(Reading time: 11 - 21 minutes)

" ரூபன் அத்தான் என்னைக் காதலிக்கிறாராமா?"

நூறாவது தடவையாக தனக்குள் கேட்டுக் கொண்டாள் அவள். அதற்கு எந்த மாதிரி தான் உணர வேண்டும் என்றேப் புரியவில்லை அவளுக்கு. தன்னோடு நின்று ரூபன் எப்போது புகைப் படம் எடுத்துக் கொண்டான் என்று அவளுக்கு நினைவு வரவில்லை. அதுகுறித்து அவளுடைய கவனம் இல்லாமல் இருந்தது பற்றி அவளுக்கு கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது.

"நீ இன்னும் சின்ன பாப்பா இல்லை, கவனமா இருக்கணும் என்ன?"

என்று அவ்வப்போது தாயும் , சகோதரனும் சொல்லும் அறிவுரைகள் அவள் காதில் வந்து ஒலித்துக் கொண்டிருந்தது . ஷைனி சொன்ன மாதிரி நாம இன்னும் அரை வேக்காடுதானோ? நமக்கு யாரிடம் எப்படி இருக்க வேண்டும் என்றே தெரியவில்லையோ? என்று தன் மேலேயே சுயபச்சாதாபமும், அவமானமுமாக உண்ர்ந்தாள்.

அவள் இருந்த மன நிலையில் ரூபனைப் பற்றி பெரிதாக எதையும் யோசிக்கத் தோன்றவில்லை. தனக்கு அறிவில்லை, புத்திசாலித் தனமில்லை என்று மனதில் மருகினாளே ஒழிய ரூபன் சொன்னவையெல்லாம் அவள் மனதில் பெரியதான ஒரு இடத்தைப் பிடிக்கவில்லை. அதற்காக அவள் காதல் என்னும் ஒன்றைப் பற்றி அறியாதவள் என்றும் சொல்லி விட முடியாது.

பள்ளியிலும், கல்லூரியிலும் அவளைச் சுற்றி நடப்பவைகளை அவள் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்.அவளுக்கு காதலைக் குறித்த அனுமானம் ஒன்று இருந்தது. வீட்டில் அன்பு கிடைக்கப் பெறாதவர்கள் தான் காதலில் விழுந்து விடுகிறார்கள் என்று ஒரு அரிய பெரிய விஷயத்தை கண்டுபிடித்து இருந்தாள்..

அவள் தோழி மலர்விழி வீட்டில் ஏகப் பட்ட பிரச்சினைகள். அவளுடைய பெற்றோருக்கு பிள்ளைகளிடம் அன்பு காட்டவே நேரமில்லை அவள் தன்னுடைய காதலனிடம் தான் தான் மனம் விட்டுப் பேச முடிகிறது என்றெல்லாம் சொல்லி இருக்கிறாள்.அப்போது கண்டுபிடித்த விஷயம் தான் அது.

நமக்கு அன்பு பாராட்ட , தலையிலேயே தூக்கி வைத்து கொண்டாட அப்பா இருக்கிறார். கண்டித்தாலும் கேட்பதற்கு முன்பே குறிப்பறிந்து வேண்டிய அனைத்தையும் கொண்டு வந்து கொட்டும் அண்ணன் இருக்கிறான். அதட்டி பேசி அறியாத அம்மா இருக்கிறார் நமக்கெல்லாம் காதல் என்ற ஒன்று வரவே வராது என்ற நம்பிக்கை அவளுக்கு ஏற்கெனவே வந்து விட்டிருந்தது. காதல் என்னும் ஒன்று அவளுக்கு தேவையில்லாதது என்ற எண்ணமும் கூட ஏற்கெனவே இருந்ததே.

ஆனாலும் நான் முட்டாள், எனக்கு அறிவில்லை என்பதான எண்ணங்கள் , அன்றைய நாள் தந்த அலுப்பும், பல்வேறு நிகழ்ச்சிகளின் தாக்கமும் அவளை இரண்டு மூன்று நாட்களுக்கு கடும் காய்ச்சலில் தள்ளி விட்டிருந்தது.

திருமணத்திற்கு அடுத்த நாளில் பெண் வீட்டிற்கு மறு வீடு சென்று விட்டு வந்த பின்னர் தன்னுடைய வெளிநாட்டு பயணத்திற்காக புறப்பட்டுக் கொண்டிருந்த ரூபன் மனதிற்கு நிம்மதியே இல்லாமல் போயிற்று. திருமணத்தன்று மதியம் அந்த போட்டோ எடுத்த கொஞ்ச நேரம் வரை தான் தான் அவளைப் பார்த்தது. அவன் ஆசையாய் எடுத்த அந்த போட்டோவும் அவனிடம் இல்லை. அவளையும் இரண்டு நாட்களாக பார்க்க முடியவில்லை. அவளுக்கு கடுமையான காய்ச்சல் என்று தகவல் தான் வந்தது.

சென்று சந்திக்கவும் விடாமல் அவனை வேலைப் பளு அழுத்தியது. தன்னுடைய பயணத்திற்கு தேவையான பல்வேறு தயாரிப்புக்களை செய்யவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது. முன் தினம் அவளைச் சந்தித்து விட்டு வந்த ஜீவனின் முகத்திலும் களையில்லை. அம்மாவிடம் ஏதோ கோபத்தில் சொல்லிக் கொண்டு இருந்தது புரிந்தது. ஏதோ நடந்திருக்கிறது. அது என்னவென்று தான் தெரியவில்லை. முன்பு போல இருந்தாலும் அவன் பகிர்ந்துக் கொண்டு இருந்திருப்பான். இவன் காதல் தெரிந்ததிலிருந்து கொஞ்சம் முறுக்கிக் கொண்டு தான் இருக்கிறான். அவன் எப்போது சொல்கிறானோ அப்போது சொல்லிக் கொள்ளட்டும் என்று எண்ணிக் கொண்டான் ரூபன்.

இரவு ஃப்ளைட் அதற்கு முன்னால் சென்று விடைப் பெறுவதற்காக அத்தை வீடு செல்ல வேண்டி புறப்பட்டான். இன்னும் இரண்டு வருடங்கள் எல்லோரையும் பிரிந்து இருக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தான். எல்லோரையும் விட அனியை பார்க்க முடியாமல் இருக போவது தான் அவனை மிகவும் வருத்தப் போகிறது என்று அவனுக்கு தோன்றியது. நல்ல வேளை ஜீவன் என் பெட்டியை சோதனைப் போடவில்லை. அவளுடைய கர்ச்சீப், துப்பட்டா முதலியன பத்திரமாக இருக்கிறது என்று ஒரு அல்ப சந்தோஷம் உண்டானது.

சாரா ரூபனை மகிழ்ச்சியாக வரவேற்றாள், அவனுடைய பயணம் வேலைக் குறித்து மிகவும் அக்கறையாக பேசிக் கொண்டிருந்தாள். பிரபாவும் உரையாடலில் கலந்துக் கொண்டாள். தாமஸை அவன் தேட அவர் அனியின் அறையில் இருப்பதாக சொல்லவும் அவன் அவரைச் சந்திக்க எழுந்தான். அனி தன்னுடைய அறையில் படுக்கையில் தலையணை முதுகிற்கு கொடுத்து சோர்வாக அமர்ந்து இருந்தாள். ஜீவன் ஏற்கெனவே அங்கு அவள் கட்டிலின் ஓரம் அவளைப் பார்த்து பேச வசதியாக எதிரில் உட்கார்ந்து அவளோடு ஏதோ பேசிக் கொண்டு இருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.