(Reading time: 17 - 34 minutes)

யுக்தா மனம் வாடிவிட்டது... இவர்கள் வருவது தெரிந்தும்  அவன் போயிருக்கானா... அப்போ என் வரவை அவன் எதிர்பார்க்கவில்லையா...?? என்னை மறந்துவிட்டானா...??

"அப்படியா... பரவாயில்லை இருக்கட்டும்... இப்படித்தான் சின்சியரா வேலைப் பார்க்கனும்... ஏன் செந்தில்... பிருத்வி இப்போ உங்க கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி பொறுப்பை ஏத்துகிட்டான் இல்ல.."

"ஆமாம் மாதவன்... பிருத்வி தான் இப்போ அந்த கம்பெனியை பார்த்துக்கறான்... நான் ரொம்ப வேலை இருக்கும் போது கூட உதவியா இருக்கேன்..."

"ரொம்ப நல்லது... பிள்ளைங்க இப்படித்தான் பொறுப்பா இருக்கனும்..."

"என்ன சுஜா... பிருத்வி இல்லையேன்னு உனக்கு வருத்தமில்லையே...??? சுஜாதா மனது சங்கடப்படக் கூடாதே... என்ற கவலையே மதிக்கு அதிகமாக இருந்தது..

சுஜாதாவுக்கும் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது... ஆனால் அதை வெளிக்காட்டவில்லை... "இருக்கட்டும் மதி... ரொம்ப முக்கியமான வேலைன்னா போய் தானே ஆகனும்... இங்கத் தானே இருக்கப்போறோம் அப்பப் பார்த்துக்கலாம்.." என்று சமாதானமாக பேசினாள்.

ஆனால் சுஜாதாவை விட அதிக ஆவலோடு பிருத்வியை பார்க்க வந்த யுக்தாவின் நிலை இங்கு யாருக்கு தெரியும்... இந்த பன்னிரண்டு வருடத்தோடு இந்த ஒரு நாளையும் சேர்த்துக் கொள்ளலாம்... ஆனால் சென்னை வந்து இரண்டு நாளாகிவிட்டதே.... இன்றும் பார்க்க முடியலைன்னா எப்போது பார்ப்பது...

சின்ன வயதில் மாதவன் வந்து நியூயார்க் கூட்டி போக இருந்த இடைப்பட்ட காலங்களில் அவர்கள் வீட்டுக்கு கூட்டிட்டுப் போக நினைத்த போது... நியூயார்க் போற வரைக்கும் நான் பிருத்வி கூட இங்கத்தான் இருப்பேன் என்று அப்போது அடம்பிடித்தாள்... ஆனால் இன்று நான் பிருத்வியை பார்த்துவிட்டு தான் செல்வேன்... என்று அடம்பிடிக்க முடியுமா..???

இன்று அம்மாவுடன் வந்தது போல் அடுத்தமுறை தான் வரமுடியுமா...?? இரண்டு வருடம் இந்த வீட்டில் தான் இருந்தாள்... ஆனால் இந்த பன்னிரண்டு வருட இடைவெளியில்  அந்த அளவுக்கு உரிமை எடுத்துக் கொள்ள முடியுமா..?? என்ற குழப்பத்தோடே அவள் அங்கு தவித்துக் கொண்டிருந்தாள்.

காலை உணவுக்குப் பின் எல்லோரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்... பிறகு கிளம்பும் நேரம் வந்தது...

"என்னங்க நாம கிளம்பனும் இல்ல... கரெக்டா லன்ச்க்குப் போனா சரியா இருக்காதுங்க... கொஞ்சம் முன்னாடியே போனா தானே... அதனால கால் டாக்ஸிக்கு ஃபோன் பண்ணுங்க.... ரெண்டா புக் பண்ணுங்க... யுக்தாவை அனுப்பனும் இல்ல..."

"என்ன சுஜா... யுக்தா எங்கப் போகனும்... எதுக்கு ரெண்டு கார்.."

"இல்ல மதி... யுக்தா எங்கக் கூட வரப் போறதில்லை... அவளை வீட்டுக்கு அனுப்பிடலாம்ன்னு..."

"என்ன சுஜா... நேத்து தான் நியூயார்க்ல இருந்து வந்தீங்க... இன்னைக்கு இவளை தனியா அனுப்பனும்ன்னு சொல்ற... என்னத்தான் நீங்க இங்க இருந்து போனாலும் இப்போ யுக்தாவுக்கு இது புது ஊரில்லயா..."

"அதுல என்ன இருக்கு மதி... யுக்தா படிச்சவ தானே... அதில்லாம சேஃப் ஆன கால் டாக்ஸி சென்டர் எல்லாம் இருக்குன்னு கவி சொல்லியிருக்கா..."

"நீ சொல்றதெல்லாம் சரிதான்... ஆனா ரெண்டு நாளாவது ஆகனும் இல்ல அவ இங்க பழக... இப்போ காலம் கெட்டு கிடக்குது... அதான் சொல்றேன்... நீங்க போங்க அதுவரைக்கும்... யுக்தா இங்க இருக்கட்டும்..."

"அதில்லங்க மதி... நாங்க போகற இடம் வேற பக்கம் இருக்கு... திரும்ப இங்க வந்து கூட்டிகிட்டு போகனும்... டைம் தான் வேஸ்ட் ஆகும்.."

"என்ன மாதவன்...  நீங்க ஏன் திரும்ப வரனும்... நான் இருக்கேன் இல்ல.. வீட்ல கார் இருக்கு நானே கூட்டிட்டு வந்து விட்டுட்டு போறேன்.."

"இல்லண்ணா... உங்களுக்கு ஏன் கஷ்டம்... உங்களுக்கு ஏதாவது வேலை இருக்கும்..."

"என்ன சுஜா... யுக்தாவை கூட்டிட்டு வந்து விடுவதை தவிர முக்கியமான வேலை என்ன இருக்கு..."

"இல்லை செந்தில்... கார் எதுக்காவது யூஸ் ஆகலாம்... எதுக்கு உங்களுக்கு சிரமம்..."

"இல்ல மாதவன்... பிருத்வி பைக்ல தான் கம்பெனிக்கு போவான்... வீட்டு தேவைக்குத் தான் நாங்க கார் யூஸ் பண்றது... அதனால் ஒன்னும் பிரச்சினை இல்ல..."

"என்ன சுஜா... யுக்தாவை எங்கேயோ விட்டுட்டு போகற மாதிரி யோசிக்கிற... நான் அவளுக்கு அத்தை இல்லையா.."

"ச்சேச்சே... அப்படி இல்லை மதி.... சரி யுக்தா அப்புறமாகவே போகட்டும்" என்று சொன்னாலும் யுக்தா என்ன நினைக்கிறாளோ என்று அவள் முகத்தை பார்த்தாள் சுஜாதா.

அதை புரிந்து கொண்ட மதி "என்ன யுக்தா... நீ அப்புறமா மாமா கூட போறீயாமா.." என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.