(Reading time: 23 - 46 minutes)

தன் பிறகு வேதாவுக்கு நினைவு திரும்பவே மணி எட்டு ஆகி இருந்தது. மயங்கி இருந்த வேதாவை பற்றி சில தகவல்கள் தெரிந்துக்கொள்ள தான் மாயக்கண்ணன் காலையில் கோகுலை அழைத்ததே!!!!

சில நிமிடங்கள் நடந்த எல்லாவற்றையும் நினைத்தபடியே அப்படியே நின்றிருந்தாள் வேதா

'எத்தனை பெரிய முட்டாள்தனம் செய்திருக்கிறேன் நான்??? கண்களை திறந்து அப்பாவை பார்க்க கூட இயலவில்லை அவளால்.'

கோகுல் - கோதை திருமணம் நடக்காமல் போனது வரை எல்லாவற்றையும் அவளிடம் சொல்லிவிட்டிருந்தான் முரளி.

'என்னால் எத்தனை பேருக்கு எத்தனை வலிகள்??? எனது தங்கையின் வாழ்க்கையும் இப்போது கேள்விக்குறியா???' உடலும் உள்ளமும் நொறுங்கி போனது போன்றதொரு உணர்வுடன் அவள் நின்றிருக்க...

'அக்கா... அவள் அருகில் கேட்டது கோதையின் குரல். சடக்கென கண்களை திறந்தாள் அவள்.

'கோதை செல்லம்...' உடைந்தது அக்காவின் குரல்...

'அழாதேகா... அதான் நீ வந்துட்டியோன்னோ அது போறும்... நடந்ததை எல்லாம் மறந்திடு...'

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அனு.Rன் "நறுமீன் காதல்..." - காதல் கலந்த கவிதை தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

அடுத்து அருகில் வந்தார் அத்தை 'ஏண்டிமா... ஏண்டி மா நோக்கு இப்படி எல்லாம் புத்தி போறது... என் தங்கம்.. சரி பத்திரமா வந்துட்டியோன்னோ விடு...'

அடுத்து அப்பா!!! இருந்த இடத்தை விட்டு அசையாமல் அவர் அவளையே பார்த்திருக்க... அவர் கன்னங்களை கண்ணீர் தொட்டிருக்க... மெல்ல நிமிர்ந்தவள் அப்படியே ஓடி சென்று அவர் காலில் விழுந்து குலுங்க துவங்கினாள்!!!! அப்படியே அவர் காலடியில் நடந்தவை எல்லாவற்றையும் கொட்டி விட்டிருந்தாள் அவள்!!

அதே நேரத்தில்... தனது சொந்த ஊரின் அருகே இருந்த அந்த மருத்துவமனையில் படுக்கையில் கிடந்தான் சரவணன்.

அவனுடைய உறவினர்களிடம் சொல்லிகொண்டிருந்தார் அந்த மருத்துவர்

'இவர் வந்த கார் மேலே லாரி மோதி இருக்கு. கார் மொத்தமா நொறுங்கி போச்சு. இவருக்கு முதுகு தண்டுல பல இடங்கள்லே அடி பட்டிருக்க. இவ்வளவு தூரம் முயற்சி பண்ணி அவருக்கு நினைவு திரும்பி இருக்கு. ஆனா காலம் முழுக்க இவர் படுக்கையிலேயே தான் இருக்க வேண்டி இருக்கும்!!!'

அங்கே உள்ளே ஐ.சி.யூவில் அரை மயக்கத்தில் வலியில் முனங்கிகொண்டிருந்த சரவணனின் கண்களுக்குள் வேதா வந்து வந்து போய்க்கொண்டிருந்தாள். அவன் செய்த பாவங்கள் அவன் அருகில் நின்று சிரித்துக்கொண்டிருந்தன.

நேரம் மாலை நான்கை தொட்டிருந்தது. கோதையின் வீட்டில் அவரவர்கள் ஒவ்வொரு ஓரத்தில் அமர்ந்திருந்தனர்!!! நியாயமாக இன்று மாலை நிச்சியதார்த்தம் நடக்க வேண்டும். இப்போது இவர்கள் கிளம்பி இருக்க வேண்டும்!!!

கோகுல் குடும்பத்தினரும், ஏன் கோகுலுமே கூட இதனால் எத்தனை காயப்பட்டு போயிருக்கிறான் என்பது இவர்களுக்கெல்லாம் புரியாமல் இல்லை. பல்வேறு எண்ண அலைகள் மனதிற்குள் அடிக்க செய்வதறியாது அமர்ந்திருந்தனர் அனைவரும்,

'கையை விட்டா தானே கிளம்ப முடியும்...' கொஞ்ச நேரம் முன்னால் கோகுல் சொன்னது நினைவுக்கு வந்தது கோதைக்கு.

'அவர்தான் சொன்னார்ன்னா நீ ஏண்டி விட்ட கையை. இன்னும் சித்த நாழி பிடிச்சிண்டிருந்திருக்கலாமோன்னோ??? போகதேள்ன்னு சொல்லி இருக்கலாமோன்னோ???' கிளம்பி போயிட்டார் பார்.? போச்சு!!! எல்லாம் முடிஞ்சு போயிடுத்து!!! தனக்குள்ளேயே சொல்லிகொண்டிருந்தாள் கோதை.

தான் இப்படி எல்லாம் இருந்ததே இல்லை என்று தோன்றியது அவளுக்கு. நான் ஏன் இப்படி ஆகிப்போனேன்???

மனம் நிலைகொள்ள மறுத்தது. முன்பொரு நாள் நான் கோகுலை பற்றி நினைத்துக்கொண்டிருக்கும் போதே சரியாக  தொலைபேசியில் அழைத்தானே அதே போல் இன்றும் அழைப்பானோ???

அவள் நினைத்துக்கொண்டிருந்த போதே ஒலித்தது தொலைப்பேசி. கோகுல்தான்!!! கோகுலாகத்தான் இருக்கும். ஓடினாள் தொலைபேசியை நோக்கி....

'ஹலோ...'

மறுமுனையில்.... ஏதோ ஒரு வேறே குரல்.

'ராங் நம்பர்!!! தோற்றுப்போன பாவத்துடன் வந்து அமர்ந்தாள் கோதை.

முரளி!!!

முரளியை பற்றிய எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன வேதாவின் மனதில். சில மணி நேரங்கள் முன்புதானே அவள் அவனை நேரில் பார்த்தாள்!!! அப்போது மாயக்கண்ணனுடைய காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தாள் அவள்!!!

நியாயமாக அவன் நிலையில் இருக்கும் யாரும் இப்படி நடந்துக்கொண்டிருந்திருக்க மாட்டார்கள்!!! அவளை பார்த்த மாத்திரத்தில் பளீரென புன்னகைதான் அவன்.

'ஹாய்... வேதா...' வியந்து திகைத்துத்தான் போனாள் அவள். மாயக்கண்ணனுடன் பேசி விட்டு அவளை அழைத்துக்கொண்டு காரில் கிளம்பினான் அவன்.

அருகில் அமர்ந்து காரை செலுத்திக்கொண்டிருந்தவனின் முகத்தை பார்க்க கூட கூசியது தான் அவளுக்கு. தலை குனிந்தே அவள் அமர்ந்திருக்க...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.