(Reading time: 23 - 46 minutes)

காற்றினிலே வரும் கீதம்... - 14 - வத்ஸலா

'Katrinile varum geetham

ரண்டு மூன்று முறை திரும்ப திரும்ப படித்த பிறகே அந்த கடிதத்தில் இருந்த வார்த்தைகளின் பொருள் முழுவதுமாக புரிந்தது மற்றவர்களை விட்டு சற்று தள்ளி நின்றிருந்த ஸ்ரீதரனுக்கு.

உடனே எல்லா பெற்றவர்களுக்கும் வரும் அந்த வழக்கமான எண்ணமே வந்தது வேதாவின் அப்பாவுக்கு.

'என் பொண்ணுக்கு என்ன தெரியும்??? பாவம் அவ ஒரு குழந்தை. அவ மேலே எந்த தப்பும் இருக்காது. யார் கெடுத்தார்கள் அவள் மனதை???'

'என்னடி அப்படி பார்க்கறே? கோகுல் எப்பவுமே என் ஆளு தெரியுமா? நாங்க ரெண்டு பேரும் எவ்வளவு க்ளோஸ்ன்னு இந்த ஊருக்கே தெரியும். என்ன கோகுல்? அன்று கோகுலின் தோளில் கை போட்டுக்கொண்டு வேதா சொன்னது ஒரு முறை கண் முன்னே வந்து போனது அப்பாவுக்கு.

மனம் படபடத்து போனது அவருக்கு. 'என் பெண் பொய் சொல்ல மாட்டாள். அப்படி என்றால் இந்த கடிதத்தில் அவள் எழுதி வைத்திருப்பது உண்மை என்றால்... அவள் எங்கே சென்றிருக்கிறாள் என்று இந்த கோகுலுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்'

'அக்கா  டெல்லி போகலை...' கண்களில் நீர் பளபளக்க கோதை சொல்ல...

'சரி டெல்லி போகலை. மும்பை போயிருப்பா... இப்போ அதுவா முக்கியம்? அவ வரும்போது வரட்டும். நீ வா...' அவசரமாக இடையில் புகுந்தான் முரளி.  முரளியை பார்த்து இடம் வலமாக தலை அசைத்தாள் கோதை

'இல்ல... ப்ளீஸ்ண்ணா .... நான் எல்லாத்தையும்  சொல்லிடறேன்...'  

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

பின்னர் இரண்டு அன்னையரையும் பார்த்து சொன்னாள் அவள் 'அக்கா ஆத்தை விட்டு போயிட்டா... எங்கே போயிருக்கான்னு தெரியலை....' மெளனமாக இருவரும் கண்களை தாழ்த்திக்கொள்ள பாய்ந்தார் முரளியின் அப்பா...

'என்னது ஆத்தை விட்டு போயிட்டாளா???' அப்படின்னா ஓடிப்போயிட்டா இல்லையா???'  கடுமையான குரலில் கேட்டார் அவர். 'நினைச்சேன். ஆரம்பத்திலிருந்தே ஏதோ ஒண்ணு சரியில்லைன்னு தோணிண்டே இருந்தது.'

அவரது கோப பார்வை அவளது அப்பாவின் பக்கம் திரும்ப 'அப்போ இத்தனை நாழி இந்த விஷயத்தை நீங்க எல்லாரும் எங்களண்டை மறைச்சிருக்கேள் இல்லையா???' என்றார்.

அவரது பார்வையிலும் குரலிலும் கொஞ்சம் நடுங்கித்தான் போனாள் கோதை. அவளது அப்பா மெல்ல விழி நிமிர்த்த அதற்குள் பதறியபடி சொன்னாள் கோதை.

'இல்லை... அப்பாக்கு எதுவும் தெரியாது. அவர் ரெண்டு நாளா அவர் ஊரிலேயே இல்லை. இதை நான் அவரண்ட கூட சொல்லலை. தப்பு எல்லாம் என்னோடது தான்..'

'கோதை பொண்ணு...' தவிப்புடன்  அவள் அருகில் வந்தான் கோகுல்.  அவன் வாய் திறப்பதற்குள்  அவர் கோபம் உச்சிக்கு போய்விட...

'உன்னை ரொம்ப அப்பாவி பொண்ணுன்னு நினைச்சோம். என்ன தைரியம் இருக்கணும் நோக்கு??? எத்தனை திருட்டுத்தனம் நோக்கு??? பொய் சொல்லி இந்த கல்யாணத்தை நடத்திண்டுடலாம்ன்னு பார்த்தியோ???' எகிறினார் நந்தகோபாலன். யசோதா அவசரமாக அவர் அருகில் வர...

'பெரியப்பா...' கொஞ்சம் சத்தமாகவே எழுந்தது கோகுலின் குரல் 'அவ பாவம் பெரியப்பா அவளுக்கு ஒண்ணும் தெரியாது...' அவன் கரம் அவள் தோள் அணைத்தது.

'அப்பா...' அவனுடன் இணைந்துக்கொண்டான் முரளி. 'ஆமாம்பா தப்பு பண்ணது நாங்க தான். முதல்லே இந்த கல்யாணம் நடந்திடட்டும் அதுக்கு அப்புறம் நாங்க எல்லா உண்மையும் சொல்றோம்..'

உள்ளுக்குள்ளே கொதிப்பேறியது ஸ்ரீதரனுக்கு 'தப்பெல்லாம் இவர்களுடையது என்றால்???

'கல்யாணமா??? நன்னா இருக்கு. ஆரம்பமே பொய், பித்தலாட்டம், பூடகம், திருட்டுத்தனம்......... இவாளோட சம்மந்தம் பண்ணிக்க சொல்றியாடா??? நம்மாத்துக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு. நான் கிளம்பறேன்  ' என்றபடி வாசுதேவன் நகரப்போக  

'நேக்கு திருட்டுதனமெல்லாம் தெரியாது' மெல்ல எழுந்தது கோதையின் குரல். 'உங்க எல்லார்கிட்டேயும் பொய் சொல்லவும் தோணலை. அதனாலே தான் கல்யாணத்துக்கு முன்னாடியே உண்மையை சொல்லிட்டேன்' கரைந்து நடுங்கி கிடந்த அவளது குரலில் எல்லாருமே கொஞ்சம் அடங்கி போக......... அனைவரது பார்வையும் அவள் மீதிருக்க...

'ஆனா.... நேக்கு கோ... கோகுல்ன்னா ரொம்.... ரொம்ப பிடிக்கும்.. எங்க...எங்க.... ரெண்டு பேரையும் பிரிச்சிடுவேளா???.' அவன் மீதிருந்த நேசமும் தவிப்பும் குரலில் சேர்ந்திருக்க கேட்டாள் கோதை. சடக்கென அவள் பக்கம் திரும்பியவனின் அணைப்பு இன்னமும் இறுக... அவன் கண்களிலேயே கூட கொஞ்சம் நீர் கோடுகள் தோன்ற...

கோதையின் அப்பாவை தவிர மற்ற எல்லாருமே கொஞ்சம் நெகிழ்ந்துதான் போயிருந்தனர். அவளது கெஞ்சலில் இரண்டு தந்தையரிடமிருந்த கோபமும் கூட கொஞ்சம் கரைந்திருந்தது. தேவகிக்கும், யசோதைக்கும் உள்ளம் நிரம்பித்தான் போயிருந்தது.

'ப்ளீஸ்... சித்தப்பா..இந்த கல்யாணம் நடக்கட்டுமே .' என்றான் முரளி.

'உண்மையை சொன்ன இந்த அப்பாவி பெண்ணுக்கு தண்டனை கொடுப்பது எந்த வகையில் நியாயம்???' என்ற எண்ணம் தோன்ற கொஞ்சம் கோபம் தணிந்த பார்வையுடன் நிமிர்ந்தார் வாசுதேவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.