(Reading time: 17 - 33 minutes)

 

ல்லை நாளைக்கு புது வருஷம் ஆரம்பிக்க போகுது. கரெக்டா பன்னிரண்டு மணிக்கு நீங்க வந்து எனக்கு விஷ் பண்ணுவீங்களா? ப்ளீஸ்.

அவள் கேட்ட விதம் அவனை அப்படியே உருக்கியது. திருமணம் ஆகி இத்தனை நாள் கழித்து அவனிடம் அவள் வாய்விட்டு கேட்ட முதல் பரிசு இது',

கண்டிப்பாடா. கண்டிப்பா வரேன். கரெக்டா பன்னிரண்டு மணிக்குள்ளே அங்கே வந்து நிற்பேன்.  டோன்ட் வொர்ரி. சொன்னான் அவன்.

அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருந்தது. நேரம் நகர்ந்துக்கொண்டிருந்தது. எல்லாம் முடிந்து அவன் நிமிர்ந்த போது நேரம் பதினொன்றை நெருங்கி விட்டிருந்தது.

தனது அறையில் வந்து அமர்ந்து, சூடாக ஒரு காபியை குடித்து நிமர்ந்த போதுதான் ஜனனியின் நினைவு வந்தது சுதாகரனுக்கு.

நேரம் பதினொன்று பத்து. உடனே கிளம்பினால் சரியாக இருக்கும். அவன் தனது அறையை விட்டு வெளியே வர, ஐ.சி.யூவிலிருந்து மீண்டும் அழைப்பு.

'டாக்டர் இப்போ சர்ஜரியான பெண்ணுக்கு  கொஞ்சம், மூச்சு திணறல், உடனே வரீங்களா?

ஐ.சி.யூவில் மூச்சுத்திணறிக்கொண்டு படுத்திருந்தாள் அந்த பெண். வாசலில் கைக்குழந்தையுடன் அவள் கணவன்.

அவன் ஒரு மருத்துவன். கடமை என்று வந்து விட்ட பிறகு ,குடும்பம் மனைவியை பற்றி நினைத்துக்கொண்டிருக்க முடியாது.

அந்த பெண்ணுக்கு தேவையான ஊசியை போட்டுவிட்டு. அங்கேயே காத்திருந்தான் சுதாகரன். கண்கள் கடிகாரத்தின் மீது, எண்ணம் ஜனனியின் மீது.

அவன் மனைவி அவனிடம் முதல் முதலாக ஆசையாக கேட்ட ஒரு விஷயத்தை செய்ய முடியாமல் போய் விடுமா?

பன்னிரெண்டு மணிக்கு அவளை பார்த்து, அவளை வாழ்த்தி, சின்னதாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டால் போதும்.

'ஜில்லுமா. வந்திடறேண்டா' மனதிற்குள் சொல்லிக்கொண்டு அமர்ந்திருந்தான்.அந்த பெண்ணின் மூச்சு திணறல் கட்டுப்பட்ட போது நேரம் 11.40.

அங்கே இருந்த நர்ஸ்களிடம் இரவுக்கு தேவையான ஆணைகளை பிறப்பித்து விட்டு, வாசலில் காத்திருந்த அந்த அந்த பெண்ணின் கணவர் அவன் கையை பிடித்துக்கொள்ள, அவருடைய பயத்தை தெளிவித்து விட்டு, ஒரு முறை ஜனனியை அழைத்து 'இதோ வந்திட்டே இருக்கேண்டா  ஜில்லு' சொல்லிவிட்டு  அவன் காரை கிளப்பிய போது நேரம் 11.50.

காரை கிளப்பிக்கொண்டு விரைந்தான் அவன். தெருவெங்கும் புது வருட கொண்டாட்டங்கள்.

இவ்வளவு வேகமாக அவன் காரை செலுத்தியதே இல்லை. கிட்டத்தட்ட பறந்தான் அவன். அவன் மனைவி தானே,  இரண்டு நிமிடங்கள் தாமதமாக போனால் தான் என்ன.? அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை அவன்  மனம்.

அவளை பன்னிரண்டு மணிக்குள் பார்த்தே விட வேண்டுமென்று அப்படி ஒரு தவிப்பு அவனுக்குள்ளே.

வாசலில் வந்து நின்றிருந்தாள் ஜனனி. நேரம் 11.56. அவனது வீட்டுக்கு  இன்னமும் ஒரு  கிலோமீட்டர் தூரம் இருக்கும் நிலையில், கார் ஒரு குலுக்கலுடன் நின்றே போனது.

என்னவாயிற்று? புரியவவில்லை அவனுக்கு. சட்டென ஏதோ ஒன்றை இழந்தது போலே இருந்தது அவனுக்கு.

இல்லை. பன்னிரண்டு மணிக்குள் சென்று அவளை வாழ்த்தியே ஆக வேண்டும். சட்டென ஒரு மின்னல். காரை பூட்டிவிட்டு ஓடத்துவங்கினான் சுதாகரன்.

இதுதானா? இதற்கு பேர்தான் காதலா? அவளுக்காக யோசித்திருக்கிறான், அவள் மன காயங்களை ஆற்றியிருக்கிறான், அவளை சிரிக்க வைத்திருக்கிறான், ஆனாலும் அப்போதெல்லாம் அவள் மீதிருந்த காதலை உணர்ந்ததில்லை சுதாகரன். அவள் மீதிருந்த காதலை முழுவதுமாக அவன் உணர்ந்த தருணம் இதுவாகத்தான் இருந்தது. காதல் அவனை செலுத்த தெருவில் ஓடிக்கொண்டிருந்தான் அந்த பிரபலமான மருத்துவன்.

சரியாக பன்னிரண்டு மணிக்கு அடைந்தே விட்டிருந்தான் வீட்டை. வாசலில் நின்றிருந்தவளின் முன்னால் மூச்சு வாங்க நின்றபடி சொன்னான் 'ஹாப்பி நியூ இயர் டா' ஜில்லு.

கொஞ்சம் திகைப்புடனே கேட்டாள் ஜனனி ' ஏன் இப்படி ஓடி வரீங்க?

இ..இ.. இல்லைடா. கா'.. கா..ர் ரி....ப்பேர்  ஆகிடுச்சு. உன்னை 12 மணிக்கு விஷ் பண்ணனும் அதான்.ஓ..ஓடி ரொம்ப நாள் ஆச்சு அ.. அதான் இப்படி மூச்சு வாங்குது.

அவன் நேசத்தில் வியந்து நெகிழ்ந்தே போனாள் ஜனனி. வாசல் என்றும் பாராமல் அவனை தன்னோடு இறுக்கிக்கொண்டு அவன் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டுக்கொண்டேயிருந்தாள் ஜனனி.

நேரம் பன்னிரெண்டை தாண்டிய பிறகும் மைதிலிக்கு உறக்கம் கிட்டவில்லை.

தனது கையால் ஒரு வாய் உணவு சாப்பிட்ட மகனின் முகத்தில் நிரம்பிய சந்தோஷத்தை மறக்க முடியவில்லை அவரால்.

ஊரிலே இருக்கிறவங்களையெல்லாம் கூப்பிட்டு சாப்பாடு போடறீங்க. உங்க பையனுக்கும் உங்க கையாலே ஒரு வாய் சாதம் போட்டால் அவரும் சந்தோஷ பட மாட்டாரா?

சுதாகரனின் வார்த்தைகள் அத்தையின் மனதை மாலையிலிருந்தே உறுத்திக்கொண்டேதான் இருக்கிறது,. சுருக்கென்று தைத்த அந்த வார்த்தைகள் அவரை உடனே இயங்க வைத்து விட்டது.

மகனின் சந்தோஷம் அவருக்கு நிறைவை தந்த நேரத்தில், மனதிற்குள் இன்னொரு கேள்வியும் எழுந்தது.

தன்னை விட்டு பிரிந்து போன மகன் நீ என்னுடன் வந்துவிடு, நீ எனக்கு வேண்டுமென்று வாய் விட்டு சொல்ல வேண்டும் என்று ஒரு தாய் எதிர்ப்பார்ப்பது மிகப்பெரிய தவறா? இதுவரை ஒரு முறையாவது அவன் அழைத்திருப்பானா? அப்படி அழைத்து விட்டால் நான் சந்தோஷ பட மாட்டேனா?

அவரது மனம் பழைய நினைவுகளில் பயணிக்க துவங்கியது. அதே நேரத்தில் தான் செய்தது எல்லாம் சரிதானா என்று மனம் சுயபரிசோதனை செய்ய துவங்கியது.

விஷ்வா அவருக்கு தாய்மை எனும் உணர்வை பரிசாக அளித்த முதல் மகன். சீமந்த புத்திரன்.

அவன் பிறந்தது முதலே அவனது தந்தை அவனது அருகில் இருந்து அவனை வளர்த்தது இல்லை. அவனுக்கு தாயும், தந்தையுமாக இருந்து வளர்த்தவர் இவரே. அவனது வளர்ச்சிக்காகவும், உடல் நலனிற்காகவும் இவர் தன்னை வருத்திக்கொண்ட நாட்கள் பல உண்டு.

அவனது ஜாதகம் அதனால் வந்த பிரச்னைகள் ஒவ்வொன்றாய் அவரது மனதில் வந்து போனது.

கண்டிப்பு என்பது மைதிலியின் உடன் பிறந்த குணம். தனது மகன் தனது பேச்சை கேட்டே ஆக வேண்டும் என்பது இவர் அவன்  மீது எடுத்துக்கொண்ட அதீத உரிமை. ஆனால் அதுவே தனக்கும் தனது மகனுக்கும் இடையில் ஒரு விரிசலை உருவாக்கிக் கொண்டிருப்பதை அப்போது  உணரவில்லை அவர்.

'நான் அதை புரிந்துக்கொள்ளாததுதான் தவறா? அப்போதே அதை உணர்ந்திருந்தால், எல்லாம் சரியாக நடந்திருக்குமோ?' தனக்குள்ளே கேட்டுகொண்டார் மைதிலி

விஷ்வா அவரை விட்டு பிரிந்த நாளின் நினைவுகள் மனதை அழுத்தியது..

அப்படி ஒரு தருணத்தை மைதிலி எதிர்பார்த்திருக்கவே இல்லை. தந்தையும் மகனும் பேசிக்கொண்டது எதுவும் அறிந்திருக்கவில்லை அவர்,

அன்று சாப்பாட்டு மேஜையில் எல்லாரும் அமர்ந்திருந்த அந்த நிமிடத்தில், கையில் பெட்டியுடன் இருவரும் புறப்பட, உடலில் சிறு குறையுடன் இருக்கும் மகளை, தனது கையில் பிடித்துக்கொண்டு, அதிர்ச்சியின் எல்லையில் நின்றிருந்தார் மைதிலி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.