(Reading time: 14 - 28 minutes)

ஸ்வேதா எழுப்ப தீபா மலங்க மலங்க முழித்தபடியே எழுந்தாள்.  எழுந்தவுடன் அவள் நேராகப் பார்த்தது, தன் முகத்திற்கு நேரே இருந்த ராம் மூஞ்சியைத்தான்.   தான் வேறு ஒரு கதாநாயகனுடன் டான்ஸ் ஆட எங்கிருந்து ராம் வந்தான் என்ற யோசைனையூடே பார்க்க, ஸ்வேதா அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து தெளிய வைத்தாள்.  முழுத்தெளிவிற்கு வந்த தீபாவிற்கு ஒரே ஷேம் ஷேமாக போய்விட்டது.  யார் முகத்தையும் பார்க்காமல் தன்னறைக்கு ஓடிவிட்டாள்.

“ஹலோ ராம்..... சீக்கிரமே வந்துட்டீங்க போல..... எத்தனை மணிக்கு கிளம்பனும்...... எங்க போறோம்.... ஏதானும் பிளான் வச்சுருக்கீங்களா....”

“ஒரு பத்து மணிக்கு கிளம்பலாம் ஹரி.  முதல்ல எம்ப்பயர் ஸ்டேட் பில்டிங் பார்த்துட்டு, அங்க பக்கத்துல லஞ்ச் சாபிட்டுட்டு மதியம் Statue of liberty பார்த்துட்டு வந்துடலாம்”

“ஹ்ம்ம் ஓகே.... நான் போய் குளிச்சுட்டு கிளம்பி வரேன். ஸ்வேதா நீயும், தீபாவும் அதுக்குள்ள ரெடி ஆகுங்க.  ராம் உங்களுக்கு இங்க போர் அடிக்குதுன்னா என்னோட அபார்ட்மெண்ட்க்கு வாங்களேன்”, என்று அழைக்க..... புருஷனும், பொண்டாட்டியும் கங்கணம் கட்டிட்டு என்னை சைட் அடிக்க விடாம பண்றாங்க என்று மனதிற்குள் கருவியபடியே ஹரியுடன் கிளம்பினான்.

“ஹரி Breakfast சாப்பிட இங்க வந்துடுங்கோ”,ஸ்வேதா சொல்ல தலையசைத்தபடியே விடைபெற்றான் ஹரி.

ராமும், ஹரியும் சென்ற பிறகு, ஸ்வேதா சென்று தீபா என்ன செய்கிறாள் என்று பார்க்க.... அவள் கப்பல் கவிழ்ந்ததைப் போல கன்னத்தில் கை வைத்தபடி சோகத்தில் ஆழ்ந்திருந்தாள்.

“என்ன ஆச்சு தீபா.... ஏன் இப்படி உக்கார்ந்து இருக்க.....”

“என்ன ஆச்சா.... என் மானமே போச்சு.  நான்தான் தூக்கக் கலக்கத்துல இருக்கேன்னு உனக்குத் தெரியும்.  அவன் இருக்கற சோஃபா பக்கம் போகும்போதே என்னைத் தெளிய வச்சிருக்கலாம் இல்லை....”, அழமாட்டாத குறையாக தீபா கேட்க.... ஸ்வேதாவிற்கு மறுபடி சிரிப்பு வந்தது.  ஸ்வேதாவின் சிரிப்பை பார்த்து முறைக்க ஆரம்பித்தாள் தீபா.

“சரி சரி..... நெற்றிக்கண்ணைத்  திறக்காத.  நீ அவன் மடில போய் படுப்பன்னு எனக்கு என்ன ஜோசியமாத் தெரியும்.   நான் ஏதோ அந்த சோஃபால உக்காரதான் போறன்னு நினைச்சேன்.  ஓகே விடு.  ராம் ஒண்ணும் நினைச்சுக்க மாட்டான்.  ரொம்ப டீசென்ட்டான  பையன்”, ஸ்வேதா தீபாவை சமாதானப்படுத்த ஒரு வழியாக, காலை உணவைத் தயாரிக்க ஆரம்பித்தார்கள்.

ஹரி வீட்டிலிருந்து ராமும், ஹரியும் வந்தவுடன் சிறிது நேரம் அவர்களைப் பார்க்க சங்கடப்பட்ட தீபா.... அவர்கள் இருவரும் அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல் நடந்து கொள்ள,  சகஜ நிலைக்குத் திரும்பினாள்.  பின்னர் அனைவரும் காலை உணவை உண்டு கிளம்பினார்கள்.

 ஹரி மறுபடி ஒரு முறை குளோபல் வார்மிங் பற்றி பேசி அனைவரும் ஒரே காரில் செல்லலாம் என்று கூறினான். தீபா ஹரிக்கு இனி அவள் தனிக்காரில் செல்லப்போவதே இல்லை, அப்படி ஒரு நிலை வந்தாலும், நடந்தே செல்வதாகக் கூறி,  தயவு செய்து இனியொரு முறை குளோபல் வார்மிங் பற்றி பாடம் எடுக்க வேண்டாம் என்று பெரிய கும்பிடாகப் போட்டாள்.  ஹரியும், ராமும் முன்னே அமர.... தீபாவும், ஸ்வேதாவும் பின்னால் அமர்ந்து கொள்ள ராமின் கார் எம்ப்பயர் ஸ்டேட் பில்டிங் நோக்கி நகர்ந்தது. 

அவர்கள் கிளம்பிய சிறிது நேரத்துலேயே ஹரியும், ராமும் வாடா, போடா என்று பேசுமளவிற்கு நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர்.  இருவருக்கும் கிரிக்கெட், பங்குச்சந்தை, ஜேம்ஸ்பாண்ட் படங்கள்  என்று நிறைய விஷயங்கள் ஒத்துப் போக வளவளவென்று பேசியபடியே வந்தார்கள்.  நடுநடுவில் தீபாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.  மறுபடியும் ஸ்வேதாதான் தனித்து விடப்பட்டாள்.  இதேதடா யார் வந்தாலும் தன்னைக் கண்டுகொள்ளாமல் இப்படி ஹரியோடே மொக்கை போடுகிறார்கள்... என்று நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டாள்.  ஆனால் சிறிது நேரம் சென்று ஸ்வேதா அமைதியாக வருவதை கவனித்த ஹரி அவளையும் தங்கள் பேச்சில் இணைத்துக் கொண்டான்.  ஒரு வழியாக அவர்கள் எம்ப்பயர் ஸ்டேட் பில்டிங்கை அடைந்து டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றார்கள்.  ஹரி டிக்கெட் வாங்கச் சென்ற நேரத்தில் ஸ்வேதா ராமை பிடி பிடியென்று பிடித்தாள்.

“ஏய் ராம்.... நான் என்ன சொல்லி வெளில போகலாம்ன்னு சொன்னேன்.  என் கூட க்ளோஸா பழகறா மாதிரி இரு... அப்போதான் ஹரிக்கு பொறாமை வரும்ன்னு சொன்னேன்..... ஆனா நீ என்ன பண்ற.... அவரோட கடலை போட்டுண்டு வர”

“இல்லை ஸ்வேதா இந்த ஹரி எத்தனை நல்லவரா இருக்கார் பாரேன்.  அவர் எவ்ளோ ஜீனியஸ் தெரியுமா.  எந்த ஆப் பத்திக் கேட்டாலும் விரல் நுனில வச்சிருக்கார்.  தெரியாத விஷயமே இல்லை. ஆனா எனக்குத்தான் எல்லாம் தெரியும்ன்னு கொஞ்சம் கூட கர்வமே இல்லை.   இப்படி ஒரு ஆள் எல்லாம் உனக்கு ஜாஸ்திதான்.  ஒழுங்கா அவருக்கு ஓகே சொல்லிட்டு சமாதானமாப் போய்டு”,   ஹரியின் பரம பக்தனாக மாறிவிட்டான் ராம்.  

“அடப்பாவி இப்படி காலை வாரறியே..... இன்னைக்கு ஒரு நாள் நடிச்சுடு ராம்.  இனி உன்னைத் தொல்லை பண்ண மாட்டேன்”, கெஞ்ச ஆரம்பித்தாள் ஸ்வேதா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.