(Reading time: 23 - 46 minutes)

நேராக அவள் அப்பாவின் அருகில் சென்றான் முரளி ' சாயங்காலம் மூணு மணிக்குள்ளே உங்க பொண்ணு ஆத்துக்கு வந்திடுவா... கவலை படாதேள்... அவ வந்து அவ வாயாலே எல்லா உண்மையும் சொல்லுவா அப்புறம் நீங்க கோகுலை பத்தி புரிஞ்சுப்பேள்' சொல்லிவிட்டு நகரந்தான் அவன்.

அதன் பிறகு யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை... அவரவர்கள்  தங்கள் வீட்டுக்கு வந்து விட..

கோகுலின் வீட்டில்....

முகத்தில் எந்த வித சலனமும் இல்லாமல் கையில் இருக்கும் டம்பளரில் இருந்த காபியை ருசித்து பருகிக்கொண்டிருந்தான் முரளி...

'பாரு பாரு நான் இவ்வளவு கத்தறேனே கொஞ்சமானும் ஏதானும்  பேசறானான்னு  பாரு உன் பிள்ளை... ரசிச்சு ருசிச்சு காபி குடிச்சிண்டு இருக்கான்... நமக்கு எதிரா எவ்வளவு அழகா பிளான் பண்ணி இருக்கான் இவன்.... சாயங்காலம் நிச்சயதார்த்தம்ன்னு சொல்லி எத்தனை பேர் வரப்போறா தெரியுமா??? போயிடுத்து ஊரிலே நேக்கு இருந்த மானம் மரியாதையை எல்லாம் போயிடுத்து.. இதை கூட என்னாலே பொறுத்துக்க முடியறது.... அந்த ஸ்ரீதரன்... என்ன தைரியம் இருக்கணும்  அந்த மனுஷனுக்கு ....' கோபத்தின் உச்சியில் கொதித்துக்கொண்டிருந்தார் நந்தகோபால். முரளியின் தந்தை.

'அதான் நான் நெனெச்ச மாதிரி தான் எதுவுமே நடக்கலையே. கோதை தான் எல்லாத்தையும் மாத்தி பண்ணிட்டாளே??? கோகுல் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிட்டு வரும்போது கூட எல்லாரும் அங்கே பேசாம தானே இருந்தேள்??? இங்கே வந்து என்னத்துக்கு குதிச்சிண்டிருக்கேள்..' உதடுகள் வரை வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கிக்கொண்டு  மெல்ல விழி நிமிர்த்தி எல்லாரையும் பார்த்தான் முரளி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கிருத்திகாவின் "வசந்த காலம்" - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

சோபாவின் பின்னால் சாய்ந்து கண்களை மூடி இருந்தான் கோகுல். புது வேஷ்டியும், ஷர்ட்டும் முகத்தில் தாண்டவமாடும் கல்யாண களையுமாக அமர்ந்திருந்தான் அவன். நடந்த எல்லாவற்றையும் தாண்டி கோதையே அவன் மனதில் நிறைந்திருந்தாள். அவள் மீதான காதல் பல மடங்கு கூடி விட்டதை போன்றே தோன்றியது

'பொய், பேராசை, துரோகம்... இது போன்ற குணங்களின் சாயல்கள் கூட இல்லாத வெள்ளை மனம் அவளது. இப்படி பட்ட பெண்ணுடன் வாழ்வதற்காக எப்படி பட்ட அவமானத்தையும் சந்திக்கலாம் என்றே தோன்றியது அவனுக்கு. 

அவர் மனதில் என்ன இருக்கிறது என்று கண்டு பிடிக்கவே முடியாத ஒரு பாவத்துடன் அமர்ந்திருந்தார் வாசுதேவன். நியாயமாக இப்படி ஒரு சூழ்நிலையில் இரண்டு அன்னையரின் கண்களிலும் கண்ணீரே நிறைந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே கண்ணீர் இல்லை. மாறாக இருவர் மனமும் ஏனோ சலனமற்றே இருந்தன. அவர்கள் முகத்தில் நிறையவே தெளிவு. கோகுலின் அன்னையின் மனதின் ஓரத்தில் கோதையை பற்றி நினைக்க நினைக்க கொஞ்சம் சந்தோஷமும், பெருமையும்  கூட இருந்தன என்றே சொல்ல வேண்டும்.

கிட்டதட்ட ஒரு மணி நேரம் கடந்திருக்க அங்கே கோதையின் வீட்டில்....

அப்பாவின் கையில் அந்த கடிதம். அதையே மறுபடி மறுபடி படித்துக்கொண்டிருந்தார் அவர். அவர் முகத்தில் கோப தாண்டவம். அவள் பக்கம் கூட திரும்பவில்லை அவர்.. பெண்ணை பெற்ற தந்தைக்கு எழும் நியாயமான தவிப்பும், கோபமும் அவரிடத்தில்.

அப்பா ஆசை ஆசையாக வாங்கிக்கொடுத்த அந்த புது பட்டுப்புடவையும், காதில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த ஜிமிக்கிகளும், கூந்தலில் மணம் வீசிக்கொண்டிருந்த மல்லிகை சரமுமாக அப்பா அமர்ந்திருந்த நாற்காலியின் கீழே... அவர் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கோதை........

'அப்பா...' அவள் அழைக்க திரும்பவே இல்லை அவர்.

'நான் தப்பு செய்து விட்டேனா??? என் அப்பாவை ஏமாற்றி விட்டேனா??? தவிப்புடன் அவரையே பார்த்திருந்தாள் கோதை.

தான் எல்லாவற்றையும் அவரிடம் முன்னதாகவே சொல்லி இருந்தால் இந்த நிலை வந்திருக்காதோ என்னவோ???'

அந்த நேரத்தில் ஒலித்தது அவர்கள் வீட்டு தொலைப்பேசி. சில நாட்களுக்கு பிறகு அப்போதுதான் சரியாகி இருந்தது அது.

'ஹலோ என்றார் ஸ்ரீதரன்

நான் ராஜகோபாலன் பேசறேன்டா.... ரெண்டு நாளா நோக்கு ட்ரை பண்றேன் நான். எந்த போனும் கிடைக்கலையேடா என்றார் அவர். விக்கி நேற்று அவரை அந்த கெஸ்ட் ஹௌசின் அறையில் அடித்து போட்டு விட்டு போனபிறகு இரவுதான் நினைவு திரும்பி இருந்தது அவருக்கு. அங்கிருந்து எப்படியோ சமாளித்து வெளியே வந்தவரால் இப்போதுதான் இவர்கள் வீட்டு தொலைபேசியை தொடர்ப்பு கொள்ள முடிந்திருந்தது.

'உன் பொண்ணு வேதா பத்திரமா ஆத்துக்கு வந்துட்டாளாடா???

'வேதாவா? இன்னும் வரலையேடா... எங்கேடா பார்த்த அவளை???

'இங்கேதான்டா. நம்ம கோவில்ல... யாரோ ஒரு கிராதகன்கிட்டே மாட்டிண்டிருக்கா அவ. என்னையும் அடிச்சு போட்டுட்டு போயிட்டான்டா அவன். நேக்கு இப்போதான் உடம்பு கொஞ்சம் தேவலாம்... அவ எங்கே இருக்களோ தெரியலையே...' அவர் சொல்ல..

'பெருமாளே...' அவர் குரல் அலறலுடன் வெளிவந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.