(Reading time: 21 - 41 minutes)

ல்லாம் முடிந்து போயிருந்தது. சில நாட்கள் எல்லாரையும் மௌனமே சூழ்ந்திருந்தது. அப்பாவும் யாருடனும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.

அர்ச்சனாவின் அப்பாவின்  உடைகளிலேயே வலம் வந்துக்கொண்டிருந்தார் அவர்.

வசந்துக்குள்ளே மட்டும் ஏதோ ஒன்று நெருடிக்கொண்டே இருந்தது.

எத்தனை ஆண்டுகளாக மனோவை பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனை பற்றி மிக நன்றாக தெரியும் அவனுக்கு, அது எப்படி அப்பாவின் மரணத்தை இத்தனை எளிதாக எதிர்க்கொண்டான் அவன்?

ஏதோ ஒன்று சரியில்லை என்று உள்மனம் உறுத்திக்கொண்டே  இருந்தது அவனுக்கு.

எல்லாம் முடிந்து பதினைந்து நாட்கள் கடந்து விட்டிருந்தது. எல்லாரும் ஊருக்கு கிளம்பி விட்டிருந்தனர் .

ஓய்வாக அமர்ந்து டி.வியை திருப்பிக்கொண்டிருந்தான் வசந்த். அப்போது வசந்த் வீட்டுக்குள் ஒரு கவருடன் வந்தான் மனோ..

என்னடா? என்றான் வசந்த்.

உனக்கு புது டிரஸ் என்றான் மனோ.

எதுக்குடா?

நாளைக்கு உனக்கும் அர்ச்சனாவுக்கும் மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ணப்போறோம்.

திடுக்கிட்டுபாய் நிமிர்ந்தான் வசந்த் என்னடா? அவங்க அப்பா சமம்திச்சிட்டாரா?

ம். சம்மதிசிட்டார். அவர்தான் நாளைக்கே ரிஜிஸ்டர் பண்ணிடலாம்னு சொன்னார்.

ஏண்டா? உங்கப்பா போய் இன்னும் ஒரு மாசம் கூட ஆகலை அதுக்குள்ளே என்னடா அவசரம்.?

மனோவின் முகத்தில் ஒரு தீவிரம் படர்ந்தது. ' இந்த மனோ உனக்கு நல்லதை மட்டும்தான் செய்வான்னு நம்பறியா நீ?

டேய்... என்னடா நீ?

அப்படி  நம்பறேங்கிறது உண்மைன்னா எந்த கேள்வியும் கேட்காம நாளைக்கு மார்னிங் ரெடியாயிருக்கே. நாளைக்கு ரிஜிஸ்டர் மட்டும்தான் பண்ணப்போறோம் வேறதுவும் இல்லை. பேசாம கிளம்பு. உன் கார்லே தான் போறோம். காரும் ரெடியாயிருக்கணும். நகர்ந்து விட்டிருந்தான் மனோ.

வியப்பில் ஆழ்ந்திருந்தான் வசந்த். சம்மதித்து விட்டரா? அர்ச்சனாவின் அப்பாவா? இருக்கவே முடியாது என்றே தோன்றியது. இது மார்கழி மாதம். இந்த மாதத்தில் திருமணத்தை நடத்த எப்படி ஒப்புக்கொண்டார் அவர். மனம் திரும்ப திரும்ப சுழன்றது.

மனோ சொல்லிவிட்ட அந்த வார்த்தைகளுக்கு அப்படியே கட்டுப்பட்டவனாக மறுநாள் கிளம்பி விட்டிருந்தான் வசந்த்.

காலையில் குளித்து விட்டு பூஜை அறைக்குள் சென்று கண்களை மூடிக்கொண்டு அமர்ந்தான் மனோ.

அவன் உதடுகள் மெல்ல சொன்னது 'என்னை மன்னிச்சிடுங்க சித்தப்பா.'

துடித்திருக்கக்கூடும் இந்த பூமியை விட்டு செல்லும் முன் அவர் உள்ளம் தவித்திருக்கக்கூடும். ஏனோ மகளின் அன்பை சரியாக புரிந்துக்கொள்ளும் சந்தர்ப்பம் அவருக்கு வாய்க்கவில்லை.

'மன்னிச்சிடுங்க சித்தப்பா என்றான் மனோ. இப்போ நீங்க எங்கே இருந்தாலும் அர்ச்சனாவை புரிஞ்சுக்கிட்டு ஆசீர்வாதம் பண்ணுங்க. அவ சந்தோஷமா இருக்கணும். சில நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டு பூஜை அறையிலேயே அமர்ந்திருந்தான் மனோ.

எண்ணங்கள் அத்தனையும் ஒன்று திரட்டி, கண்களில் நீர் திரள வேண்டிக்கொண்டான் மனோ. பூஜை அறையை விட்டு அவன் வெளியே வரும் போது மனம் லேசாகிப்போயிருந்தது,

கிளம்பிக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.

கிட்டத்தட்ட இருபது நாட்கள் கழித்து நேற்றுதான் மாடி ஏறி வந்திருந்தார் அப்பா.

அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் போதே, அர்ச்சனாவின் கண்களில் நீர் சேர துவங்கியது. அப்பாவை மன்னிப்பியாமா? நான் ஒரு ..... அவர் முடிப்பதற்குள் அவர் தோளில் சாய்ந்து விம்ம துவங்கிவிட்டிருந்தாள் அர்ச்சனா.

அவள் தலையை வருடியபடி சொன்னார் ' யாருக்கு எப்போ என்ன வருதுன்னு தெரிய மாட்டேங்குது மா. நல்லா  இருந்தவன் பட்டுன்னு போயிட்டான் பாரு.'

மெல்ல நிமிர்ந்தாள் அர்ச்சனா

இருக்கிற வரைக்கும் எல்லாரும் சந்தோஷமா இருப்போம். நாளைக்கே உனக்கும் வசந்துக்கும் கல்யாணம் ரிஜிஸ்டர் பண்ணிடுவோம்

பதில் எதுவுமே பேசாமல் தலையசைத்து விட்டிருந்தாள் அர்ச்சனா.

அதிக பகட்டில்லாத கண்களை உறுத்தாத அலங்காரத்தில் வசந்த் வீட்டுக்குள் நுழைந்தாள் அர்ச்சனா.

காரின் உறையை அகற்றி அதன் மீது விழுந்திருந்த பூக்களை அகற்றிக்கொண்டிருந்த போது வசந்த் தூக்கிப்போட்ட பூ ஒன்று அர்ச்சனாவின் மீது சென்று விழுந்தது.

'தேங்க்யூ' என்று சிரித்தவளை சட்டென்று நிமிர்ந்து பார்த்து புன்னகைதான் வசந்த்..'வாவ்! மேடம் ரெடியா?

ம்? நீ ரெடியா?

நான் நாலு வருஷமா ரெடியா தாண்டா இருக்கேன் சிரித்தவன், அழகாக புன்னகைத்தவளின் முகத்தை ஆராய்ந்தபடியே கேட்டான் 'அப்பா உன்கிட்டே பேசினாராடா?

ம். என்றாள். பெரியப்பாதான் அவர் மனசை மாத்தி இருக்கணும்.

அது சரிடா. ஆனால் எதுக்கு இவ்வளவு அவசரம்னு புரியலை. பெரியப்பா போய் இன்னும் ஒரு மாசம் கூட ஆகலையேமா?

எனக்கும் உடன்பாடு இல்லைதான் வசந்த். ஆனால் மறுபடியும் தள்ளிப்போடுற தைரியமும் எனக்கில்லை உனக்கிருக்கா?

பதில் சொல்ல முடியவில்லை அவனால்.

ரிஜிஸ்டிரேஷன் தானே முடிச்சிடுவோம் வசந்த்.

புன்னகையுடன் தலையசைத்தான் 'ஓகே'

எல்லாம் முடிந்ததும் வசந்தின் கையை பற்றி குலுக்கி தன் தோளோடு அணைத்துக்கொண்டார் அப்பா. 'என் பொண்ணை பார்த்துக்கோபா'

ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்து விட்டிருந்தனர் அனைவரும்.

மாலை ஆறரை மணிக்கு வசந்தை அழைத்தான் மனோ. உன் மாமனார் உன்கிட்டே பேசணுமாம். வீட்டுக்கு வாடா.

வீட்டுக்குள் நுழைந்தவுடன் ' மாடியிலே இருக்கார் போ' என்றான் மனோ.

மெல்ல மாடிப்படி ஏறினான் வசந்த். மாடி அறையின் கதவு சாத்தியிருந்தது. கதவை தட்டும் முன் ஒரு சின்ன தயக்கத்தோடு வெளியே நின்றவனின் உடல் ஒரு திடுக்கிடலோடு குலுங்கி ஓய்ந்தது.

மாடி அறையின் உள்ளே அர்ச்சனாவின் அப்பா. உரத்த குரலில் யாருடனோ, சரளமான ஹிந்தியில் உரையாடிக்கொண்டிருந்தார்.

எப்படி? எப்படி? எப்படி அது? சில நாட்களுக்கு முன், ஆட்டோ டிரைவருடன் பேச முடியாமல் தவித்தவரா இத்தனை சரளமாக ஹிந்தியில் பேசிகிறார்? வாய்ப்பே இல்லை. அப்படியென்றால்? அப்படியென்றால்? உள்ளே இருப்பது யார்?

உடல் நடுங்கியது வசந்துக்கு. கைப்பிடி சுவரை பிடித்தபடி நின்றான். அப்படி என்றால் உள்ளே இருப்பது மனோவின் அப்பாவா?

பதினைந்து நாட்களாக மனதை அழுத்திக்கொண்டிருந்த எல்லாக்கேள்விகளுக்கும் ஒரே நிமிடத்தில் பதில் கிடைத்து விட்டிருந்தது போலே இருந்தது.

ஏன்? விளையாடி இருக்கிறானா மனோ? ஏன்? சுவாசம் தடுமாறுவது போல் இருந்தது. கண்களை மூடி சுவாசத்தை சீராக்கிகொண்டு சில நொடிகள் கழித்து மெல்ல கதவை தட்டினான் வசந்த்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.