(Reading time: 21 - 42 minutes)

'ரு நிமிடம் நாட்டுப்புறம் என்ற தன் மாமியாரை முறைத்த துளசி, கோலத்தின் தாத்பரியத்தைப் பற்றி இப்பொழுது ஏதாவது பேசினாலும் பலன் இல்லை... வேண்டாத மருமகள் கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்'.... என்று எண்ணி ஒன்றும் சொல்லாமல் மீண்டும் தன் அறைக்கு மாடியேறினாள்.

'சரணின் பெற்றவர்களுக்கு தன்னை பிடிக்க வில்லையே... எப்படி இந்த வீட்டில் மீதி நாட்களைக் கடத்துவது?... உம்... எந்த பெற்றவர்கள் தான் ஒரு மகன் அப்பொழுதுதான் இறந்திருக்கும் போது, மற்றொருவன் திருமணம் செய்து கொண்டு வந்தால் வரவேற்ப்பார்கள்... இதற்கெல்லாம் இவந்தான் காரணம்...

இன்னும் நான் கரணுக்காக வாடகைத் தாயாக இருக்க வந்தவள் என்று தெரிந்தால், அவ்வளவு தான், இவர்கள் என்ன நினைப்பார்களோ .... எல்லாம் இந்த சரணால் தான் வந்தது. இவன் மட்டும் அன்றே இதைச் சொல்லி இருந்தால், இவ்வளவு தூரத்திற்க்கு வந்திருக்க வேண்டாமே..... இவர் பிள்ளைகள் செய்து வைத்திருக்கும் கூத்துக்கு நான் எதற்கு இந்தம்மாவிடம் பேச்சு வாங்க வேண்டியிருக்கிறது.... என்று கோபத்துடன் மாடியேறியவள், அவர்கள் ரூமில் இருந்த சின்ன வரவேற்ப்பு பகுதியின் சோபாவில் அமர்ந்து அன்றைய செய்த்திதாளை எடுத்து புரட்டினாள்.

சிறிது நேரம் கழித்து, ரெடியாகி வெளியே வந்த சரண், சோபாவில் அமர்ந்திருந்த துளசியை பார்த்து, "குட் மார்னிங் துளசி, சீக்கிரமாகவே எழுந்து விட்டாயா? ரெடியாக இருக்கிறாய்?"

ஒன்றும் பேசாமல் முகத்தை திரும்பிய துளசியைப் பார்த்தவன்,

"இதோ பார், இந்த அலட்சியம் ஆகாது... உனக்கு பிடித்தாலும், பிடிக்கவிட்டாலும், நீ என் மனைவி... இதை எப்பொழுதும் மாற்ற முடியாது... கேள்வி கேட்டால் பதில் சொல்ல முதலில் பழகு...... என்று கோபத்துடன் சொன்னவன், பின்னர் சற்று தணிந்து, தோட்டத்தில் உட்கார்ந்து இருந்தாய் போல..... உனக்கு செடி, கொடிகள் பிடிக்குமா?.... எங்கள் வீடு எப்படி இருக்கு..... உனக்கு பிறகு முழுவதும் சுற்றி காட்டுகிறேன்".

எப்படி என்று கேள்வியாக பார்த்தவளை..... நான் சன்னலில் இருந்து நீ தோட்டத்தில் பெஞ்சில் உட்கார்ந்து வள்ளியுடன் பேசுவதைப் பார்த்தேன்.... கோலம் வேறு போட்டுக் கொண்டிருந்தாய்? உனக்கு கோலம் போட பிடிக்குமா?"

உம்... என்றவளை.... "துளசி சகஜமாக இரு. வா... உன் ஹான்ட் பேகை எடுத்துக் கொள். டிபன் சாப்பிட்டு விட்டு, ஒன்பதரைக்குள் டாக்டர் வீட்டுக்குப் போக வேண்டும்".

"சரி" என்று கூறியவள், உள்ளே சென்று தனது கைப் பையும், கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டாள். பின்னர், வெளியே வந்தவள், பேப்பரை மேலோட்டமாகப் பார்த்த்க் கொண்டிருந்த சரணிடம், "போகலாம்" , என்றவள், மாடிப்படிகளில் அவனுடன் இணைந்து இறங்கினாள்.

டைனிங் டேபிளில் அவனுக்காக காத்திருந்தனர் சரணின் பெற்றோர்... இருவரும், ஜோடியாக சேர்ந்து வருவதைப் பார்த்த சியாமளா, முகத்தைச் சுளித்துக் கொண்டார்.

'குட் மார்னிங் பா, குட் மார்னிங் மா" என்றவன், "உட்கார் துளசி", என்று சேரை இழுத்துப் போட்டான்....துளசி "தாங்க்ஸ்" என்று சொல்லி சேரில் அமர்த்தவுடன், சியாமளா, சட்டென்று தனது சேரில் இருந்து எழுந்து அங்கிருந்து கோபமாக அகல முயன்றார்.

புரிந்து கொண்ட தனயன், "அம்மா", என்று அவர் கையைப் பற்றி இழுத்து வந்து "ப்ளீஸ் உட்காருங்கள் மா... இப்பொழுது நீங்கள் எங்களுடன் உணவு உண்ண மறுத்தால், இனி உங்கள் மகன் எப்போதும் இந்த வீட்டில் கை நனைக்க மாட்டான்" என்று அழுத்தமாக கூறினான்.

"என்னம்மா சியாமளா, என்ன இது.... எனக்கு இது பிடிக்கவில்லை.... நீ இப்பொழுது சாப்பிட மறுத்தால், என் மகன் உண்ணாத உணவு எனக்கும் வேண்டாம்" என்றார் கோபமாக கிருஷ்ணன்.

இருவரையும் முறைத்து விட்டு, இத்தனைக்கும் காரணமான துளசியை வெறுப்புடன் ஒரு பார்வை பார்த்து விட்டு, பேசாமல் தன் இருக்கையில் அமர்ந்த சியாமள, "வள்ளி, டிபனை எடுத்து வா" என்று உத்தரவிட்டார்.

அமைதியாக அனைவரும் டிபனை முடித்தனர்... துளசிக்குத்தான், அந்த உணவு வெறுப்பாக இருந்தது... ஒன்றும் பேசாமல் மெல்ல தண்ணிர் குடித்து முழுங்கி வைத்தாள்.

டிபன் முடிந்தவுடன், "அம்மா, நாங்கள் இருவரும் வெளியே இப்பொழுது செல்கிறோம். மதியம் லஞ்சுக்கு வீட்டிக்கு வந்து விடுவோம்" என்று கூறி விட்டு, "அப்பா, நான் இன்று ஆபிஸ் லீவ். நீங்கள் முடிந்தால் அலுவலகம் சென்று வாருங்கள்".

"வா துளசி, போகலாம்", என்று அவள அழைத்துக் கொண்டு டிரைவரை மறுத்து விட்டு தன் பி.எம்.டபள்யூ. காரை எடுத்தான் ராம் சரண்.

றுபடியும் மருத்துவமனை. டாக்டர் சுபாவின் அறைக்கு வெளியேஅமர்ந்திருந்தார்கள் துளசியும், ராம் சரணும்.

ஒன்றும் பேசாமல், துளசியின் முகத்தைப் பார்ப்பதும், டாக்டரின் ரூம் கதவைப் பார்ப்பதுமாக இருந்தான். துளசி, அவனை கண்டு கொள்ளாமல், ஏதோ யோசனையில் இருந்தாள்... முதன் முதலில் இந்த ஹாஸ்பிடலில் கரணையும், சரணையும் சந்தித்தது, டாக்டர் பாலாஜியை பார்த்து பாட்டியின் சர்ஜரி பற்றி பேசியது, வாடகைத் தாயாக இருக்க திர்மாணித்து, இந்த இரட்டையர்களை சந்தித்தது, பிறகு பாட்டியை இந்த மருத்துவ மனையில் அட்மிட் செய்தது, பாட்டிக்கு உடல் நிலை கடைசி நிமிடத்தில் ஒத்துழைக்காதது, கரண் என்று நினைத்து சரணுடனான தன்னுடைய திடீர் திருமணம், பாட்டியின் மரணம் என ........ எல்லாம் இந்த ஆஸ்பத்திரி வளாகத்தினுள்ளேயே நடந்து முடிந்தது ஞாபகம் வந்து.... கண்ணீர் இதோ வரவா என்று கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது.

சரணுக்கும், அதே மன நிலைதான்.... அவனும், அவன் அண்ணன் கரணும் டாக்டர் பாலாஜியை சந்தித்தது, கரணது கொடிய வியாதி, கரண் எடுத்த திடீர் முடிவு, இடையில் சந்தித்த துளசி, அவளுடான டிரீட்மெண்ட், கரண் நடுவில் இறந்தது, பாட்டியின் மோசமான உடல் நிலையால், அவசர தங்கள் திருமணம் என்று அவனும் அதையே நினைத்துக் கொண்டிருந்தான்.

தன் அருகில் அமர்ந்து, கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த துளசியைப் பார்த்தவன் மனமிளகி, 'இவளை நான் நல்ல சந்தர்ப்பத்தில் சந்தித்து இருக்கக் கூடாதா? அப்படி மட்டுமிருந்தால், திருமணத்தின் அடுத்த கட்டமாக இன்று டாக்டரை சந்திக்க எவ்வளவு சந்தோஷமாக உண்மையான ஆதர்ச தம்பதிகளை போல் இங்கு அமர்த்திருப்போம். இப்படி இவள் கண்ணீர் சிந்திக் கொண்டா இருப்பாள்' என்று நினைத்தவன், அந்த நினைவை ஒதுக்கி விட்டு, "அழாதே துளசி.... கண்டிரோல் செய்... எல்லோரும் நம்மையே பார்த்துக் கொண்டே செல்லுகிறார்கள்"

கண்களை துடைத்தவளை, டாக்டர் அப்போது அழைக்க, இருவரும் உள்ளே சென்றனர்.

"ஹலோ... சரண்,... வாம்மா துளசி!... எப்படி இருக்கிறாய்? ஊரில் இருந்து எப்பொழுது வந்தாய்" என்று கேட்ட டாக்டர்.சுபாவிற்கு சரண், "நேற்று தான் துளசியை சென்னைக்கு அழைத்து வந்தேன் டாக்டர். துளசிக்கு ப்ரெக்னன்ஸி டெஸ்ட் செய்ய வேண்டும்".

வேறு எதுவும் கேட்காமல், டாக்டர்.சுபா, "துளசி, நீ இந்த நர்சுடன் செல். பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் செய்வார்கள். பிறகு என்னை வந்து பார்" என்று சொல்லி அவளை அங்கிருந்த நர்சுடன் அனுப்பி வைத்தார்.

துளசி வெளியே சென்றவுடன் டாக்டர். சுபா, "சரண் இப்பொழுது சொல்... உன் பெற்றோர் உங்கள் அவசரத் திருமணத்தை ஒப்புக் கொண்டார்களா? துளசிக்கு கரணது இறப்பு பற்றி சொன்னவுடன் எப்படி அதை ஏற்றுக் கொண்டாள்? எல்லவற்றையும் சொல்லி விட்டாயா? உனக்கு அவளை பிடித்து இருக்கிறதா? உன்னை ஒப்புக் கொண்டு விட்டாளா? என்ன சொன்னாள்?... உன் பெற்றோர்களுக்கு எதனால் நீ துளசியை மணந்து கொண்டாய் என்று தெரியுமா? .... கேள்வி மேல் கேள்வியாய் அடுக்கினார்.

நெடிய பெருமூச்சு ஒன்றை விட்ட சரண், நாற்காலியில் சாய்ந்து நன்றாக உட்கார்ந்துக் கொண்டு, "டாக்டர், என்னைப் பெற்றவர்களுக்கு இந்த திருமண விஷயம் மிகவும் அதிச்சியாகதான் இருக்கிறது. அவர்கள் மேல் எந்த தப்பும் இல்லை. அவர்கள் கோபம் நியாயமானதும் கூட... யார் தான் அண்ணன் இறந்த இரண்டாவது நாள், தம்பி மணமகன் ஆனால் ஒப்புக் கொள்வார்கள். என் மேல் தப்பு இருக்கிறது தானே?.... அம்மா ரொம்பவும் கோபமாக இருக்கிறார்கள்...அப்பா தான் , எனக்காகப் பார்ப்பதா, இல்லை அம்மாவை பார்ப்பதா, என்று தடுமாறுகிறார். மொத்ததில் என் மேல் அவ்வளவு வெறுப்பு.... என்னை கேடு கெட்டவனாகவே பார்க்கிறார்கள்..... பெற்ற மகனையே வெறுக்கும் போது, என் மனைவி என்று நான் அறிமுகப் படுத்திய துளசியை எப்படி ஏற்பார்கள். ஏதோ குடும்பத்தை பிளக்க வந்த கோடாரி என்றே நினைக்கிறார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.