(Reading time: 27 - 53 minutes)

ஜோனத்!!!! முதல் கணம் எதுவும் நினைவு வரும் முன் அது அவன் குரல் என புரிந்த நொடி ஏனோ அவனை அள்ளிக் கட்டிக் கொள்ள வேண்டும் என தோன்றியது ஒரு உணர்வு. இனி அவனை பார்க்கவோ பேசவோ பழகவோ முடியாது என்றிருந்த நிலைக்கு, இந்த அவன் நேரில் அருகில் நிற்கிறான் என்ற புரிதலில் அடிமன தழைகள் அறுந்தோட……சட்டென உறைக்கிறது பெண்ணிற்கு…. இவளுக்கு கூட காதல் வந்திருக்கிறது அதுவும் ஜோனத் மேல்……அவன் உயரம் என்ன இவள் நிலை என்ன??????? அதே நொடி அவள் இருக்கும் மருத்துவமனையும், மற்ற சூழலும் அவன் சொன்ன கட்டளையும் உறைக்க, கொடும் பயமாக மாறிப் போனது பெண்ணவள் உணர்வு உலகம்.

“சாரி ஜோனத்….நான் …இங்க….எனக்கே….சாரி…..இப்பவே போய்டுறேன்….” அவசர அவசரமாக இவள் எழ தூக்கத்திலிருந்து சட்டென எழுந்ததால் சற்று தடுமாறி அருகில் நின்றவனை நோக்கி சரிந்தவளை அவன் பிடித்து நிறுத்திய போது

அங்கு வந்து நின்றார் அனவரதன். “ப்ரபு…அம்மா கூப்டுறாங்க…. “ இவளை ஒரு தீ பார்வை பார்த்தான் ப்ரபாத். அவன் கை இவள் கையை விட்டிறுந்தது இப்போது. இவள் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

“சங்கல்யாவையும் தான் கூப்டுறாங்க….நீ வாம்மா” இவளது கையை பிடித்தது புஷ்பம்.

“நீங்க போங்க இதோ வர்றோம் ஆன்டி….”

You might also like - Neengalum thupariyalam.. A series to bring out the detective in you...

அவர் விலகவும் இவளிடமாக கொதித்தான்…. “ எந்த காரணத்த கொண்டும் உள்ள வந்து எதுக்காவது சரின்னு தலைய ஆட்டி வை…அப்றம் இருக்கு…”

“ உங்களுக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டேன் ஜோனத்….”

பதிலின்றி நடந்தான். அவன் பின் இவள். அப்படி என்ன சொல்லிடுவாங்கன்னு இவன் இப்படி கொதிக்கிறான்?

உள்ளே போனதும் எந்த சஸ்பென்ஸும் வைக்காமல் அதை சொல்லியே விட்டார் அன்பரசி.

“ஓபன் ஹார்ட் சர்ஜரி போறதுக்கு முன்னால எனக்கு இவங்க கல்யாணத்தைப் பார்க்கனும்….”

அவர் இதை எளிதாய் சொல்லி இருந்தால் “தேவையில்லாம குழப்பிக்காதீங்க ஆன்டி…” அப்டின்னு எதாவது சொல்லி வைத்திருப்பாள் இவள். ஆனால் அத்தனை குழாய்களுக்கு நடுவில், ஏதோ பீப் பீப் சவ்ண்டுகளுக்கு இடையில் ஆக்சிஜன் மாஸ்க்கை கழற்றிவிட்டு…. ஒவ்வொரு வார்த்தை சொல்லவும் இளைத்து களைத்து…..தவியாய் தவித்து

அவர் என்ன சொல்ல வருகிறார் என முழுதாய் புரியும் முன் தலையை சம்மதமாய் ஆட்ட தயாராய் இருந்தாள் இவள். மௌன அழுகை அதற்கும் முன்னதாக ஆரம்பமாயிருந்தது. இவள் பாட்டியும் மரண தருவாயில் அப்படித்தான் இவளுக்காக தவித்தார்…

அன்பரசி சொன்ன விஷயம் புரிந்த நொடி மறுத்திருந்தான் மகன்.

“அம்மா …இப்ப எதுக்குமா இந்த டைம்ல…உங்களுக்கு ஒன்னும் ஆகாது…உங்க ஹெல்த் நல்லா ஆன பிறகு கிராண்டா வைக்கலாம்…..”

“இ….இல்ல ……. இ…இப்ப…..” இதற்குள் அங்கு பி பி ஏற தொடங்க……

சங்கல்யாவுக்கு கிடு கிடு வென வருகிறது. இந்த ஆர்க்யூமென்டை இவளால் பார்க்க முடியாது.

“அம்மா ரிலாக்‌ஸ்….இதென்ன குழந்தை மாதிரி பிடிவாதம்…..? முதல்ல தூங்கி ரெஸ்ட் எடுங்க நீங்க…”

“எ….என்….லா…லாஸ்ட் வி…விஷ்டா…..” அவனிடம் அவர் சொல்ல இவள் நெஞ்சில் உயிர் வலி.

தன் தாயின் நெற்றியில் கை வைத்து அவர் சற்று உயர்த்தி நீட்டிய கையை பற்றிய அவன் கண்களில் நீர்…. அப்படியே கை பற்றியபடியே அவன் முழங்காலிட “அம்மா” என்றான்.

அதற்கு மேல் பார்த்திருக்க இவளால் முடியாது. இவள் விம்மலுடன் வெளியேறும் வண்ணம் திரும்பியே விட்டாள்…. கூடவே இவன் இன்னொரு பன்னீர் செல்வமாக வாய்ப்பே இல்லை என்ற உணர்வு…. இதற்குள் கட்டிலருகில் இருந்த இவளது கையை பற்றினார் அன்பரசி…..

“உனக்கு ஓகே தான லியாமா?” இதைத்தான் அவர் கேட்டிறுக்க வேண்டும் என்பது இவளது யூகம். அவர் கண்களில் கெஞ்சல் பாவம். நீயாவது புரிஞ்சுக்கோ என்பதாய்…

ஒரு நொடி அவன் தரிசனம், இரு நொடி புன்னகை, இல்லையென்றாகும் இவளை அவனது மூன்று நொடி பேச்சு… இதுக்கே அவள் தகுதியில்லை என்று தவித்திருக்க முழுவதுமாக அவனை இவளிடம் தூக்கிக் கொடுக்கிறேன் என்றால்……. இப்பொழுது அன்பரசி முகம் இவள் கண்ணீர் வழியாய் பார்க்கையில் ஏனோ கடைசி நிமிட இவள் பாட்டியின் முகமாகவே தெரிகிறது…..உயிரோடு இருக்ற காலமெல்லாம் ஜோனத் கூட இருக்க சொல்லி இவளிடம் கெஞ்சுகிறது அது… அவள் முடிவு செய்யும் முன்பாக ஆடி இருந்தது அவள் தலை ஆம் என்று.

“நீ சொல்லுமா அவன்ட்ட…..” இதை சொல்ல அவர் போராட இவள் எங்கிருந்து நிமிர்ந்து பார்க்கவாம் அவனை…..

சட்டென இவள் கையை பற்றி இழுத்தபடி வெளியே வந்தது ஜோனத்தான்…… அவன் பற்றிய இடம் தீயாய் காந்துகிறது. எலும்போ நொறுங்கி விடும் போலும்…. வலி மட்டும் மனதின் வலியை விட கம்மிதான்….

“ஜோனத் அம்மா பாவம் ஜோனத்….தயவு செய்து அவங்கள நிம்மதியா…”.

இவளை முரட்டடியாய் இழுத்து அங்கிருந்த சுவற்றில் சாத்தினான்…

“என்ன நினச்சுட்டு இருக்க நீ….?  கடவுள்க்கு மட்டுமில்ல என் அம்மாவுக்கு கூட பொய்யா போலியா கல்யாணம் செய்றது பிடிக்காது……இன்னைக்கு எங்கம்மாவுக்காக கல்யாணம் செய்துட்டு நாளைக்கு என் லைஃப் நாசமா போறப்ப எங்கம்மாவுக்கு இப்ப இருக்றதை விட அதிகமா வலிக்குமே….அவங்க போறப்ப நிம்மதியா போகனும்றதை விட போன பிறகும் நிம்மதியா இருக்கனும்றது எனக்கு முக்கியம்…..ஆனா உனக்கு இதெல்லாம் எங்க புரியப் போகுது….சரியான ஃப்ராடு……கரெக்டா சொன்னா லூசு….கழுத்துல கத்திய வச்சா நம்ம எங்கேஜ்மென்ட் நடந்துச்சு? நீயும் தான ரிங் போட்ட….? அப்றம் அரணை எதுக்கு அடிச்ச? இப்போ கல்யாணத்துக்கு தலைய ஆட்டிட்டு நாளைக்கு என் அம்மாவையே அடிப்பியே…..ஏன்னா எனக்கு எங்கம்மாவ ரொம்ப பிடிக்கும்னு உனக்கு தெரிஞ்கிட்டுப் பாரு……இல்லனா தூக்கத்தில என் தலைல கல்ல தூக்கிப் போட்டாலும் போட்டுடுவியே….”

அவன் கொதித்த விதத்தில்…. அவள் கண்ணில் பட்ட அவன் கழுத்து நரம்பு புடைத்த வகையில்…..அவன் நெஞ்சு ஏறி இறங்கிய வேகத்தில்….அவன் காது மூக்கின் வழியாய் ரத்தம் வந்திடுமோ என மிரண்டு கொண்டிருந்தாள் சங்கல்யா…..

“ப்ரபு” அதட்டலாய் அரண் குரல் காதில் விழவும் தான் மூச்சு வந்தது அவளுக்கு.

“டேய் வாடா நீ….” நண்பனை இழுத்துக் கொண்டு இவளை ஆறுதலாய் ஒரு பார்வை பார்த்த வண்ணம் போனான் அரண்.

அரண் எப்படியும் ஜோனத்தை சமாளிப்பான் என ஒரு சின்ன ஆறுதலுடன் தொய்கிறது கால். இருந்த உணர்ச்சி போராட்டம்….பகலெல்லாம் சாப்பிடாத அவள் உடல்….தட்டு தடுமாறி அருகிலிருந்த சேரில் போய் உட்கார்ந்து கொண்டாள். எதையும் கோர்வையாக நினைக்க கூட முடியவில்லை….. கண் மூடிக் கொண்டாள். ‘கடவுளே நான் இப்ப என்ன செய்யனும்? அன்பரசி அம்மா சொல்றத செய்யவா….இல்லை ஜோனத் சொல்றத கேட்கவா?’ எவ்வளவு நேரம் சென்றதோ….. மீண்டும் கண் விழிக்கையில் சற்று தொலைவில் பார்வையில் பட்டான் அரண்.

அவன் கையில் ஹயா. அவளது பாதம் நிறத்துக்கும், அவளணிந்திருந்த பிஸ்தா க்ரீன் & வைட் நிற ஃப்ராக்கிற்கும், சற்றே சுருண்ட அந்த அடர் முடிக்கும்…. அரணின் தோளில் ஒரு கையைப் போட்டுக் கொண்டு….ஏதோ அவனுக்கே சமானாமாய்…..சற்று தொலைவில் இருந்த அனவரதனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். இப்பொழுது அனவரதன் மெல்ல அருகினில் போனார். அரணை விட அவர் சற்று உயரம் கம்மி. ஆக நிமிர்ந்து மருமகனை ஒரு கால் நொடி பார்வை, பின் தன் பார்வையை பேத்தியிடம் வைத்துக் கொண்டார்.

“ஹயாமா தாத்தாவ தெரியுதா…?” குழந்தை சட்டென முகம் திருப்பி அரண் கழுத்தை இரு கைகளாலும் கட்டிக்கொண்டு தகப்பன் தோளில் முகம் புதைத்தாள்.

அவ்வளவுதான் அனவரதன் முகம் வாடிப் போனது.

“அவ உங்கள பார்த்ததுல ரொம்ப எக்‌ஸைட் ஆகிட்டா அங்கிள்…..அப்பதான் இப்படி செய்வா…” மாமனரிடம் சொல்லியவன்

“ஹேய் பால்குட்டி சந்தோஷமான கடிக்காதன்னு சொல்லிருக்கேன்ல” மகள் முகத்தை தன் தோளிலிருந்து நிமிர்த்த முயன்றான். அவன் முகத்தில் தான் எத்தனை சுக ப்ராவகம். பெருமிதம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.