(Reading time: 21 - 41 minutes)

கொஞ்சம் வியப்புடனே அவனை பார்த்தாள் அர்ச்சனா. இவ்வளவு பாரங்களை தாங்கிய பிறகும் அப்பாவின் மீது கொஞ்சம் கூட வெறுப்பு இல்லாமல் எப்படி பாவம் என்று சொல்ல முடிகிறது அவனால்.

பின்னர் மெல்ல சொன்னாள் இல்லை வசந்த், இப்போ தான் மனசு லேசா இருக்கு. ஊருக்கு கிளம்பி போயிருக்கார். தன்னோட தப்பை உணர்ந்திருப்பார். என்கிட்டே பேசுவார் வசந்த். என்னை புரிஞ்சிட்டு நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பார். நீ வேணும்னா பாரு. நம்பிக்கையுடன் சொன்னாள் அர்ச்சனா.

'புரிந்துக்கொள்ள வேண்டும் அவர் . எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும்' என்று வேண்டியபடியே காரை நகர்த்தினான் வசந்த்.

மறுநாள் காலை மனோ, அவனது அப்பா, விவேக் மூவரும் சென்னையை அடைந்தனர்.பலமுறை தட்டியும் கதவை திறக்கவில்லை அர்ச்சனாவின் அப்பா. விவேக் தனது கைவசம் இருந்த சாவியை வைத்து கதவை திறந்து உள்ளே சென்ற போது மூவரையும் தாக்கியது அந்த அதிர்ச்சி.

கட்டிலின் மீது உயிரற்ற உடலாக கிடந்தார் அர்ச்சனாவின் அப்பா.

மூவரும் உறைந்தே  போனார்கள். உடைந்து சுக்கலாகி போனான் மனோ. 'எப்படி? எப்படி அர்ச்சனாவை பார்ப்பேன். என்ன சொல்லி தேற்றுவேன் அவளை. நொறுங்கி விழுந்துவிடுவாளே என் தங்கை.

மனோவின் அப்பா குலுங்கிகொண்டிருந்தார். 'எப்படிப்பா இப்படி ஆச்சு? என்றார் விவேக்கை பார்த்து.

'தூக்கத்திலேயே போயிருக்கணும் அங்கிள்' என்றான் அவன். சில நேரம் இப்படி நடக்கும்.

தனது  சித்தப்பாவையே பார்த்தபடி நின்றிருந்தான் மனோ. 'கடைசி நேரத்தில் என்ன நினைத்தாரோ? எப்படி துடித்தாரோ.? இதயம் கனத்தது அவனுக்கு.

அப்பாவின் பக்கம் திரும்பி மெல்ல சொன்னான் 'அர்ச்சனாவாலே தாங்க முடியாது பா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு'.

மெல்ல நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தார். சில நிமிடங்கள் மெளனமாக யோசித்தபடியே இருந்தார்.

'எப்படி இருந்தாலும் அவளுக்கு சொல்லணுமே'? என்றான் விவேக்.

சொல்லிடு என்று எழுந்தார்  அப்பா. நான்  போயிட்டேன்னு சொல்லிடு. என்றார் மனோவின் அப்பா. அர்ச்சனாவின் அப்பாவுடைய இரட்டை சகோதரரான மனோவின் அப்பா,

'அப்பா ' அதிர்ந்து போய் எழுந்தான் மனோ. ' என்னப்பா பேசறீங்க'

ஆமாம்டா .எனக்கும் அவனுக்கும் பெரிசா எதுவும் வித்தியாசம் இல்லையேடா. ட்ரெஸ்சும் கண்ணாடியும் தானே அதை மாத்திடுவோம்.

தப்பில்லையாப்பா இது? துரோகம்பா. என்றான் மனோ.

டேய்! பைத்தியக்காரா குரலை சற்று உயர்த்தினார் அப்பா.

பின்னர் குரலை தழைத்துக்கொண்டு சொன்னார் 'இதனாலே வசந்த் அர்ச்சனா கல்யாணம் மட்டும்தான் நடக்காதுன்னா நான் அப்படியே விட்டுடுவேன். காலம் பூரா அவங்க இப்படியே இருந்தாலும் ஒண்ணும் பிரச்சனை இல்லை. ஆனால் அர்ச்சனா பத்தி எனக்கு தெரியும்டா. கொஞ்சம் நினைச்சு பாரு நேத்து தான் முதல் தடவையா அவ மனசுக்கு மரியாதை கொடுத்து தைரியமா  பேசியிருக்கா இப்போ திடீர்னு இப்படின்னு தெரிஞ்சா காலம் பூரா குற்ற உணர்சியிலேயே செத்துடுவாடா.

சிறிது நேரம் அங்கே மௌனம் நிலவியது. அவ அப்பாவை பார்த்து அந்த நிமிஷமே பைத்தியம் ஆயிட்டான்னா என்னடா செய்வே? இல்லைன்னா வாழ்கையிலே பிடிப்பே இல்லாம  அலைஞ்சானா யாராலே நிம்மதியா இருக்க முடியும்? என்றார் மனோவின் அப்பா,

மெல்ல நிமிர்ந்து விவேக்கின் முகத்தை பார்த்தான் மனோ.

அர்ச்.. அர்ச்சனா நிம்மதியா இருப்பானா சரி என்றான் அவன். நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன். பட் இது ப்ராக்டிகலா பாசிபிளா?

'நடக்கும்' என்றார் அப்பா. நான் பார்த்துக்கறேன். நிறைய பொய் சொல்லணும் அவ்வளவுதான். இவன் வேலை பார்த்த இடத்திலே மட்டும் உண்மையை சொல்லணும். நான் சமாளிச்சுக்கறேன்'

தலையில் கை வைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தான் மனோ.

'நான் போறதுனாலே யாருக்கும் பெரிசா எந்த பிரச்னையும் இல்லை'. என்றார் அப்பா.

அப்பா ப்ளீஸ் ..... என்றான் மனோ.

ஏண்டா என்றார் அவர். உன்னை மாதிரி கிறுக்கனுக்கு அப்பாவா இருந்து போர் அடிச்சுபோச்சு. கொஞ்ச நாள் அர்ச்சனாவுக்கு அப்பாவா இருக்கேன் விடு.

இந்த நேரத்திலும் எப்படிதான் இப்படி பேசுகிறாரோ அவர்.?

'அர்ச்சனாவுக்கு போன் பண்ணுடா' என்றார்

என்னாலே முடியாது. என் வாயாலே நான் அபப்டி சொல்ல மாட்டேன் என்றான் மனோ.

'நீ பேசுப்பா என்றார் விவேக்கை பார்த்து. சில நொடி யோசனைக்கு பிறகு. அர்ச்சனா வேண்டாம். வசந்த் கிட்டே சொல்வோம்' என்று அவன் எண்ணை அழுத்தினான் விவேக்.

பெங்களூர் எடுத்திட்டு வரோம்னு சொல்லிடுபா. என்றார் அப்பா

செய்தியை கேட்டு அதிர்ந்தே போனான் வசந்த். 'பெங்களூர் வரோம். கொஞ்சம் ஏற்பாடுகள் பண்ணிடுங்க' என்றான் விவேக்.

அர்ச்சனாவின் அப்பாவின் உடைகளை மாற்றி தனது உடைகளை அணிவித்த போது மறுபடியும் உடைந்து போனார் அப்பா.

படு பாவி இப்படி உன் பொண்ணை விட்டுட்டு போயிட்டியே டா!

வீட்டை அடைந்த போது மனோவை நோக்கி ஓடி வந்தனர் அர்ச்சனாவும் , வசந்தும். அப்படியே அவன் தோளை அணைத்துக்கொண்டான் வசந்த். குரல் உடைய  'எப்படிடா' என்றான்.

பதிலேதும் சொல்லாமல் இடம் வலமாக தலையசைத்தபடி அர்ச்சனாவின் முகத்தை ஆராய்ந்தான் மனோ.வாய் நுனி வரை வந்த வார்த்தைகளை அப்படியே அழுத்திக்கொண்டான்.

அதிகம் உடைந்து போனவன் வசந்தாகதான் இருந்தான்.

'எங்கப்பாவுக்கபுறம் உங்களைத்தானே அப்பாவா நினைச்சிருந்தேன். இப்படி ஏமாத்திட்டீங்களேபா.

மனோவின் தோளை அழுத்தி சொன்னான் ' அழுதிடுடா மனசை அடக்காதே'

இல்லைடா ஐ. யாம் ஆல் ரைட் என்றான் மனோ.

கதறிய அர்ச்சனாவை பார்க்க முடியாமல் அறையின் உள்ளே சென்று சுவற்றில் சாய்ந்து அமர்ந்தான் மனோ. கண்களில் கண்ணீர் வழிந்துக்கொண்டிருந்தது.

உள்ளே வந்தார் அப்பா.' என்னடா?' என்றார்

பதில் சொல்லவில்லை அவன்.

'யாருக்கும் கிடைக்காத பாக்கியம்டா' என்றார் அப்பா. நான் போனா எல்லாரும் எப்படி அழுவாங்கன்னு நானே பார்க்கிறேன் பார்த்தியா? என்ன என் பிள்ளை அழறதை மட்டும் நான் பார்க்க முடியலை.

கையெடுத்து வணங்கினான் மனோ. ' போதும் பா. நான் செத்திடுவேன்'

கடைசி நிமிடத்தில் கிளம்ப எத்தனித்த நிமிடத்தில் திடீரென்று மொத்தமாக உடைந்து போனாள் அர்ச்சனா. என்ன தோன்றியதோ 'பெரியப்பா...' என்று அவள் கதறிய கதறலில் எல்லாருமே சற்று ஆடிப்போயினர்.

மனோவின் தோளை அழுத்தி அப்பா சொன்னார் ' அவ அழட்டும் விடு. அது அவள் கடமை. அவள் கண்ணீர் அவள் அப்பாவை போய் சேரட்டும்' விக்கித்துப்போய் நின்றிருந்தான் மனோ.

சில நிமிடங்கள் கழித்து  தண்ணீர் பாட்டிலுடன் வந்து அவள் தோளை அணைத்துக்கொண்டான் வசந்த். போதும்டா கொஞ்சம் தண்ணி குடி'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.