(Reading time: 21 - 42 minutes)

ட.. வாங்க ஆன்ட்டி… வாங்க அங்கிள்…” என தன் புகுந்த வீட்டிற்கு வருகை தந்த பாலா- வள்ளியின் பெற்றோரை வரவேற்றாள் மஞ்சரி…

“என்னம்மா… சம்மந்தி எங்க?...” என்ற உமாவிடம், “கோவிலுக்கு போயிருக்காங்க பெரியவங்க நாலுபேரும்… இப்போ வந்துடுவாங்க…” என்றாள் மஞ்சரி…

“சரிம்மா… ஆமா எங்க மாப்பிள்ளைகளைக் காணோம்?...”

“அவங்களா வள்ளிஅப்பா… யுவி சார், வீட்டுல தான் இருக்குறார்… துணா சாரும், பாலாவும் வெளியே போயிருக்காங்க… என் வீட்டுக்காரர் இங்க பக்கத்துல கடைக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போயிருக்குறார்…”

“சரிம்மா… வள்ளி எங்கே?...”

“ஓ… மேடமைக் கேட்குறீங்களா பாலாஅப்பா?... ராமர் இருக்குற இடம் தான சீதைக்கு அயோத்தி… அந்த மாதிரி, யுவி சார் தோட்டத்துல இருக்குறார்னு இவளும் அங்க தான் இருக்குறா...”

“ஹேய்… வாயாடி… அவளை வம்பிழுக்கலைன்னா உனக்கு தூக்கம் வராதே?...” என்றார் கஸ்தூரி…

“அப்படித்தான்னு வச்சிக்கோங்களேன்…” என்றவள், “ஹ்ம்ம்…. பொண்ணைக் கட்டிக்கொடுத்த மறுநாளே பொண்ணைப் பார்க்க ஓடோடி வந்துட்டீங்க… ஹ்ம்ம் என் அம்மா அப்பாவை இன்னும் ஆளையேக் காணோம்….” என்று போலியாக மஞ்சரி சலித்துக்கொள்ள

“இன்னும் உனக்கு இந்த வாய் அடங்கலையாடீ?...” என்றபடி விஜயா அங்கே வர,

“அய்யய்யோ… அம்மா நீங்க எப்போ வந்தீங்க?...” என்று கேட்டாள் அவள்…

“வந்தவங்களை வான்னு கேட்காம எப்போ வந்தீங்கன்னா கேட்குற?...” என்றபடி விஜயா முறைக்க

“அய்யோ… நான் அப்படி சொல்லலைம்மா… தப்பா புரிஞ்சிக்காதீங்க…”

“யாரு நான் தப்பா புரிஞ்சிகிட்டேனா?...” என்றபடி விஜயா சண்டைக்கு தயாரக…

“சரி சரி விடு விஜயா…. சின்னப்பொண்ணு விடு…” என்றார் அவரது கணவர் நீலகண்டன்…

“சரியா சொன்னீங்கப்பா… சின்னப்பொண்ணுன்னு உங்களுக்குத் தெரியுறது உங்க மனைவிக்கு தெரியுதா?..” என்று கேட்ட மாத்திரத்தில் விஜயா அவளை அடிக்க முற்பட,

அவள் தப்பித்து ஓடி வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்த தேவியிடம் தஞ்சம் புகுந்தாள்…

“என்னம்மா… என்னாச்சு?...”

“பாருங்க அத்தை… அம்மா அடிக்க வர்றாங்க…” என்றாள் அவள் பாவமாக…

“என் மருமகளை அடிக்க வர்றாங்களா?... சரிதான் நீ வா… நான் பார்த்துக்கறேன்…” என்றவர் மருமகளின் கையைப் பிடித்து இழுத்து வந்தார் தேவி… அவரின் பின்னே மற்ற மூவரும் வர,

“வாங்க வாங்க…” என பரஸ்பரம் விசாரித்துக்கொண்ட பிறகு,

கஸ்தூரி ஆரம்பித்தார்… “வந்து பொண்ணைப் பார்க்கணும் போல இருந்துச்சு… அதான் அண்ணி…” என்று இழுக்க…

“ஆமாண்ணா… இத்தனை நாள் எதுவும் தெரியலை கூடவே இருந்ததால… இன்னைக்கு அவங்க இல்லாத வீடு என்னவோ போல இருக்கு… நேரில் பார்த்தா மனசுக்கு நல்லா இருக்கும்னு தோணுச்சு… அதான் வந்துட்டோம் அண்ணி…” என உமாவும் திக்கி திணறி சொல்ல…

“அண்ணன், அண்ணின்னு சொல்லிட்டு இப்படி வீட்டுக்கு வர யோசிச்சு யோசிச்சு தான் வருவீங்களா?...” என விஸ்வ மூர்த்தி கேட்க,

“அதுதானே அண்ணன், உறவு முறை சொல்லிட்டு அப்புறம் என்ன தங்கச்சி தயக்கம்?... ஒருவைகையில நாம உறவுக்காரங்க தான்… இந்த கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி இருந்தே…” என்றார் வில்வமூர்த்தியும்…

“சரிதான் அண்ணி… ஆனாலும் கட்டிக்கொடுத்துட்டோம் இல்லையா பொண்ணுங்களை… இனி அவங்க உங்க வீட்டுக்கு தான சொந்தம்…” என விஜயா சொல்ல,

“பிறந்த வீட்டு பந்தம் என்னைக்கும் விட்டுப்போகாது விஜயா… இத்தனை நாள் உங்க வீட்டுல மகளா வளர்ந்த மூணு பேரும் இனி இங்க மருமகளா வாழப்போறாங்க…” என அம்பிகா சொல்ல…

“அக்கா சொல்லுறது சரிதான்… எங்களுக்கு பெண் பிள்ளைகள் இல்லன்னு வருத்தப்பட்டது உண்டு… இப்போ அந்த குறை தீர்ந்த மாதிரி இருக்கு…. எங்களுக்கு மருமகளுக்கு மருமகளா, மகளுக்கு மகளா அவங்க இருப்பாங்க என்னைக்கும்… அது தான் எங்க எல்லாரோட விருப்பமும்… ஆனா, உங்களுக்கு அவங்க எங்க மகளா மாறுறது சந்தோஷம் இல்ல போலயே?...” என்று தேவி சொல்ல…

“என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அண்ணி… அப்படி எல்லாம் எதுவுமில்லை… எங்க மகள் உங்களுக்கும் மகள் தான் இனி…” என்றார் கஸ்தூரி அவசரமாக…

“ஆமா அண்ணி… எங்க பொண்ணு வீட்டுக்கு நாங்க இனி வருவோம்… சந்தோஷமா….” என்றார் உமாவும்…

“இனி வருவோம்னு சொல்லிகிட்டு எல்லாம் வர மாட்டோம்… திடீர்னு தான் வருவோம்… எங்க அண்ணன் அண்ணி வீட்டுக்கு வர்றதுக்கு நாங்க யாருகிட்ட கேட்கணும்?... இல்லங்க?...” என்று அவர் தன் கணவரிடம் கேட்க…

அவர் வழக்கம் போல, “ஆமா ஆமா…” என்று சொல்ல… அங்கே அனைவருக்கும் சிரிப்பு மலர்ந்தது…

“சரி வாங்க… சாப்பிடலாம்…” என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றனர் மூர்த்தி சகோதர்கள்…

“மஞ்சு… வள்ளி எங்கம்மா?...” என தேவி கேட்க..

“தோட்டத்துல அத்தை…” என்றாள் மஞ்சரி…

“ஓ சரிம்மா…” என்றவர், வள்ளியையும்-வேலனையும் அழைக்கத் தோட்டத்துக்கு போக முற்பட,

“அண்ணி… கொஞ்சம் நில்லுங்க… நானும் வரேன்…” என்றபடி கஸ்தூரியும் உடன் சென்றார்…

தோட்டத்தில், மலர்களின் இடையில் தானும் ஒரு மலராக நின்று கொண்டிருந்தாள் வள்ளி… அவளுக்கு சற்று தள்ளியிருந்த அகன்ற சிமெண்ட் பெஞ்சில், கண் மூடி அமர்ந்திருந்தான் யுவி…

“வேலா….” என்று சத்தம் கொடுத்துக்கொண்டே தேவி வர,

மூடியிருந்த அவனது இமைகள் திறந்தது… விரைந்து எழுந்து நடந்தவன் தேவி குரல் கேட்ட திசையை நோக்கி நடக்க, வள்ளி தென்பட்டாள் அவனது பார்வையில்…

சில நொடி விழி கலப்பிற்கு பின், அவன் “அம்மா வராங்க… வா போகலாம்…” என்றழைக்க, அவளும் தலைஅசைத்தாள்…

மறுபடியும், “வேலா…” என்ற சத்தம் கேட்க… “இதோ வந்துட்டோம்மா…” என அவனும், “இதோ வந்துட்டோம் அத்தை…” என அவளும் ஒரு சேர சொல்ல…

இருவருமே ஆச்சரியம் கலந்த பார்வையை ஒருவரிடத்தில் இன்னொருவர் செலுத்துவிட்டு, நடந்தனர்…

குரல்கள் ஒருங்கே ஒலித்த விதம் தேவியை அதற்கு மேல் செல்ல விடாமல் செய்ய, அவர் அங்கேயே நின்றுவிட, யுவியும், வள்ளியும் வந்து சேர்ந்தனர்…

“சொல்லு தேவிம்மா…” என்றவன், அங்கே கஸ்தூரி இருப்பதைப் பார்த்துவிட்டு, “வாங்க அத்தை… மாமா வந்திருக்காங்களா?...” என கேட்டான்…

“ஆமா மாப்பிள்ளை… எல்லாரும் வந்திருக்கோம்… மஞ்சரி அம்மா அப்பா கூட வந்திருக்காங்க…” என்று சொல்ல

“சாரி அத்தை… நீங்க எல்லாரும் வந்தது எனக்கு தெரியாது… மன்னிச்சிடுங்க… அதான் உடனே வந்து பேச முடியலை…”

“பரவாயில்லை மாப்பிள்ளை… இதுல என்ன இருக்கு… இதுக்கு எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்குறீங்க?..”

“நான் போய் எல்லாரையும் பார்க்குறேன் அத்தை…” என கஸ்தூரியிடம் சொல்லியவன்,

“அப்பவே என்னை கூப்பிட்டிருக்கலாம்தான தேவிம்மா…” என்றான்…

“இல்லப்பா அவங்க இப்போதான் வந்தாங்க...”

“சரி தேவிம்மா… வா… போகலாம்…” என தாயிடம் கூறிவிட்டு,

“வள்ளி…” என எதுவோ சொல்ல வந்தவன், அவள் கண்கள் கஸ்தூரியிடம் நிலைகுத்தி நிற்பதைப் பார்த்துவிட்டு,

“அத்தை… நீங்க வள்ளியைக் கூட்டிட்டு வாங்க… நாங்க முன்னாடி போறோம்…” என்றபடி தாயை அழைத்துக்கொண்டு சென்றான்…

அவன் சென்றதுதான் தாமதம் என்பது போல், “சின்னம்மா..” என்ற கூவலுடன் அவரைக் கட்டிக்கொண்டாள் வள்ளி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.