(Reading time: 27 - 54 minutes)

டுத்த அறை அரண் உடைமைகள்….உள்ளே நுழைந்து குடைய தொடங்கினாள். அவள் கையில் கிடைத்தது அந்த மெடிகல் ஃபைல்….அரணுடையது தான். அந்த ஆக்‌சிடெண்ட் பற்றியது.

நிச்சயமாக உருப்படியாக ஏதாவது கிடைக்கும்….எத்தனை பெரிய விபத்து அது. ஆனால் இவன் மட்டும் எளிதாய் தப்பிக் கொண்டான். இவனே திட்டமிட்டு செய்ததென்ற முழு நம்பிக்கை சற்றுமுன் வரை  இவளுக்கு உண்டு. இப்போது அதற்கு இன்னும் கொஞ்சம் ஆதாரம் தேவையாய் தோன்றுகிறது.  ஃபைலை திறக்கப் போனாள். அப்பொழுதுதான் அந்த செல்ஃபில் உள்ளிருந்த அந்த டைரி கண்ணில் பட்டது.

அது மட்டும் அரணுடையதாய் இருந்தால்….??? ஜாக்பாட் ….வேக வேகமாக அதை எடுத்து திறந்தாள். வாவ்…..வாவ்….வாவ்….வானத்தில் பறந்தாள். அது அரணுடைய இந்த வருட டைரிதான்… செல்ஃபில் வேறு என்னவெல்லாம் இருக்கிறதாம்? மீண்டுமாய் உள்ளே பார்த்தாள். முந்தைய வருடங்களுக்குடையதும் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன.

இப்பொழுதைய டைரியை திறந்தாள். ஐயோ யாரும் வந்திடக்கூடாதே…..கட கடவென வாசிக்க ஆரம்பித்தாள்.

விது இன்னைக்கு முழுக்க உன்னைப் பத்தி நினைச்சுகிட்டு இருந்தத தவிர நான் வேற ஒன்னுமே செய்யலை தெரியுமா….? இப்படித்தான் தொடங்கியது அந்நாள் குறிப்பு.

அதென்ன அரசியல்வாதியின் சொத்து கணக்கு அட்டவணையா….? அதுக்கு மேல் படிக்க மனம் மறுகுகிறது அவளுக்கு.

காதல் வயப்படாத, ஏன் கன்னிநிலை கூட அடையாத வெம்பிய குழந்தை மனமல்லவா அவளது….அதில் காதலான ஆண் மன உணர்வுகளை எப்படிப் படிப்பதாம்? அதுவும் ஏதோ ஒருவகையில் சகோதரனாக உணரச் செய்பவனின் வார்த்தைகள் இவை……ஆனால் அனவரதனுக்கு பதில் இதைவிட வேறெங்கிருந்து கொடுத்துவிட முடியும்.

அப்பா கூட சொன்னாங்க….இதுக்கு எதுக்குடா அவள அனுப்புனன்னு…..நீ உங்கம்மாவுக்காக எவ்ளவு ஏங்குறன்னு புரியுது விதுக் குட்டி….அதனால மட்டும் தான் வேற வழி தெரியாம உன்னை  அங்க போகச் சொன்னேன்…..

இவள் கை நடுங்குகிறது. இதற்கு மேல் கண்டிப்பாய் முடியாது. தனக்கு வேர்த்துக் கொட்டுவதை அப்பொழுதுதான் உணர்கிறாள். உடலுக்கோ ஜுரம் வந்தது போல் உணர்வு.

அதே பக்கத்தில் கண்ணில் ப்ரபு என்ற வார்த்தைப் படுகிறது.

ப்ரபுட்ட சொன்னனா அவன் நீ சுகாவ அங்க அனுப்புனதுக்குப் பதிலா பேசாம ஆன்டிய கிட்நாப் செய்துட்டு வந்திருக்கலாம்னு இவ்ளவு லேட்டா ஐடியா குடுக்கான்….

அவளையும் அறியாமல் சிறு சிரிப்பு வருகிறது.

டைரியை மூடி வைத்துவிட்டாள். இதற்கு மேல் ம்கூம்.

அந்த மெடிகல் ஃபைலை திறந்து படித்தாள். அந்த விபத்திற்குப் பின் ஆறுமாதம் கோமாவிலிருந்திருக்கிறான் அரண். தெய்வமே! மீடியாவில் அரண் மூன்றே நாளில் வீடு திரும்பிவிட்டார் என்றல்லவா வந்தது?  

ஆறுமாதம் கோமாவிலிருந்தவன் எழுந்த அடுத்த நாளே தன் மனைவியை தேடிப் போயிருக்கிறான்.

தன் தகப்பனின் ஞாபகம் வருகிறது. குமுறிக் கொண்டு வருகிறது இதயம். மீண்டுமாக டைரியின் சில பக்கங்களைப் படித்துப் பார்க்கிறாள். இப்படி பொய்யாய் கற்பனையாய் கதை எழுதக் கூட அன்பை அறிந்த ஒரு இதயம் வேண்டும்….

அரண் வித்யாசமானவனோ?.  எதை நம்ப? அவளது இத்தனைகால இயல்பின்படி அரணை நம்பவும் முடியவில்லை. ஆனால் இங்கு பார்த்து படித்த விஷயங்களின்படி அவனை சந்தேகிக்கவும் தெரியவில்லை. முதல் முறையாக ஒரு ஆணுக்கு ஆதரவாக வாதட கூட அவள் மனதில் ஒரு குரல் உதயம்.

எது எப்படியோ ஆதாரம் கேட்கும் அனவரதனுக்கு  இந்த டைரியவே கொடுத்துடலாம்….,.முடிஞ்சா அவர் படிச்சுகிடட்டும்…..டைரியை எடுத்து தன் சல்வாருக்குள் திணித்தாள்.

அந்த அனவரதனுக்கு செக் வைக்க எதாவது வேணுமே….வேறு ஏதாவது கிடைக்கிறதா? உள்ளே தேடினாள். ஒரு பெரிய பவுச் நிறைய போட்டோக்கள். கையை விட்டு கைக்கு வந்ததை உருவினாள்.

இடக்கையையை மனைவியின் கழுத்தை சுற்றியும் வலக்கையை ப்ரபாத்தின் கழுத்தை சுற்றியுமாய் போட்ட படி நடுவில் நின்றிருந்தான் அரண். மூன்று பேரும் மொத்தப் பல்லும் தெரிய ஒரு  முழு சிரிப்புடன். படு சந்தோஷமான ஒரு தருணம் போலும்.

ஏனோ கண்ணை அந்த படத்தைவிட்டு எடுக்க முடியவில்லை அவளால். பார்த்துக் கொண்டே இருந்தாள்.

 இப்பொழுது நடுவில் நிற்பது ஜோனத்தாகவும் அவன் வலக்கை அரண் கழுத்திலும், இடக்கை இருப்பது இவள் கழுத்திலுமாக….மனதில் இப்படி ஒரு காட்சி தோன்ற, தூக்கி வாரிப் போடுகிறது அவளுக்கு. பதறிப் போய் புகைப் படத்தை மீண்டும் பவுச்சில் போட்டாள். எல்லாம் இந்த டிராமா ஐடியாவால வர குழப்பம்.

கீழே குழந்தை அழும் குரல் பெரிதாகிறது.

இறங்கிச் செல்ல துடிக்கிறது மனது. ஏனோ அந்த அவசரத்தில் அரணின் டைரி வல்லராஜன் கையில் கிடைப்பது போல் ஓர் எண்ணம் மனதில் வருகிறது. மிரண்டு போனாள் சங்கல்யா.

 உடைக்குள் மறைத்த டைரியை வெளியில் எடுத்து மற்றவைகளுடன் பத்திரமாக வைத்துவிட்டு, அவசர அவசரமாக படி இறங்கி வந்தாள். வரவேற்பறையின் ஒரு ஓரத்தில் இருந்த சோஃபாவில் அமர்ந்து ஃபீடிங் பாட்டிலை குழந்தையின் வாயில் வைக்க போராடிக் கொண்டிருந்த ஜோனத் அவள் கண்ணில் பட்டான்.

அவனுக்கு குழந்தையை எந்த பொஷிஷனில் பிடிக்க வேண்டும் எனத் தெரியவில்லை. குழந்தைக்கு வாகாக இல்லை என்பதால் அழுது கொண்டிருக்கிறாள் என பார்த்தவுடன் புரிகிறது இவளுக்கு.

“பாப்பாவ குடுங்க…” ப்ரபாத் மடியிலிருக்கும் குழந்தையை இரு கைகளால் பிடித்தாள்.

திரும்பி முறைத்தான் அவன். இப்பொழுது அவனிடம் ஏனோ எகிற தோணவில்லை.

 “எங்கயும் கொண்டு போகலை சார், இங்க தான் உங்க கண்ணு முன்னால உட்கார்ந்து நீங்க கரைச்சு வச்சுருக்க பாலைத்தான் குடுக்கப் போறேன்…” குழந்தையை மடியிலேந்தி சோஃபவை ஒட்டி தரையில் அமர்ந்தாள்.

“இதென்ன தரையில….? சும்மா சோஃபால உட்கார்…”  அவளிடத்தில் அரண் சுகவிதா சம்பந்தபட்ட விஷயங்களில் முழு இளக்கம் காண்பிக்க ப்ரபாத்திற்கு விருப்பமில்லை. அவர்களுக்கு  தீங்கு செய்வதை தடுப்பதற்காக என்று இல்லை,

சுகவிதா மற்றும் குழந்தையை பாதிக்கும் எதையும் சங்கல்யா செய்துவிடமாட்டாள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது. ஆனால் அவள் இப்படி ஒரு வேலைக்கு வந்ததே தவறு என்ற உணர்வு அவளுக்கு வந்தாக வேண்டுமே….அதற்காகத்தான்.

ஆனால் அதற்காக அவள் ஒரேடியாய் தன்னை விலக்கி குறுக்கினாலும் கஷ்டமாய் இருக்கிறது அவன் மனதுக்கு. அடுத்த வீட்டில் வந்து தரையில் உட்காருவேன் என்றால் என்ன அர்த்தமாம்?

“இல்ல எனக்கு இப்டின்னாத்தான் வசதியா படும்…” அவன் கால்களை விட்டு இரு அடி தொலைவில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சோஃபாவில் சாய்ந்து கொண்டவள் குழந்தையை வாகாக கையிலேந்திய பின் பீடிங் பாட்டிலிற்காய் இவனை நோக்கி கை நீட்டினாள்.

“கொஞ்சம் தான் குடிச்சா….அப்றம் குடிக்க மாட்டேன்றா….ஆன்டி 100 எம் எலாவது குடிப்பான்னு சொல்றாங்க…” தனக்கு தெரிந்ததைச் சொன்னான்….

“கிரிக்கெட் பால பத்தி மட்டும் தெரிஞ்சு வச்சிருந்தா இப்டித்தான்….” சட்டென மனதில் பட்டதைப் சொல்லிவிட்டாள் சங்கல்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.