(Reading time: 9 - 17 minutes)

ரெக்டா சொன்ன டைமுக்கு கிளம்புறது நம்ம தைஜூ தான்….” என சிதம்பரம் சொல்லிகூட முடிக்கவில்லை,

“நானும் வந்துட்டேன்ப்பா….” என்றபடி ஓடிவந்தாள் தைஜூ….

“இதோ… வந்துட்டாளே என் பொண்ணு…” என சிதம்பரம் சிரிக்க,

“ஆமாங்க… ஆல்வேஸ் லேட்….” என்றபடி வந்தார் காதம்பரி…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நீலாவின் "இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“அப்பா…. நீங்களுமா?....” என சிணுங்கியவள், “காதம்பரி… உன்னை வந்து பேசிக்கிறேன்… முதலில் என் அப்பாக்கு காபி போட்டு கொடு….” என்றவளின் காதை திருகிய காதம்பரி,

“உனக்கு அவ்வளவு அக்கறை இருந்தா நீயே போட்டுக்கொடுக்க வேண்டியது தான?.. அத விட்டுட்டு சும்மா என்னையே குறை சொல்லிட்டிருக்காத….” என சொல்ல,

“அய்யோ… அம்மா… விடு…. அப்பா… விடசொல்லுங்கப்பா….” என கெஞ்ச, போனால் சிதம்பரம் மனைவியை கெஞ்சலுடன் பார்க்க,

“இனி இப்படி வாய் பேசு… அப்புறம் இருக்கு உனக்கு…” என்றபடி அவளின் காதிலிருந்து கையை எடுக்க,

“நான் வெளியே போயிட்டு வந்துக்குறேன்… அப்புறம் இருக்கு உனக்கு…” என காதம்பரியிடமிருந்து சற்று விலகி நின்று கொண்டு தைஜூ சொல்ல,

“எனக்கு இருக்குறது இருக்கட்டும்… உனக்கு இப்போ என்ன நடக்கப்போகுதுன்னு பாரு…” என சொல்லி காதம்பரி சிரிக்கவும், புரியாமல் தாயைப் பார்த்தவள், அவரின் பார்வை செல்லும் திசையை கண்டதும் அவளுக்கு தொண்டை வறண்டு விட்டது…

கோப அக்கினியை அந்த குளிர்ந்த முகத்தினில் பூசிக்கொண்டு அதை அதிகம் வெளிப்படுத்தாமலும், இடை தொடும் கூந்தலை அலட்சியமாய் பின்னே எடுத்து போட்டபடி, கையில் வைத்திருந்த புத்தகத்தை இறுக்கி அணைத்தபடி, அதே நேரத்தில் தைஜூவை வைத்த கண் வாங்காமல் பார்த்த படி, நின்றிருந்தாள் சதி….

அவளின் பார்வைக்கான அர்த்தம் புரியாமல் இருக்க தைஜூ ஒன்றும் லூசு இல்லையே… தெரிந்து தான் இருந்தது தைஜூக்கு… இன்று சதியிடம் வாங்கிக்கட்ட போகிறோம் என்று… பின்னே எழுந்ததிலிருந்து அனைத்துமே லேட் தானே…

“ச………….தி………………..” என தைஜூ இழுத்ததுமே, சட்டென்று அங்கிருந்து நகர்ந்தாள் சதி…

“ஹேய்… நில்லுடி…” என தைஜூ கத்த, சதி கேட்டாள் இல்லை…

“எல்லாம் உன்னால தான் காதம்பரி….” என தனது அன்னையை முறைத்துக்கொண்டு “பை… அப்பா….” என சொல்லிக்கொண்டே செருப்பை மாட்டிக்கொண்டு கிட்டத்தட்ட சதியின் பின்னால் ஓடினாள் தைஜூ…

ஸ்கூட்டியை உதைத்த உதையிலிருந்தே தெரிந்தது தைஜூக்கு, சதி இன்று தன்னை கொல்லாமல் விட்டால் ஆச்சரியம் தான் என்று…

வேகமாக சென்று ஸ்கூட்டியின் பின் அமர்ந்து கொண்டு “சாரிடீ… சதி… கொஞ்சம் லேட் ஆகிடுச்சு…. ப்ளீஸ்டீ…. கோபம் வேண்டாமே….” என்றபடி சதியின் தோளின் மீது கைவைத்ததும் அவள் திரும்பி முறைத்த முறையில் வாய் மூடிக்கொண்டாள் தைஜூ…

அதிகமான வேகம் இல்லாவிட்டாலும் மிதமான வேகத்தில் ஸ்கூட்டி பறந்தது… நல்ல வேளை அதிகாலை நேரம் என்பதால் அதிகம் போக்குவரத்து நெரிசலோ, இடைஞ்சல்களோ இல்லை…

பத்து நிமிட இடைவெளியில், சதியின் ஸ்கூட்டி ஒரு அழகான பூங்காவின் முன் வந்து நின்றது…

அந்த இடைவெளியில் தூங்கி கொண்டிருந்த தைஜூ, பூங்கா வந்ததையும் கவனிக்காமல் இருக்க, சதி திரும்பி, இவள் இன்னும் இறங்கவில்லையா என்ற ரீதியில் பார்த்தபோது தான் புரிந்தது அவள் இருக்கும் நிலைமை…

உதட்டின் ஓரத்தில் சிரிப்பு வந்தாலும், அதை மறைத்துக்கொண்டு, அவளின் கையில் கிள்ள,

“ஸ்…………… ஆ……………..” என்றபடி விழித்தாள் தைஜூ…

பட்டென்று அவள் பதட்டத்துடன் இறங்க, ஸ்கூட்டியை லாக் செய்துவிட்டு, விருவிருவென்று உள்ளே சென்றாள் சதி…

பின்னாடியே, “ஹே…. சதி…. மெதுவா போடி… இரு நானும் வரேன்….” என்றபடி ஓட்டமும் நடையுமாக சென்றாள் தைஜூ….

வழக்கமாக அவர்கள் அமரும் இடத்தில் சென்று சதி அமர்ந்து கொண்டு புத்தகத்தை எடுக்க, அவளை தொடர்ந்து தைஜூவும் புக்கினை எடுத்து அமர்ந்தாள்…

புத்தகமும் கையுமாக இருந்த சதியை பார்த்தவள், எதுவும் பேசாமல் அமைதியாக தனது புத்தகத்தில் கண்களை பதிக்க முற்பட்டாள்… ஹ்ம்ம்… ஹூம்…. அது அவளால் முடிந்தால் தானே… தூக்கம் வேறு ஒருபக்கம் கண்ணை கட்டிக்கொண்டு வர, எப்படி இந்த தூக்கத்திலிருந்து வெளியே வர என யோசித்தவளுக்கு ஒரு வழி தோன்ற, அதையே செயல் படுத்த துவங்கினாள்…

“பாவி… கிராதகி… அந்த முறை முறைச்சீயேடி… பாரு… நல்லாப்பாரு…. இப்போ நீயே… சுத்தி…” என சொல்ல, சதி புத்தகத்திலிருந்து கண்களை எடுக்கவில்லை கொஞ்சமும்….

“கொன்னுடுவியோன்னு தாண்டி நினைச்சேன்… நல்ல வேளை இன்னும் பிளாங்கா தான் இருக்கு… அந்த மட்டும் தப்பிச்சேண்டா ஈஸ்வரா….” என கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு சொல்லிவிட்டு தன்னையே நொந்து கொண்டாள் தைஜூ…

பின்னே இப்போ சொன்ன வார்த்தைக்கு வேறு அவளிடம் முறைப்பை பெற வேண்டுமே… வார்த்தைகளால் திட்டிவிட்டால் கூட பரவாயில்லை… ஆனால் முறைக்க அல்லவா செய்வாள்… அங்கே தானே வினையே இருக்கிறது… கண்களால் எரித்தே பஸ்பமாக்கிவிடுவாள்…. என்றெண்ணிக்கொண்டு அவள் மனதினுள் புலம்ப, சதியின் இதழ்கள் மெல்ல விரிந்தன…

அவ்வளவாக கூட்டமில்லாத அந்த பூங்காவில் அந்த அதிகாலை நேரத்தில், ஏழு பேர் மட்டுமே இருந்தனர்…

அதிலும் 5 பேர் பெரியவர்கள்… மீதி இரண்டு பேர் வேறு யாருமில்லை, சதியும் தைஜூவும் தான்…

மனதினுள் புலம்பலோடு சதியை பார்த்தவள், சட்டென பார்வையை சுழற்றினாள்…

“அப்பாடா… இப்போதாண்டீ… நிம்மதியா இருக்கு… ஷ்…. அப்பா…” என மூச்சுவிட்ட தைஜூ, சதியிடம்,

“அதெப்படிடீ… கரெக்டா சிரிக்குற?...” எனக் கேட்க சதியிடம் பதில் இல்லை…

“ரைட்டுடீ…. யூ கண்டின்யூ… நானும் என் வேலையைப் பார்க்குறேன்…” என்றபடி புத்தகத்தில் கண்வைத்தபடி, திரும்பிக்கொள்ள,

பூங்காவின் முன்னே சற்று இடைவெளியில் இருந்த டீக்கடையிலிருந்து வந்த பாடலின் ஓசை சதியின் செவிகளில் விழ, மெல்ல விழிகளை உயர்த்தினாள் அவள்…

“இவன் யாரோ இவன் யாரோ

வந்தது எனக்காக…”

இந்த பாடல் வரிகள் அவள் செவிகளை எட்ட, அதே நேரம் அவள் இதழ்களும் குறுநகையில் அழகாய் விரிந்தது…

தொடரும்

Episode # 02

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.