் படாமல் கிளம்பும் நிம்மதி அவளுக்குள்ளே பிறந்தது.

கிளம்பும் நேரத்தில் சொன்னாள் அவள் ' அந்த சாக்லேட்டை சாப்பிடுங்க. அந்த குழந்தை கையிலேயே கொடுத்திடாதீங்க.

அழகாக சிரித்தான் பரத். 'கண்டிப்பா சாப்பிடறேன். பத்திரமா போய் சேர்ந்திட்டு போன் பண்ணு சரியா? குட் நைட்.

அவள் ஸ்கூட்டி கண்ணில் இருந்து மறையும் வரை அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருந்தவன், பல்வேறு யோசனைகளுடன் உள்ளே நுழைந்தான்

த்தனை நேரம் தாத்தாவுடனும், அஸ்வினியுடனும் பேசி விடைபெற்றுகொண்டு கிளம்பும் எத்தனத்தில் வாசலை நோக்கி நடந்தான் விஷ்வா. அவன் அருகில் நடந்தாள் இந்துஜா.

யோசனையுடனே நடந்த பரத், தோட்டத்துக்குள் நுழைந்த நேரத்தில் எதிரே வந்தவனுடன் யாரென்றே பார்க்காமல் மோதிக்கொண்டு, சாரியுடன் நிமிர அவன் எதிரே  நின்றிருந்தான் விஷ்வா. அவனருகில் அவன் கையை பிடித்தபடி இந்துஜா.

அடுத்த நொடியில் விஷ்வாவின் மீது பாய்ந்து, அவன் சட்டையை கொத்தாக பிடித்து, அவனை ஓங்கி அறைந்து, இப்படி ஏதாவது செய்து விடுவான் பரத் என்றே எதிர்ப்பார்த்தாள் இந்துஜா.

ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை அங்கே. மெது மெதுவாக தனது கண்களை நிமிர்த்தினான் பரத்.

அவன் கண்கள் விஷ்வாவை கீழிருந்து மேலாக அளந்தன. பின்னர் அவன் கண்கள் விஷ்வாவின் முகத்தில் நிலைத்தன.

பல நாட்களுக்கு பின் விஷ்வாவின் முகத்தை இன்றுதான் சில நொடிகள் ஆழமாக பார்த்தான் பரத். பரத்தின் கண்களில் என்ன இருந்தது என்று சத்தியமாக புரியவில்லை விஷ்வாவுக்கு.

அடுத்ததாக அவன் பார்வை இந்துவின் மீது பதிய, கொஞ்சம் திடுக்கென்றது அவளுக்கு. விஷ்வாவின் கையை சட்டென விடுவித்துவிட்டு கொஞ்சம் விலகி நின்றாள் அவள்.

ஒரு பெருமூச்சு எழுந்தது பரத்திடம். அவன் பார்வை இந்துவை ஊடுருவ, கொஞ்சம் தடுமாறித்தான் போனாள் அவள்.

'இ..இல்லண்ணா. விஷ்..விஷ்வா அம்மாவை பார்க்கட்டும்னு நா...ன் தா...ன் வ....ர சொன்....னேன். எல்லாரும் வந்திருக்காங்க. விஷ்வா...ம..ட்டும்... பாவம்ண்ணா அவன்.'

பார்வையை அவளை விட்டு அகற்றவேயில்லை பரத்.

'தப்பு எல்லாம் என்னோடது தான். திட்டுறதுன்னா என்னை திட்டு. சாரிண்ணா உன்கிட்டே கேட்காம  நான் இதை செஞ்சது தப்புதான் ப்ளீஸ் சாரிண்ணா' அவள் குரல் கெஞ்சலுடன் ஒலிக்க, விஷ்வாவினுள்ளே சுரீரென்று ஏறியது உஷ்ணம்.

'ஹேய்... நான் எங்க அம்மாவை பார்க்க வந்தேன். அதுக்கு யார்கிட்டே சொல்லணும். யாரை கேட்கணும். நாம ஏதோ பெரிய தப்பு பண்ணிட்ட மாதிரி  சாரியெல்லாம் கேட்டுட்டு இருக்கே நீ. அவனை பார்த்து ஏன் பயப்படறே நீ.? அப்படி என்ன பண்ணிடுவான் உங்க அண்ணன்.?' கண்களில் ஏறிய கோபத்துடன் பரத்தை பார்த்தான் விஷ்வா.

'நான் இனிமே அடிக்கடி இங்கே வந்து எல்லாரையும் பார்ப்பேன். என்னடா பண்ணுவே நீ?' கேட்டான் விஷ்வா.

பதிலே பேசவில்லை பரத்., பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு தனது பாக்கெட்டிலிருந்து அபர்ணா கொடுத்த சாக்லேட்டை மெல்ல வெளியே எடுத்தான் அவன். அவன் மனதிற்குள் பல்வேறு கணக்குகளும் யோசனைகளும் ஓடிக்கொண்டிருக்க அவனது விரல்கள் சாக்லேட்டுடனே விளையாடிக்கொண்டிருந்தன.

சரியாக இரண்டு நிமிடங்கள் கழித்து ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக, பார்வையை நிமிர்த்தி விஷ்வாவை ஆழமாக பார்த்தான் பரத். பின்னர் முகத்தில் எந்த உணர்வையுமே வெளிக்காட்டாமல், அந்த சாக்லேட்டை பிரித்து சுவைத்தபடியே அந்த இடத்தை விட்டு அகன்றான் அவன்.

வியப்பின் உச்சியில் நின்றிருந்தான் விஷ்வா 'நிலாப்பொண்ணு' என்றான் அவன். என்னாச்சுடா உங்க அண்ணனுக்கு? இங்கே பெரிய சுனாமியே வரப்போகுதுன்னு நினைச்சு நான் ரெடியானேன். அவன் பாட்டுக்கு சாக்லேட் சாப்பிட்டுட்டு போயிட்டான்?

அவளுக்கும் பதில் தெரியவில்லை. வியப்புடன் அவன் சென்ற திசையையே சில நிமடங்கள் பார்த்தபடி நின்றிருந்தனர் இருவரும்.

நேரம் இரவு ஒன்பது மணியை தாண்டிக்கொண்டிருக்க, மருத்துவமனையில் இருந்தான் சுதாகரன். ஒரு அறுவை சிகிச்சைக்கு தயாரகிக்கொண்டிருந்தான் அவன்.

வீட்டில் இருந்தாள் ஜனனி. ஊரில் எல்லாரும் புது வருடத்தை வரவேற்க தயாராகிக்கொண்டிருக்க, அவள் மனதிற்குள் சின்னதாக ஒரு ஆசை.

யோசனையுடனே சுதாகரனை அழைத்தாள் அவள்.

ஜில்லு... சொல்லுமா...

பிசியா இருக்கீங்களா?

இல்லைடா. இனிமேல்தான் ஒரு எமர்ஜென்சி சர்ஜரிக்கு போகணும். என்ன வேணும்  சொல்லுடா.?

சர்ஜரி முடிய எவ்வளவு நேரம் ஆகும்.?

ஒன்றரை மணி நேரம் ஆகும். உனக்கு என்னடா ஜில்லு வேணும்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.