(Reading time: 22 - 43 minutes)

18. நேசம் நிறம் மாறுமா - தேவி

ச்சைக் குழந்தையடி – கண்ணிற் பாவை யடி சந்திரமதி.

இச்சைக் கினிய மது; -- என்றன்’ இருவிழிக்குத் தே நிலவு;

நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே – நல்ல நாகமணி யுள்ள தென்பார்;

துச்சப்படு நெஞ்சிலே-நின்றன் சோதி வளரு தடீ.

                                                                     பாரதியார்

Nesam niram maaruma

தி மட்டுமில்லாமல் எல்லோருமே ஆச்சரியம் அடைந்தனர். முதலில் சுதாரித்த ஆதி, தன் தந்தையிடம்,

“அப்பா, நீங்கள் சொல்வது புரியவில்லை. நம் நிறுவனம் நீங்கள் மூவரும் சேர்ந்து ஆரம்பிததுதானே. பின் எப்படி நம் இரண்டு குடும்பத்திற்கு மட்டும் பெரும் பங்கு வரும்?”

“அது உண்மைதான். நிறுவனத்தின் முதல் மூன்று பேரும் சரி பங்ககாகதான் போட்டோம். ஆனால் உன் மாமா வீட்டில் சில சொத்து தகராறு ஏற்பட்டதில் அவர் பங்கில் பாதியை பணமாக்கி தன் வீட்டிற்கு கொடுத்து விட்டார். மேலும் அப்போது அவருக்கு கொடுத்த பணத்தை ஈடுகட்ட நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் முதல் போட்டோம்.

அதே போல் நம் வீட்டிற்கும், சுந்தரம் வீட்டிற்கும் செலவு என்பது ஊரிலிருந்து வரும் பணம் தான். அதனால் நமக்கு உண்டான லாபத்தையும் தொழிலே போட்டோம். உன் வாசு மாமாவிற்கு எல்லா செலவும் இந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி மூலம்தான். அதனால் அவர் போட்ட முதல் மட்டும் தான். ஆனால் நானும், சுந்தரமும் லாபத்தை மூன்று பங்காக தான் பிரித்தோம். இது உன் அத்தைக்கு தெரிய வந்த சமயம் தான் அந்த சம்பவம் நடந்தது.”

தன் அம்மாவை நோக்கிய ஆதி, “அம்மா நான் வினுவிடம் எப்பொழுதுமே மிகவும் ஒட்டுதலாகத்தான் இருப்பேன். அது வரை அத்தை ஒன்றும் சொன்னதில்லையே. இந்த கம்பனி விஷயம் மட்டும் இதற்கு காரணம் என்று தோன்றவில்லை“ என்றான்.

ஜானகி “உன் அத்தைக்கு எப்போதுமே எங்கள் இருவரையும் பார்த்தால் சற்று கோபம் வரும். ஏன் என்றால் எங்கள் திருமணம் ஆகும் வரை பத்மா மட்டுமே இந்த வீட்டில் பெண் என்பதால் அனைவருக்கும் செல்லம். அத்தோடு எல்லோரும் பெண் பிள்ளை என்று நகையாகவோ, துணிமணியோ அவளுக்கு மட்டுமே அதிகம் வாங்குவர்.

எங்கள் திருமணத்தின் பின் எனக்கும் சேர்த்து வாங்கவே தன்னுடைய முக்கியத்துவம் குறைந்ததாக உணர்வாள். எனக்கும் வாசு அண்ணாவை விட சுந்தரம் அண்ணாவிடம் கொஞ்சம் பாசம் அதிகம். பெரிய காரணம் ஏதுமில்லை. அண்ணன் சற்று இலகுவாக பழகுவார். மேலும் நானும் மீனாட்சியும் ஒரே வயது என்பதால் இன்னும் கொஞ்சம் ஆழ்ந்த நட்பு உண்டு.

இது உன் அத்தைக்கு அப்போதே பிடிக்காது. இது ஆண்களுக்கும் தெரியும். ஆனால் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள். அந்த முறை ஊருக்கு வரும் போது எங்கள் இருவரின் பிறந்த வீட்டில் ஏதோ விஷேசத்திற்காக நகை வாங்கி கொடுத்தார்கள். அதை பார்த்து விட்டு உன் அப்பாவிடம் தனக்கும் கேட்ட போதுதான், அவர் தற்போது கையில் பணமாக இருந்தவற்றை எல்லாம் தொழில் போட்டதால் கொஞ்ச நாள் கழித்து வாங்கி தருவதாக சொல்லி விடவே, வாசு அண்ணனிடம் கேட்டிருக்கிறாள்.

You might also like - Manam koithaai Manohari... A family oriented romantic story!

அவர் ஏற்கனவே தன் குடும்பத்தாருக்கு பணம் கொடுத்ததில் இருக்கவே அவரும் மறுத்து விட்டார். இதை வைத்து எங்கள் இருவரிடமும் இரண்டு மூன்று நாட்கள் பேசாமல் இருந்தாள். நாங்களும் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.

அப்போது எனக்கும், மீனாட்சிக்கும் நீங்கள் இருவரும் ஒன்றாக சுற்றுவதை பார்த்து ஒரு எண்ணம். வளர்ந்த பின் உங்கள் இருவருக்கும் திருமணம் செய்யலாம் என்று. அன்று வரை மனதில் நினைத்திருந்தாலும் நானும் அவளும் அதை பற்றி பேசிக் கொண்டது கிடையாது. அந்த முறைதான் நான் என் எண்ணத்தை வெளிப்படையாக சொன்னேன். அதற்கு மீனாட்சியும் அதே எண்ணத்தில் இருப்பதாக சொல்லவும் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் இதை உன் அத்தை கேட்டிருக்கிறாள்.

அந்த முறை உன்னையும் மதியையும் பத்மா எதாவது சொல்லிக் கொண்டே இருந்தாள். சரி அவள் கோபத்தில் தான் அப்படி இருக்கிறாள். பின் சரியாகி விடுவாள் என்று எண்ணினோம். ஆனால் அதை மனதில் வைத்து உன்னை அடிப்பாள் என்று நினைக்கவில்லை.”

“சரி அம்மா. ஆனால் அன்று ஏன் நீங்கள் யாரும் எனக்கு சப்போர்ட் செய்ய வில்லை.” என்று ஆதி கேட்க,

“எங்கள் யாருக்கும் என்ன சொல்வது என்றே புரியவில்லை. அன்று வரை நம் வீட்டில் யாருமே பிள்ளைகளை அடித்ததில்லை. அதனால் அப்படியே நின்று விட்டோம். அதோடு அவள் பேசியதில் நானும் மீனாட்சியும் பேசியதை கேட்டிரூப்பாள் என்று தோன்றியது. விவரம் புரியாத வயதில் உங்கள் இருவருக்குள் அந்த எண்ணத்தை வளர்க்க விரும்ப வில்லை. ஏதாவது சொன்னால் அவள் அதை கிளறுவாள் என்று தோன்றியதால் பேசாமல் இருந்தோம். மதியும் பயந்து அழவே அவளை கவனிப்பதில் உன்னை விட்டு விட்டோம். நீ கொஞ்சம் அவளை விட பெரியவன் தானே. உனக்கு மெதுவாக எடுத்து சொல்லலாம் என்று எண்ணியிருந்தோம்.”

ஆதி மதியிடம் திரும்பி “அடி வாங்கியது நான். நீ ஏன் அன்றைக்கு அழுதாய்.?” என்று கேட்க,

மதியோ “என்னால்தான் நீங்கள் அடி வாங்கினீர்களோ என்று தோன்றியது. எனக்கும் சித்தி அந்த முறை என்னை வேண்டுமென்றே திட்டுவது போல் தோன்றியதால்  பயந்து அழுதேன்” என்றாள்

ஆதி மீனாட்சியை பார்த்து “அன்றைக்கு சரி .. மறுநாள் நீங்கள் யாரும் ஏன் என்னிடம் சொல்லாமல் ஊருக்கு சென்றீர்கள் அத்தை.? எனக்கு அது மிகவும் கஷ்டமாகிவிட்டது. நான் செய்தது தப்பு என்றால் என்னிடம் சொன்னால் நான் சரி செய்து கொள்வேனே. அந்த நம்பிக்கை கூட என் மேல் உங்களுக்கு இல்லையா ? “ என்று கேட்க,

அப்போது ராகவன் “ஏன் ஆதி அன்றைக்கு உனக்கும், சூர்யாவிற்கும் துணையாகதானே உன் அத்தையை விட்டு துக்கத்திற்கு சென்றோம். உன்னிடம் பத்மா சொல்லவில்லையா?”என்றார்.

“சொன்னார்கள். ஆனால் இவர்கள் எல்லோரும் என் மேல் உள்ள கோபத்தினால் தான் கிளம்பி விட்டார்கள் என்றும் சொன்னாரே?”

இப்பொழுது பெரியவர்கள் நால்வரும் திகைத்தனர். இந்த பேச்சு வார்த்தை முழுவதும் ஆதி, மதி அவர்கள் பெற்றோர்களிடையே மட்டுமே. மற்ற இளையவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.

ஜானகி ஆதியிடம் சற்று திகைப்பான குரலில் “நாங்கள் சென்றதே மதியின் தாத்தா இறந்ததற்கு தான் ஆதி. அன்று இரவு அந்த தகவல் வரவும், இவர்களை முதலில் அனுப்பி விட்டு, நாங்கள் காலையில் சென்றோம். நீ கோபத்தில் ரூமிற்கு சென்று விட்டதால் உன்னிடம் பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று தான் உன் அத்தையிடம் சொல்லி விட்டு சென்றோம்.”

இது ஆதிக்கு புதிய செய்தியே.. அவன் இத்தனை நாள் இப்படி ஒரு விஷயம் இருக்க கூடும் என்றே எண்ணவில்லை. தன்னை அவர்கள் நம்பவில்லை என்று மட்டுமே நினைத்து தான் தன்னை நம்பாதவர்கள் தனக்கு தேவையில்லை என்று எண்ணியிருந்தான்.

இப்போது ஆதி “இதை அத்தை சொல்லவில்லை அம்மா. மேலும் மீனாட்சி அத்தை தான் , ஆதி இப்படி இருந்தால் இவனை நம்பி எப்படி பெண் பிள்ளைகளை அனுப்புவது என்று உங்களோடு சண்டை போட்டதாகவும் கூறினார்கள். “ என்று கூறவும், இப்போது திகைப்பது பெரியவர்கள் முறை ஆயிற்று.

இதை கேட்ட மீனாட்சி “நான் எப்படி சொல்வேன் ஆதி இப்படி? நீ நான் வளர்த்த பிள்ளை. உன்னை அப்படி சொன்னால் அது என்னையே சொல்வதாகும்.” என்றார் வருத்ததோடு.

“சாரி அத்தை. எனக்கு இதெல்லாம் தெரியாது. எனக்கு எல்லாவற்றையும் விட நீங்கள் கூட அப்படி நினைத்தீர்களோ என்பதுதான் வேதனை.” என்றான். “அதோடு அந்த முறை நீங்கள் எங்கள் வீட்டிற்கும் வரவில்லையே?” என,

சுந்தரம் “துக்கத்தோடு வந்திருப்பதால் வேண்டாம் என்று எண்ணினோம். மேலும் அந்த முறை சற்று அதிக நாட்கள் லீவ் எடுத்தால் உடனே வேலையில் சென்று சேர வேண்டியிருந்தது.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.