(Reading time: 40 - 80 minutes)

காத்திருக்கவென முடிவுசெய்தான் கவின்.

ஆயிரம் கேள்வி கேட்ட அபூர்வ வேரி மணி என, வரும் வழியிலேயே மருத்துவமனை நல்ல மருத்துவமனைதானா? மருத்துவர் நம்ப தகுந்தவர் தானா என்பது உட்பட ஆயிரம் கேள்விகள் கேட்டு வந்திருந்த வேரிக்கு காத்திருக்க கவின் சொன்ன காரணம் முதலில் சம்மதமாக தெரிந்தது.

சற்று நேரம் காத்திருப்போர் லாஞ்சில் கவினுடன் அமர்ந்து அவனிடம் தான் இன்டெர் நெட்டில் கருவுற்றிருக்கும் காலத்தை பற்றி கற்றறிந்ததை, அதனால் அவளுக்குள் வந்திருக்கும் பயங்கள், குழப்பங்கள் எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருந்தவள் தன் முன் ஒருவர் இருமிக்கொண்டு போகவும் டென்ஷனானாள்.

“ப்ரெக்னன்சி டைம்ல எந்த டிசீஸ்க்கும் ட்ரீட்மெண்ட் எடுக்க முடியாதாம்....ஏன்னா அந்த மெடிசின் உள்ள இருக்கிற குட்டி பாப்பாவ அஃபெக்ட் செய்துடுமாம்....அதோட மதர்க்கு எந்த டிசீஸ் வந்தாலும் அது பேபிய ரொம்ப அஃபெக்ட் பண்ணுமாம்....அதனால மதர்க்கு இன்ஃபெக்ஷன் ஆகாம பார்த்துகிடனும்னு சொல்லி இருந்தாங்க...இங்க ஹாஸ்பிட்டல்ல இப்டி நிறைய பேஷண்ட் கூட உட்கார்ந்துகிட்டு இருந்தோம்னா அவங்களோடது நமக்கு வந்துடாதா?”

நர்ஸிடம் தங்கள் முறை வரும்போது அழைக்க சொல்லிவிட்டு மருத்துவமனை முகப்பில் இருந்த அந்த பெரிய காலி நிலத்தில் வாக்கிங் என்று அழைத்து வந்தான் கவின். மனைவியின் நிம்மதி முக்கியம்.

வனது கையைப் பிடித்துக் கொண்டு வானம் பார்த்த அந்த திறந்த வெளியில் நடுவிலிருந்த ஃபவ்ண்டனை சுற்றி தென்றல் சூழ சூழ நடப்பது வேரிக்க்கு முதலில் படு இன்பமாய் இருந்தது.

அவனது வேலைப் பளு காரணமாக அவர்களது தம்பதி பொழுதுகள் எல்லாம் அலுவலகத்திலும் தங்கும் வீட்டிலுமாக மட்டும்மாக வேலியிட பட்டிருக்க, இந்த நடை பயணமே வேரிக்கு தேன்நிலவாய் தோன்றியது.

ஆனால் ஆம்புலன்ஸில் அரைமயக்க நிலையில் ஒருவரை அனுமதிக்காக அழுதுபுரண்டபடி அவரது மனைவி மக்கள் கொண்டுவந்த காட்சியைப் பார்த்தவளுக்கு தேன்நிலவு மாறி தீம்பாலையானது.

அவள் தன் கையைப் பிடித்தவிதத்தில் கவினுக்கு விஷயம் விளங்க தங்கள் காருக்குள் அவளுடன் சென்று அமர்ந்தான் அவன். இஞ்சினை ஸ்டார்ட் செய்து ஏசியை ஆன் செய்துவிட்டு, விண்டோசை ஏற்றி வைத்தான்.

சற்று நேரம் வேத நாயகம் சாஸ்த்ரிகளின் கீர்த்தனைகளைப் கவினுக்கு பாடிக் காட்டிக் கொண்டிருந்தாள் வேரி.

“பாட்டுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்...உங்களுக்கு....?”

“கேட்க பிடிக்கும்தான் குல்ஸ்.....அதுவும் நீ பாடுறதை கேட்கிறப்ப சூப்பரா இருக்குது.... ஆனா எனக்கு பாடெல்லாம் வராது...எங்க வீட்ல பாட்டுன்னா வியன் தான்....ஆல்பம்லாம் போட்டுருக்கான்.....ஆனா இங்க்லிஷ் சாங்க்ஸ்.....”

வேரி தன்னை மறந்து சிரித்தாள்.

“என்னாச்சு குல்ஸ்...நினச்சு சிரிக்கிற அளவுக்கு அவன் பாட்டு இருக்காதே....”.

“எனக்கு மிர்னா பாடுறது ஞாபகம் வந்துச்சு....அவளுக்கு பாட்டுன்னா ரொம்ப இஷ்டம்...ஆனா அவ பாடுனா....ஜகமே ஆடும்...”

இப்பொழுது கவின் சிரித்தான்.

“ம்....அவளோட சிங்கிங் இன்ட்ரெஸ்ட் பத்தி வியன் சொல்லிருக்கான்....”

நான் ஆணையிட்டால் பாட்டை மிர்னா பாடிய அழகை தம்பி அண்ணணிடம் கதை அளந்திருந்தான்.

அவனோடு சிரித்த வேரி இயல்புக்கு திரும்பியதும் சொன்னாள்.

“கவிப்பா ....நம்ம குழந்தையையும் மியூசிக் க்ளாஸ்ல கண்டிப்பா சேர்த்துவிடனும்... லண்டன் மியூசிக் காலேஜ்ல எக்ஸாம் எழுத ரெடி பண்ற மாதிரி மியூசிக் இன்ஸ்டியூஷன் எதாவது இங்க அமஞ்சா நல்லா இருக்கும்...”

அவள் கனவுலகில் சஞ்சரிக்க....”இதெல்லாம் இப்ப எதுக்கு யோசிக்கிற குல்ஸ்...? குழந்தைக்கு எது பிடிக்குமோ அதை அப்ப பார்த்துகிடலாம்....”

சட்டென வாடியது வேரியின் முகம்.

“போங்கப்பா....முதல் முதல்ல குழந்தைக்கு ஒன்னு செய்யனும்னு சொல்றேன் மறுத்து சொல்றீங்களே...” சிணுங்கினாள்.

“ஏய்...நான் வேண்டாம்னு......” கவின் பதில் சொல்ல தொடங்க அதற்குள் இவர்கள் காருக்கு முன்னாக வந்து நின்றிருந்த ஆம்னியிலிருந்து இறந்தவர் சடலத்தை எடுத்து செல்லும் குளிர்பதனபெட்டியை இறக்கினார்கள் சிலர். அந்த ஆம்னி கிளம்பிச் சென்றது.

வேரியின் மனம் அதில் சலன ஐக்கியம். அவளுக்கு எதேதோ தோன்ற, நிறுத்திய காரில் ஏசியை ஆன் செய்துவிட்டு தூங்கியவர்கள் இறந்த செய்திகளை படித்ததும் ஞாபகம் வர துள்ளி விழுந்தாள்.

இவர்கள் காரில் எத்தனை நேரமாக ஏசியை ஆன் செய்து உட்கார்ந்திருக்கிறார்கள்?

“இப்ப உடனே கீழ இறங்கனும்...” அவசரமாக இறங்க ஆயத்தமானாள் அவள்.

“என்னாச்சு குல்ஸ்...இப்ப வேண்டாம்...”

சற்று தள்ளி இவர்கள் காருக்கு பின்புறம் மார்ச்சுவரி வேன் ஆயத்தமாக நிற்பதை ரியர் வியூவில் பார்த்திருந்தான் கவின். இறந்தவர் சடலத்தை இப்பொழுது கொண்டு வருவார்கள். அதைப் பார்த்து இவள் இன்னும் என்ன மாதிரி மனம் கசிவாளோ?

“இல்ல ரொம்ப நேரம் ஏசி ஆன் செய்து கார்ல இப்டி இருந்தவங்களுக்கு எதாவது ஆகி இருக்காம்...எல்லாருக்கும் எதாவது ஆகிடுதுன்னு சொல்ல முடியாட்டாலும்...கொஞ்சமாவது எல்லோருக்கும் அது ஹார்ம்ஃபுல் தான....அப்டின்னா நம்ம பாப்பாக்கு எதாவது ஆகிட்டா?”

அவளை ஒரு பார்வை பார்த்தான் கவின்.

இந்த பதறும் குணம் தாய்மையின் இயல்பா? இல்லை இவன் மனைவியின் சுபாவமா?

ரியர் வியூவில் இப்பொழுது சடலம் கொண்டு வரப்படுவது கவினுக்கு தெரிந்தது.  அவன் மனைவி இக்காட்சியால் நோகலாமா? அவள் கவனத்தில் இன்னும் அக் காட்சி கண்ணுக்கு வரவில்லை.

“இன்னும் ஃப்யூ மினிட்ஸ் குல்ஸ்..... இருந்ததே இருந்தாச்சு....”

“திறந்து விடுங்க....” முடிந்தவரை தன் இருக்கையிலிருந்து எழுந்து, கணவனின் குறுக்காக குனிந்து ஓட்டுனர் இருக்கை புறம் இருந்த சென்ட்ரல் லாக்கை ரிலீஸ் செய்யும் பட்டனை தேடி  கை நீட்டினாள் வேரி.

அவன் முகமருகில் நீண்டிருந்தது அவள் முகம். கவின் அதை வலக்கையால் பற்றினான் கணவனாக. அவள் தடுமாறி விழுந்துவிடாத படி மறுகையால் அவளை இடையோடு வளைத்தவன், அவளை தன் இதழ்களால் மௌனிக்க செய்தான். கண்மூடினாள் அவள்.

முதலில் மறுப்பாக இரண்டு அடி அவனது தோளில் வைத்த மனைவியோ...அடுத்து அவனுடன் இயைந்து போனாள்.

மீண்டும் அவளை அவன் கண் திறக்க அனுமதித்த போது, அந்த மார்ச்சுவரி வேன் கடந்து சென்றிருந்தது.

“போங்கப்பா...வர வர உங்க அட்டகாசம் தாங்க முடியலை... முதல்ல ஆஃபீஸ்...இப்ப காரா? உங்க காதல் சாம்ராஜ்ய எல்லை  விரிஞ்சுகிட்டே போகுது...”

 குறும்பு நகை அவனிடம். “இல்லையே...அது ஒற்றை புள்ளி புயலாய்  உன் மேல மட்டுமா குறுகி போய்தானே இருக்குது...”

“போடா....”

“வாடி...” கதவை திறந்துவிட்டான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.